இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அனைவரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஆறு பேர் விடுதலையுடன் மாநில ஆளுநரின் அதிகார எல்லை குறித்தும் இந்த தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் மீண்டும் வரையறை செய்துள்ளனர். அந்த வகையில் இந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த இரட்டை வெற்றி.
எப்படி?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் தங்கள் தண்டனை காலம் முடிந்தும் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்கள். இந்நிலையில், கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து பேரறிவாளன் தீர்ப்பையே அடிப்படையாக வைத்து தங்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு, நளினி, ரவிச்சந்திரன் இருவரையும் மட்டுமல்லாமல் 6 பேரையும் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது.
மனுதாரர்களான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் நன்னடத்தையை வெளிப்படுத்தியிருப்பதையும், இவர்கள் மிக நீண்ட காலம் சிறையில் இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். “நளினி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். சிறையில் அவரது நடத்தை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. கணினி பயன்பாட்டில் அவர் பிஜி டிப்ளமா முடித்துள்ளார். ரவிச்சந்திரனின் சிறை நடத்தையும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. சிறையில் அவர் பி.ஜி. டிப்ளமா உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைத் தொடர்ந்தார். பல்வேறு அறப் பணிகளுக்கு அவர் நிதி திரட்டியுள்ளார்,” என்று நீதிபதிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பினால் நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் விடுதலை பெற இருக்கிறார்கள். இவர்களில் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்த ஆறு பேரும் ‘வேறு எந்த வழக்கிலாவது சிறையில் இருப்பது தேவை இருந்தால் ஒழிய இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சட்ட நடைமுறைகளை அடுத்து இன்று மாலை அல்லது நாளை காலை ஆறு பேரும் விடுதலை செய்யப்படலாம்.
முன்னதாக, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. அதன்மீது முடிவெடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்தி வந்தார். அப்படி காலம் தாழ்த்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில், தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை கடந்த மே விடுதலை செய்தது. தற்போதும் அதே அடிப்படையிலேயே மீதமுள்ள இந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“இன்று இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனையடுத்து, “மத்திய அரசு வழக்கறிஞர் எங்கே?” என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடையவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததையும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டார்கள்.
மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத்தான் உச்சநீதிமன்றம் பேரறிவளான் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டார்கள்.
இதையடுத்து பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மாநில அரசாங்கத்துக்கு உள்ள கட்டுபாடற்ற அதிகாரத்தையும், மாநில அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநரோ மத்திய அரசோ கட்டுப்படுத்த முடியாது என்பதையும் இந்த தீர்ப்பு மூலம் உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது” என்று பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் பிரபு சுட்டிக்காட்டுவது போல் இந்த தீர்ப்பு ஆறு பேர் விடுதலை மட்டுமல்லாமல் மாநில அரசின் அதிகாரம் பற்றிய முக்கிய தீர்ப்பாகவும் அமைந்துள்ளது.
பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்றம் சில முக்கியமான விஷயங்களை தெரிவித்திருந்தது. “பேரறிவாளனை விடுதலை செய்ய உரிய பரிசீலனைக்குப் பின் மாநில அரசு முடிவு செய்தது. மாநில அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் ஏற்று இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் இதை ஏற்காமல் இருந்தார். அவர் 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அரசியல் சாசனத்தின் 161ஆவது பிரிவு மாநில அரசுக்கான சிறப்புரிமையை கொண்டது; ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டவர்; மீறி நடப்பது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. ஆளுநர் செய்த தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. இதனால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
அந்த தீர்ப்பை தெரிவித்துள்ளதை அடிப்படையாக கொண்டே இன்று ஆறு பேரையும் விடுதலை செய்துள்ளது. மாநில ஆளுநரின் அதிகார எல்லை குறித்து பல்வேறு வழக்கு விசாரணைகளிலும் தீர்ப்புகளிலும் மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வந்துள்ளது. இப்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளது.