இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் மிகப்பெரிய திருவிழா ஐபிஎல். மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே கடைசி வாரத்தில் முடியும் ஐபிஎல் போட்டிகளை பார்க்காத இந்திய கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவிலும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது.
இப்படி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு அடுத்த ஆண்டில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் 2 விஷயங்கள்.
ஐபிஎல்லுக்கு சிக்கல் ஏற்படுத்தும் முதல் விஷயம் நாடாளுமன்ற தேர்தல். இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, பிரச்சாரங்களுக்கும், வாக்குப்பதிவுக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருக்கும் அதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸாரால் முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது.
2014-ம் ஆண்டில் இதுபோன்ற சூழ்நிலை வந்தபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரையும் இந்தியாவில் நடத்தாமல் வெளிநாடுகளில் நடத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படி நடத்தினால் பிசிசிஐ-யின் லாபம் குறையும் என்பதால் பிசிசிஐ அதில் ஆர்வமாக இல்லை.
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல்லுக்கு அடுத்த சிக்கலை டி20 உலகக் கோப்பை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி தொடங்கவுள்ளது. மே கடைசி வாரத்தில் ஐபிஎல் போட்டிகள் முடிந்தால், உலகக் கோப்பைக்கு வீர்ர்கள் தயாராக போதுமான கால அவகாசம் இருக்காது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி தங்கள் முக்கிய வீர்ர்கள் காயம் அடையக் கூடாது என்பதால், பல நாடுகள் தங்கள் வீர்ர்களை அனுப்ப தயங்கலாம்.
அதற்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்தலாம் என்றால் மார்ச் 2-வது வாரம் வரை இந்தியா – இங்கிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஒரு வாரமாவது ஓய்வு கொடுத்த பிறகுதான் ஐபிஎல்லை தொடங்கவேண்டி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் போன்ற தொடர்களால், வீர்ர்கள் காயமடைவது அதிகரித்து, அது இந்திய அணியை பாதிப்பதாக கபில்தேவ் போன்ற முன்னாள் வீர்ர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். டி20 உலகக் கோப்பைக்கு முன் வீர்ர்களை ஐபிஎல் போட்டிகளில் ஆடவைத்து அவர்கள் காயம்படும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடாது என்பது முன்னாள் வீர்ர்களின் கருத்தாக உள்ளது.