No menu items!

விண்ணை எட்டிய ஒரே இந்தியன்

விண்ணை எட்டிய ஒரே இந்தியன்

இந்தியாவின் சார்பில் விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியரான ராகேஷ் சர்மாவின் 74-வது பிறந்த நாள் இன்று.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் 1949-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி ராகேஷ் ஷர்மா பிறந்தார். பின்னர் இவரது குடும்பம் ஹைதராபாத்துக்கு குடிபெயர, அங்குள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் படித்துள்ளார். அதன்பின் தேசிய ராணுவப் பள்ளியில் சேர்ந்து படித்த இவர், 1970-ல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். இந்த நேரத்தில்தான் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

1984-ம் ஆண்டில் இந்தியாவின் சார்பில் ஒருவரை விண்வெளிக்கு கொண்டுசெல்ல ரஷ்ய அரசு சம்மதித்தது. அதற்காக சில வீரர்களை தேர்ந்தெடுத்து அனுப்பச் சொல்லியது. மத்திய அரசும் முதல் கட்டமாக அதிவேகமாகச் செல்லும் போர் விமானங்களை ஓட்டக்கூடிய 50 விமானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்தது. விமானிகளுக்கான இந்த பயிற்சி 1982-ம் ஆண்டில் தொடங்கியது.

பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் வைத்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 50 வீரர்களுக்கும் பலவிதமான சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமானதாக 24 மணி நேரமும் செயற்கை வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும் அறைக்குள் 3 நாட்கள் ஒவ்வொரு வீரரும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டனர்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் மனவலிமை மிக்கவர்களாக இருக்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இப்படி பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு அந்த 50 வீரர்களில் இருந்து ராகேஷ் ஷர்மா, ரவிஷ் மல்ஹோத்ரா ஆகிய 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் இருவரில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று சிபாரிசு செய்து அடுத்தகட்ட பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பிவைத்தது இந்திய அரசு.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 70 கிலோமீட்டர் தள்ளியுள்ள பயிற்சி மையத்தில் இந்தியாவின் இரு வீரர்களுக்கும் அடுத்தகட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக இந்த விண்வெளிப் பயணத்தில் உடன் செல்லும் மற்ற ரஷ்ய வீரர்களுடன் பேசுவதற்காக அந்நாட்டு மொழி கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ரஷ்ய மொழியை கற்றுக்கொள்வதற்காக மட்டும் ராகேஷ் ஷர்மாவும், அவரது நண்பரும் ஒவ்வொரு நாளும் 7 மணி நேரத்தை செலவழிக்க வேண்டியிருந்தது. இந்த பயிற்சிக்கு பிறகு, உணவு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சிகளின் இறுதியில் இருவரில் சிறப்பாக செயல்பட்ட ராகேஷ் ஷர்மா, இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி விண்ணில் பாய்ந்து சென்ற சோயுஸ் டி-11 (Soyuz T-11) ரா ராக்கெட்டில் யூரி மலிஷே, கென்னடி ஸ்டிரெகாலோவ் ஆகிய 2 சோவியத் விண்வெளி வீரர்களுடன் இணைந்து விண்வெளிக்கு பறந்து சென்றார் ராகேஷ் ஷர்மா. ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 7 நாட்கள் 21 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியுள்ளார் ராகேஷ் சர்மா. அவர் விண்வெளியில் தங்கியிருந்த அத்தனை மணித்துளிகளும், இந்தியர்களுக்கு பெரும் கொண்டாட்டமாய் அமைந்ததை மறக்க முடியாது.

இந்த விண்வெளிப் பயணத்தைப் பற்றி நினைவுகூறும் ராகேஷ் ஷர்மா, “விண்வெளிக்குச் செல்வதற்கான பயிற்சியின்போது அது சவால் மிகுந்ததாக இருக்கும் என்று என்னிடம் பலரும் கூறியிருந்தனர். ஆனால் எனக்கு அத்தனை கடினமாக இருக்கவில்லை” என்கிறார்.

இந்த விண்வெளிப் பயணத்தின்போது தனது குடும்பத்தினருடனும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடனும் காணொலியில் பேசியுள்ளார் ராகேஷ் ஷர்மா. அப்போது இந்திரா காந்தி, “விண்ணில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருக்கிறது?” என்று ராகேஷ் ஷர்மாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ராகேஷ் ஷர்மா ”மற்ற நாடுகளை விட மிகவும் அழகாக இருக்கிறது” என்று கூறியது பற்றித்தான் இந்தியாவில் அப்போது பலரும் பேசிக்கொண்டனர்.

இதுபற்றி கூறும் ராகேஷ் ஷர்மா, “நான் அன்றைய தினம் பிரதமரிடம் இந்த வார்த்தைகளை அலங்கரத்துக்காக சொல்லவில்லை. நிஜமாகவே இந்தியாவின் புவியியல் அமைப்பானது மற்ற நாடுகளை விடவும் மிக அழகாக இருந்தது. 3 புறமும் கடல்கள், பசுமையான வயல்வெளிகள், நீண்ட ஆற்றுப்படுகைகள், பனிமலைகள் என்று இந்தியாவில் இல்லாத விஷயங்களே இல்லை” என்கிறார்.

முதல் இந்தியனாக விண்வெளிக்கு சென்ற ராகேஷ் ஷர்மாவுக்கு மீண்டும் ஒருமுறை விண்வெளிக்கு செல்லும் கனவு இருக்கிறது. இதுபற்றி கூறும் அவர், “முதல் முறை சென்றபோது பல்வேறு பணிகளைச் செய்யவேண்டி இருந்ததால் விண்வெளியை முழுமையாக ரசிக்க முடியவில்லை. அதனால் அடுத்த முறை ஒரு சுற்றுலா பயணியாக நிலவுக்கு செல்ல விரும்புகிறேன்” என்கிறார்.

விண்வெளிக்கு சென்ற இந்தியாவின் முதல் நபர், உலகின் 128-வது நபர் என்ற பெருமைகளைக் கொண்டுள்ள ராகேஷ் ஷர்மா. அசோக் சக்ரா, ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...