No menu items!

கத்தார்: வெளிநாட்டு இளைஞர்களால் நிறைந்த நாடு!

கத்தார்: வெளிநாட்டு இளைஞர்களால் நிறைந்த நாடு!

நோயல் நடேசன்

வளைகுடா நாடுகளுக்கு, ரமலான் நோன்பு காலத்தில் போன அனுபவம் உங்களுக்கு உண்டா? அங்கே மதிய உணவுக்காக அலைந்த அனுபவம் ஏதாவது? குடிநீரை, சிறுவயதில் கள்ளுக் குடித்தது போல், மறைத்து கடதாசிப் பையில் ஒழித்து வைத்துக் குடித்த அனுபவம் உள்ளதா?

இதை இந்த முறை நான் அனுபவித்தேன்.

முந்திப் பிந்தி உணவுண்டாலும் மூன்று நேர உணவு என்பது இதுவரை காலமும் என் வாழ்வின் ஒரு அம்சமாய் இருந்தது. இலங்கையில் இந்துக் கல்லுரி விடுதி, பேராதனை பல்கலைக்கழகம் என மாணவ வயதிலும் பின்பு மதவாச்சி, சென்னை என எனது இளம் வயதிலும் இந்த பழக்கத்திற்குத் தடை வரவில்லை. வேலை செய்யும்போது கூட பசித்த உடனே உண்டுவிடுவேன். பசி வந்தபின் தாமதித்தால் தலைவலி தொடங்கிவிடும் என்பது ஒரு காரணமாக இருந்தது. பிற்காலத்தில் எனது பேச்சைப் பார்த்தே “பசிக்கிறதுபோல” என என்னை சாப்பிட எனது நர்சுகள் அனுப்பிவிடுவார்கள்.

பொது மக்களோடு வேலை. கால் நூற்றாண்டுகளாகச் சொந்தமான வேலை என்பதால், முகம் கோணாது ஒவ்வொருத்தருடன் பேசி அவர்களது நாய், பூனையைப் பார்க்க வேண்டும். மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களும் எங்கள் மனநிலைகளைத் தெரிந்துகொள்ளும். நாய்களும் குதிரைகளும் இதில் சிறப்பானவை. இலங்கை, இந்தியாவில் அரச வேலைகளில் எரிந்து விழுவதுபோல் இங்கு செய்யமுடியாது.

தினமும் பட்டினியற்று உணவுண்பது ஒரு விதத்தில் அதிர்ஷ்டமாக இருக்கவேண்டும். அதை விட உபவாசம் உடலுக்கு நல்லது என்று மருத்துவரான மனைவி சொல்வதையோ, அடுத்த பிறப்பில் உபவாசத்தால் ஆண்டவனை அடையலாம் என்பதையோ நான் நம்பத் தயாரில்லை!

பசியும் காமமும் தனியுடமை. அவனுக்கோ அவளுக்கோ மட்டுமல்ல சிறிய பெரிய… ஏன், எல்லா உயிர்களுக்கும் உரியது.

சரி, கத்தாருக்கு வருவோம்…

இந்த வருடம் மே மாதத்தில் கத்தார் தலைநகரான தோகாவில் நிற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தெருவில் நின்று பார்த்தபோது ஆண்கள் மட்டும் வாழும் நாடாக கத்தார் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்கள் 73 வீதம். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளமையானவர்கள்.

அதைப் பற்றிக் கேட்டபோது, இங்கு வருபவர்கள் வயதானதுடன் தங்கள் ஊருக்குப் போய் விட வேண்டுமென்பது நாட்டின் சட்டம். சுமார் 25 லட்சம் மக்களில், கத்தார் மக்கள் 15 வீதமாக இருக்கலாம். மற்றவர்கள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் இருந்து வேலைக்காகவும் வியாபாரத்துக்காகவும் வருபவர்கள். ஏராளமான உல்லாசப் பயணிகளும் இங்கு வருகிறார்கள்.

நாங்கள் போன நேரம் ரமலான் காலமானதால் அதிகமானவர்களை பகல் நேரத்தில் வீதிகளில் காணமுடியவில்லை. இதனால் அமைதியாக இடங்களை எங்களால் பார்க்க முடிந்தது.

தோகாவில் நான் பார்த்த இடங்களை விடச் சந்தித்தவர்கள், என்னோடு பேசியவர்கள், ஒவ்வொரு கதையையும் தங்களுக்குள் காவித்திரிபவர்கள் என்பதால் முக்கியமானவர்களாகிறார்கள்.

தோகா சென்று விமானத்தில் இறங்கியதும் எம்மிடம் மருத்துவ காப்புறுதி உள்ளதா எனக்கேட்டபோது அக்கேள்வி எமக்கு வியப்பாக இருந்தது. இதுவரை எந்த விமான நிலையத்திலும் கேட்காத கேள்வி அது! அதைக் காட்டியதும்தான் உள்ளே அனுமதித்தார்கள்.

எங்கள் வயது காரணமோ என நினைத்தபடி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஏற்கனவே ஒழுங்கு செய்தபடி ஒரு இளம் பெண் ஒருவர் எங்களை பென்ஸ் டாக்சியில் ஏற்றிவிட்டார்.

சாரதி இந்திய இளைஞன் என்பதால் அவனிடம் பேச்சுக் கொடுத்தோம். தான் கேரளத்தில் காசர்கோட்டையை சேர்ந்தவன் என்றும் மூன்று வருடமாக இங்கு டாக்சி ஓட்டுவதாகவும் சொன்னான்.

“என்ன படித்திருக்கிறாய்?”

“எலக்ரிக்கல் என்ஜினியரிங்.”

“மகிழ்ச்சியாக இருக்கிறாயா?”

“ஆம், எனக்கு கார் ஓட்டுவது விருப்பம். இங்கு நல்ல சம்பளம்” என்றான்.

எங்கள் ஹோட்டல் காலை ஆகாரம் சிறப்பானது. அங்கு கிட்டத்தட்ட 25 இலங்கை இளைஞர்கள் வேலை செய்தார்கள். பெரும்பாலானவர்கள் ‘அரகல’ எனும் மக்கள் புரட்சியின் பின் தப்பியோடியவர்கள். ”பல காலத்தின் பின் இலங்கையர்களை இந்த ஹோட்டலில் காண்கிறேன்” என்றபடி உபாலி என்ற இளைஞன் எங்களை விழுந்து விழுந்து உபசரித்தான்.

மதியத்தில் வெளியே செல்வோம். அங்கு சாப்பிடலாம் என்ற எண்ணத்துடன் சென்றபோது சாப்பாட்டுக் கடைகளைத் தவிர எல்லா கடைகளும் திறந்திருந்தன. அப்பொழுது விசாரித்ததில், ரம்லான் காலமானதால் கடைகள் மாலை ஆறுமணிக்கு பின்பே திறக்கும் எனவும் மேலும் மற்றவர்கள் எதிரே இக்காலங்களில் தண்ணீர் பருகுதல், சாப்பிடுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும் சொன்னார்கள். வேறு வழியின்றி சூப்பர் மார்க்கட்டில் இருந்த குளிர் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு ஹோட்டலுக்கு திரும்பினோம்.

மாலையில் மீண்டும் வெளியே சென்றபோது தோகாவின் உயர்ந்த கட்டிடங்கள் எம்மை கவர்ந்தன. இங்கு ஒவ்வொரு கட்டிடமும் வித்தியாசமான கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது. ரம்யமான கட்சி அது!

எதிர்பார்த்தபடி, மாலையில் ஆறு மணிக்குக் கடைகள் திறக்கப்பட்டன. பல நாட்டவர்கள் கடைகளை வைத்திருந்தார்கள். எமது ஊர்வலத்தின் இறுதியில் ஒரு நேபாள இளம்பெண் எம் கையை பிடித்து இழுக்காத குறையாகத் தனது கடைக்குள் எங்களைக் கூட்டிச் சென்றாள்.

அடுத்தநாள் காலையில் தோகாவை சுற்றிப் பார்க்க ஒரு சுற்றுலா முகவர் நிலையத்தினூடாக பதிவு செய்திருந்தோம். அங்கு போவதற்கு ஒரு டாக்சியை பிடித்தபோது அதன் சாரதி ஒரு பாகிஸ்தான் பஞ்சாபி என தெரியவந்தது.

“ஊருக்குப் போகவில்லையா?” என பேச்சுக்குக் கேட்டதும் பதிலுக்கு அழாத குறையாக, “இந்த காரை கடனை எடுத்து வாங்கிவிட்டேன். ஏற்கனவே கொரோனாவால் இரண்டு வருடங்கள் ஊரில் நின்றதால் வெறும் கை. இப்பொழுது கடன் கை நிறைய இருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு அதை இறக்காமல் ஊர் போகமுடியாது” என்றான்.

கொடுத்த பணத்திற்கு சில்லறை வாங்காது ‘குட் லக்’ என்று கூறி விடைபெற்றோம்.

எங்கள் சுற்றுலா அரை நாள் சமாச்சாரம். தோகாவை சுற்றிக்காட்ட ஒரு கத்தார் இளம் பெண் வந்திருந்தார். கத்தாரில் இப்படியான வேலைகளைப் பெண்கள் செய்வார்களா என நினைத்திருந்த எனக்கு அது புதிதாக இருந்தது. தோகா பற்றி நான் பெற்ற ஆரம்ப அறிவு அந்த இளம் பெண்ணிடமிருந்து பெற்றதே.

மீன்பிடிப்பவர்கள், முத்துக் குளிப்பவர்கள் வாழும் பிரதேசமாக கத்தார் வரலாற்றிலிருந்தபோதிலும் பேர்சியன், எகிப்திய, ரோமர்களின் முக்கியமான கடல் வழியிலிருந்ததால், இது தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பிரதேசமாகும். ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் பின்பு பிரித்தானிய பாதுகாப்பு பிரதேசமாகவும், பின்பு பகரேனுடன் சேர்ந்து இருந்து பின்பு தனி நாடானது. ஆரம்பத்தில் ஒட்டகம், குதிரை என்பன வளர்ப்பு இடமாக இருந்து தற்பொழுது உலகத்திலே அதிகமாக எரிவாயுப் படிவுகள் உள்ள இடமாகக் கத்தார் இருப்பதால் உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

பழைய வியாபார சந்தைகள், முத்துக் குளித்த இடங்கள், அதற்குப் பாவித்த வள்ளங்கள் ஆகியவற்றை எங்களது பயணத்தில் பார்த்தோம். ‘கத்தாரி கிராமம்’ என்ற பெயரில், ஒரு கலைக்கான இடமாக அமைத்து, அக்கால ரோம அரசர்களின் கட்டிடக்கலை பாணியில் மிகப்பெரிய திறந்த வெளியரங்கு (Amphitheatre) கட்டப்பட்டிருக்கிறது.

நாட்டில் பெரும்பகுதி பாலைவனமாக இருந்தபோதிலும் மக்கள் வாழும் பகுதிகள் பசுமையாக இருந்தன. சவுதி அரேபியா, சில வருடங்கள் முன்பு கத்தாருக்கு உணவு மற்றும் பாவனைப்பொருட்களை அனுப்புவதை தடைசெய்தபோது கத்தார் துணிந்து விவசாயம், பால்மாடு வளர்ப்பில் ஈடுபட்டதுடன் அதில் வெற்றியும் கண்டது! இது கத்தார் அரசின் திறமைக்கு ஒரு உதாரணம் எனலாம்.

நான் என்னை மறந்து கத்தாரில் பார்த்த விடயங்களில் முதல் ஸ்தானத்தில் நிற்பது அங்குள்ள பாரிய கட்டிடங்களே. தேசம் முழுவதும் கட்டிடக் கலையின் கண்காட்சியாக இருந்தது. தென் அமரிக்கா நாடான கொலம்பியாவில் கட்டகேன என்ற நகரம் 16 நூற்றாண்டில் ஸ்பானிய கட்டிடக்கலையை அப்படியே ஒரு நகரமாக காட்சிக்கு வைத்திருந்ததுபோல 20-21ம் நூற்றாண்டின் கட்டிடக்கலை மகத்துவத்தைப் பார்க்க தோகா செல்லலாம்.

எங்களும் வழிகாட்டியான கத்தார் பெண் தங்கு தடையற்ற ஆங்கிலத்தில் தனது குடும்ப விடயங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டார். தன்னை பெண் பார்க்க வந்தவரிடம், “நாம் திருமணமானால் தனியாகவே இருக்கவேண்டும்’ என்று நிபந்தனை வைத்தபோது அந்த மாப்பிள்ளை தன்னால் தன் பெற்றோரை விட்டு வரமுடியாது என்றதால் அந்த திருமணம் நின்றது” என்றாள்.

அப்பொழுது, வேலை செய்வது ஆண்களுக்குப் பிரச்சினையில்லையா என்றபோது, “ஏற்கனவே அது தெரியும். திருமணமான பின்னும் நான் வேலை பார்ப்பேன்” என்றாள். “அதைவிடக் கத்தாரில் திருமணம் செய்யும்போது ஆணும் பெண்ணும் ஒரு ‘முன்- திருமண ஒப்பந்தம்’ (Prenuptial agreement) செய்துகொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தம் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும்” என்றாள்.

இருபத்தைந்துக்கு குறைவான இளம் பெண் அவள. தலையை மட்டுமே மூடியதுடன் மிகவும் அழுத்தமாக அவள் கூறிய விடயங்கள், கத்தார் பெண்கள் மற்றைய வளைகுடா நாடுகளை விட வித்தியாசமாகக் கல்வியையும் முற்போக்கு கொள்கைகளையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

கத்தார் கிராமத்தில் பளிங்குக் கற்களில் அமைந்த அழகான நீல பள்ளிவாசல் உள்ளது. அது இஸ்தான்புல் உள்ள நீல பள்ளிவாசல்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. துருக்கியைப் பெண் கட்டிடக் கலைஞர் (ZainabFadil Oglu) இரண்டையும் வடிவமைத்தார். அந்த பள்ளிவாசலுள் சென்றபோது அங்கு நடுத்தர வயதான ஒரு பெண் எங்களுக்குக் திருக்குரானைப் பற்றிப் பல விடயங்களைக் கூறினார். அதை மௌனமாக பதினைந்து நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையில் ஆங்கிலத்திலும் குரானிலும் மிகுந்த புலமை பெற்றவராக அந்தப் பெண்மணி இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன்.

தொழுகை நடக்காத நாட்களானதால் பள்ளி வாசலினுள் ஆண்களும் பெண்களும் ஒரே வழியால் உள்ளே சென்று வரலாம். ஆனால், தொழுகை நாட்களில் பெண்களுக்குத் தனியான வழி அங்கு அமைக்கப்பட்டிருந்தது. வைத்தியசாலை, பாடசாலை, சூப்பர் மார்கட் போன்ற எல்லா இடங்களிலும் ஒரே வழி இருக்கும்போது ஏன் பள்ளிவாசலுக்கு மட்டும் பெண்களுக்குத் தனிவழி என்ற கேள்வி என் மனத்தில் குமிழ்விட்டது. எவ்வளவு அறிவு புலமை இருந்தபோதும் எல்லா மதங்களிலும் ஆண் – பெண் வேறுபாடு மாறாதது என்பது உலக நியதி போலும்!

சுற்றுலா முடிந்தவுடன் எங்களது பஸ்சை செலுத்திய இந்தியப் பஞ்சாபி இளைஞனுக்கு நன்றி சொல்லச் சென்றேன். தனது இரண்டு வயதுக் குழந்தையை வாட்சப்பில் முத்தமிட்டுவிட்டு கைத்தொலைபேசியை எனக்கு காட்டினான். “கோவிட் காலத்தில் இந்தியாவில் நின்றேன். மகள் பிறந்து இரண்டு வருடமாகிவிட்டது. இந்த வருட முடிவில்தான் போக முடியும்” என்றான் கவலையுடன்.

கத்தாரில் வேலை செய்யும் பல வெளிநாட்டவர்களின் நிலை இதுவே. தென்னாசிய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களேயே இங்கு காணமுடிகிறது. நேபாளம் மற்றும் வங்காள தேசத்தவர்கள் அடிமட்ட வேலை செய்பவர்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களை எப்போது காண்பார்களோ?

அடுத்த நாள் எனது நண்பர் ரவிந்திரராஜும் அவரது மனைவியும் வந்திருப்பதால் இரவில் தோகாவை பார்ப்பதற்கு ஒழுங்கு பண்ணியிருந்தோம். எங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பொலிவியா பெண் வந்திருந்தாள். தனது கணவர் இங்கு கத்தார் ஏர் லைனில் விமான ஓட்டியாக இருப்பதால் தான் வழிகாட்டியாக வேலை செய்வதாக ஸ்பானிய மழலை கலந்த ஆங்கிலத்தில் கூறினாள். ஏற்கனவே அவள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபடியால் எங்களுடன் அன்னியோன்னியமாகக் கலந்துரையாடினாள்.

தான் இருபது வருடங்கள் தோகாவில் இருப்பதாகவும் தனது பிள்ளைகள் சுவிட்சிலாந்தில் படிப்பதாகச் சொல்லியபின்பு, “கட்டார் நல்ல நாடு. ஆனால், வயதாகிய பின்னர் இங்கு இருக்க முடியாது என்பதை விட எந்த குறையுமில்லை” என்றாள்.

அவளுடன் பருந்துகள் (Falcon) விற்கும் கடைக்குச் சென்றோம். அங்கு ஒரு பங்களாதேசத் இளைஞன் வேலை செய்தார். ஒரு பருந்தைக் காட்டி, “ஒரு லட்சம் டாலர் மதிப்பான பருந்து” என்றார். அவைகள் வேட்டைக்குப் பழக்கப்பட்டபின்பு மில்லியன் டாலர் போகும் என்றார். அப்போது நான் நினைத்துக்கொண்டேன்: மெல்பேர்னில் ஒரு முறை ஒரு குருவிக்கு (Finch) கால் முறிந்துவிட்டது. அதற்கு நான் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும்போது அது துரதிஸ்டவசமாக இறந்துவிட்டது. அதன் உரிமையாளரிடம் நான் மன்னிப்பு கேட்டதோடு விடயம் முடிவுக்கு வந்தது. இந்தப் பருந்து ஒன்றுக்கு நான் வைத்தியம் செய்யும்போது அது இறந்தால் விடயம் எங்கு போய் முடியும்?

ஒட்டகங்கள் கட்டியிருந்த கொட்டகையைப் பார்த்தேன். ஒரு காலத்தில் ஒட்டகங்களை இனப்பெருக்கம் செய்யும் இடம் தற்போது ஒட்டகங்கள் பந்தயத்திற்கு மட்டும் பாவிக்கிறார்கள். இங்கு ஓட்டகப் பந்தையம் பிரபலமானது.

கடல் நடுவே ஒரு செயற்கைத் தீவை உருவாக்கி அங்கு வீடுகளை கட்டி தற்போது வெளிநாட்டவர்களும் அவற்றை வாங்க அனுமதிப்பதாகவும் சொல்லப்பட்டது.

அன்று ரம்லான் கடைசி நாளானதால் பிரபலமான கத்தார் உணவகத்தில் உணவுண்டபோது, உணவில் பெரும்பகுதி இந்திய வகை உணவு என்பதை அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. கத்தாரில் வசிப்போரில் பெரும்பகுதியானர் உபகண்டத்தை சேர்ந்தவர்களானதால் அரேபிய உணவின் ஆதிக்கம் குறைந்துவிட்டதோ என எண்ணத்தோன்றியது.

இறுதி நாளில் நானும் மனைவியும் கத்தாரின் தேசிய அருங்காட்சியகத்திற்கு கத்தாரின் மின்சார ரயிலில் சென்றோம். ரயில் பயணம் மிகவும் நவீனமானது – வசதியானதும் கூட. இங்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்களே இதை அனேகமாக பாவிக்கிறார்கள். கத்தாரின் பல நகரங்களை ரயில் சேவை இணைக்கிறது. முதல் இரு நாட்கள் டாக்சியை ஏன் பாவித்தேன் என நினைத்தேன். ஆங்கில மொழி, அரபு மொழியை விட பாவனையில் உள்ளது என்பதால் எங்கும் தயக்கமின்றி போய்வரலாம்.

அருங்காட்சியகத்தின் புறத்தோற்றம் மிகவும் அழகாக இருந்தது. மிகவும் சிறிதளவான பொருட்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும் கத்தாரின் வரலாற்றை அவை மிக துல்லியமாக எடுத்துக் கூறிற்று.

கத்தார் மன்னர்கள் மக்களுக்குத் தேவையானதை, தேவைக்கு அதிகமாகச் செய்கிறார்கள். சட்டமீறல்கள் குறைவு. எங்கும் சட்டத்தை நிலைநாட்ட பொலிசாரை காணமுடியவில்லை. ஏன் என்று கேட்டபோது “எல்லா இடங்களிலும் கமரா இயங்குகிறது” என்று பதில் வந்தது!

பாதுகாப்பில் முதன்மையான தோகா நகரில் நான்கு நாட்கள் தங்கவேண்டி வந்தது. ஐரோப்பா போகும்வரையில் ஒரு தற்செயல் நிகழ்வாக இது இருந்தாலும் அது மனத்திற்கு நிறைவாகவும் வித்தியாசமாகவும் இருந்தது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...