No menu items!

மீண்டும் சேது சமுத்திரத் திட்டம்: பாஜகவின் மனமாற்றம்?

மீண்டும் சேது சமுத்திரத் திட்டம்: பாஜகவின் மனமாற்றம்?

சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.

இந்த திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனிநபர் தீர்மானம், காரசாரமான விவாதங்களுக்குப் பின்னர், அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டம் என்பது என்ன? அதற்கு ஏன் இத்தனை ஆதரவும் எதிர்ப்பும்? இனி என்ன நடக்கும்? இதையெல்லாம் பார்க்கும் முன் சின்ன பிளாஷ்பேக்…

திட்டம் கடந்து வந்த பாதை

இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் இடையிலான கடல் பகுதியில் உள்ளது பாக்கு நீரிணை. இப்பகுதியில் கப்பல்கள் சென்றால் தரை தட்டும். அந்தளவு ஆழமற்ற பகுதி. இதனால், இந்தியாவின் மேற்கு பக்க துறைமுகங்களில் இருந்து கிழக்கு பக்க துறைமுகங்களுக்கு வரவேண்டிய கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வருகின்றன. இதனால் எரிபொருள் அதிக செலவாவதுடன், நேர விரயம் வேறு.

எனவே, இந்த ஆழமற்ற பகுதியைத் தோண்டி, பெரிய கப்பல்கள் செல்ல வழி செய்வதன் மூலம் இந்தியாவின் கிழக்கு – மேற்குக் கடற்கரை துறைமுகங்களை இணைக்கும் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு வருவதற்கான தூரம் 755 கடல் மைல்களில் இருந்து 402 கடல் மைல்களாகக் குறையும். பயண நேரத்தில் 36 மணிநேரம் குறையும் என்பதோடு, எரிபொருள் செலவும் வெகுவாகக் குறையும்.

‘தமிழ்நாட்டின் நீண்ட காலக் கனவுகளில் ஒன்று; அண்ணாவின் கனவு திட்டம்’ என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டது.

பிரிட்டன் புவியியலாளர் மேஜர் ஜேம்ஸ் ரன்னெல் என்பவர் 1760களில் இலங்கையின் திருகோணமலையில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது இலங்கைக்கும் இந்தியாவின் தென் பகுதிக்கும் இடையில் கடல் பகுதியில் இருந்த மணல் திட்டுகளைக் கவனித்தார். அது பற்றி ஆய்வு செய்து, இந்த இடத்தில் கடலுக்குள் தோண்டி கால்வாய் அமைப்பதன் மூலம் கப்பல்களைச் செலுத்த முடியுமென பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து, 1838இல் கடலுக்குள் கால்வாய் தோண்டும் வேலையை பிரிட்டீஷ் அரசாங்கம் தொடங்கியது. ஆனால், வேலை முடிந்த பின்னர் பார்த்தால் அந்தக் கால்வாய் வழியாக சிறிய கப்பல்கள் செல்ல முடிந்ததே தவிர, பெரிய கப்பல்கள் செல்ல முடியவில்லை. அதாவது, இன்னும் ஆழமாக தோண்ட வேண்டும் என்றானது. என்றாலும் நீண்ட காலம் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமல், அந்நிலையை தொடர்ந்தது.

அதன்பின்னர் 1860இல், கடல் வழிகளில் ஆர்வம் கொண்ட கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியக் கடற்படையில் பணியாற்றிய கமாண்டர் ஆல்ஃப்ரட் டன்டாஸ் டெய்லர் என்பவர், கால்வாய் தோண்டும் திட்டத்தை முன்வைத்தார். ஆனால், பெரிய திட்ட செலவு பிரிட்டிஷ் அரசு அதை பரிசீலிக்கவில்லை.

அதன்பிறகு,

1861இல் டவுன்ஷென்ட் என்பவர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார். ஆனால், திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

1862இல் ஒரு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டு திட்டம் குறித்து ஆராயுமாறு உத்தரவிடப்பட்டது. அந்தக் குழு பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டது.

1863இல் பாம்பனுக்கு விஜயம் செய்த அன்றைய சென்னை மாகாணத்தின் பொறுப்பு ஆளுநர் சர் வில்லியம் டானிசன் பரிந்துரைத்ததும் செயல்படுத்தப்படவில்லை.

1871இல் ஸ்டோர்ட் என்பவர் ஒரு திட்டத்தை முன்வைத்தார். ஒன்றும் நடக்கவில்லை.

1872 மார்ச்சில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சர் எல்ஃபின்ஸ்டைன் இந்திய அரசின் செயலருக்கு எழுதிய கடிதம் விளைவாக, பொறியாளரான சர் ஜான் கோட் பாம்பனுக்கு செய்து ஒரு திட்டத்தை முன்வைத்தார். அவர் திட்டத்தை அப்போதைய சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை.

1902இல் சவுத் இந்தியன் ரயில்வே கம்பனி என்ற நிறுவனம் இந்தத் திட்டத்தைத் தனது பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்தது. ஆனாலும் திட்டம் மேற்கொண்டு நகரவில்லை.

1922இல் இந்திய அரசின் துறைமுகப் பொறியாளரான சர் ராபர்ட் பிரிஸ்டோ இந்தத் திட்டத்தை ஆய்வு செய்தார். நிதிப் பிரச்சினையால் அவரது யோசனையும் மேற்கொண்டு நகரவில்லை.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன்பின்னர் சுதந்திர இந்திய அரசும் இந்த திட்டத்தில் ஆர்வம் செலுத்தியது.

1955இல் சர் ராமசாமி முதலியார் தலைமையில் சேது சமுத்திரத் திட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் யோசனை அந்தளவிலேயே நின்றது.

1964இல் அன்றைய கப்பல் போக்குவரத்துத் துறை செயலர் நாகேந்திர சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. மண்டபத்தில் கால்வாயை வெட்டுவதற்குப் பதிலாக தங்கச்சி மடம் பகுதியில் கால்வாயை அமைக்கலாம் என்றது இந்தக் குழு.

1967இல் தமிழ்நாட்டில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது. அண்ணாவின் கனவு திட்டமாக சேது சமுத்திர திட்டம் மாறியது. மீண்டும் இந்தத் திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

1981இல் துறைமுகங்களின் வளர்ச்சி ஆலோசகராக இருந்த எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தக் குழு 1983இல் அன்றைய மதிப்பில் இந்தத் திட்டத்திற்கு 282 கோடி ரூபாய் ஆகுமென தெரிவித்தது.

திமுக அங்கம் வகித்த, வாஜ்பாய் பிரதமராக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி காலத்தில், 2000-2001ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் குறித்து புதிதாக ஆய்வு நடத்த 4.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2004இல் திமுக இடம்பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஆய்வுகள் துரிதப்படுத்தப்பட்டது. 2005ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சென்னை துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம், பாரதீப் துறைமுகம், விசாகப்பட்டின துறைமுகம் ஆகியவை முதலீடு செய்தன. முதலீடுகளைப் பெற்று, திட்டத்தைச் செயல்படுத்த சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிட்டட் என்ற சிறுப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக ஆடம் பாலம் பகுதியில் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. 2009ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி எல்லா இடங்களிலுமே தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.

2008இல், திட்டத்தின் அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி டாடா எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட்டின் இயக்குநர் ஜெனரலாக இருந்த ராஜேந்திர கே. பசௌரியின் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது.  இந்தத் திட்டம் சூழலியல் ரீதியிலோ, நிதி ரீதியிலோ சரியான திட்டமல்ல எனத் தனது ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்தது பசௌரி குழு.

2013இல் பசௌரி குழுவின் அறிக்கையைப் புறக்கணித்துவிட்டு திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், வழக்கில் தீர்ப்பு வராததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

எதிர்ப்பும் ஆதரவும்

சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் அப்பகுதியின் இயற்கை அமைப்பு பாதிக்கப்பட்டு சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கருத்து. ஆனால், வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட ‘நீரி’ அமைப்பு, இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும் என்று கூறியது.

மேலும், ‘இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் அகலம் 25 கி.மீமுதல் 107 கி.மீ வரையுள்ளது. இதில் சேதுக் கால்வாய் அமையப்போவது 300 மீட்டர் அகலத்தில் மட்டுமே , அவ்வளவு பெரிய பரப்பில் இது மிக சிறிய அகலமே. 12.8 மீட்டர் ஆழம் வெட்டுவார்கள். இதில் சரசரியாக 8 முதல் 10 மீட்டர் ஆழம் கடலில் உள்ளது., எனவே, மேற்கொண்டு வெட்டும் ஆழமும் அதற்கு ஏற்றார் போல குறையும். இதனால், கடல் அடியில் மிகப்பெரிய பாதிப்பு வராது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாக் நீரிணையில் உள்ள மணல் திட்டு ராமர் அமைத்த பாலம்; அதை இடிக்கக் கூடாது என்பது இந்து மதத்தைச் சேர்ந்த சேது கால்வாய் எதிர்ப்பாளர்களின் கருத்து. இதனால், சேது கால்வாயை புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளதும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், சமீபத்தில், பாக் நீரிணை பகுதியில் உள்ள நிலப்பகுதி மனிதர்களால் கட்டப்பட்டதா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லையென மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்தே, மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கான கோரிக்கையை தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது.

பாஜக ஆதரவு

சேது சமுத்திர திட்டம் தொடர்பான் தனித் தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன் சிங்கால் 2004ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது  “இராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் தடுக்க முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்” என்று பேசினார்.

இதையடுத்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “சேது சமுத்திரத் திட்டம் வருமானால் எங்களைப் போன்ற தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை விட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இல்லை. ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

பாஜக ஆதரவு எம்.பி. வாசன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய கடல்வழி போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக, பாதுகாப்பானதாக அமையும். எனவே, மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தினை தொடர்வதற்கும் முடிப்பதற்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற முறையிலும், தமாகா சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், சேது சமுத்திர திட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை பாஜக கட்சி மாற்றிக்கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியோ, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதனால் தமிழ்நாடும் இந்தியாவும் பலனடைந்தால் மகிழ்ச்சிதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...