No menu items!

ஒரு கவிஞனின் கதை: வெற்றிமாறனின் அடுத்த முயற்சி!

ஒரு கவிஞனின் கதை: வெற்றிமாறனின் அடுத்த முயற்சி!

தமிழ் சினிமாவின் பிரபலமான வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கூட்டணி. இவர்கள் இருவரும் இப்போது மீண்டும் ஒரு புராஜெக்ட்டில் இணைந்துள்ளார்கள். ஆனால், இது சினிமா அல்ல, ஆவணப்படம். தமிழ் சிற்றிதழ் வட்டாரத்தில் பிரபலமான கவிஞர் பிரமிள் பற்றி வெற்றிமாறன் தயாரிக்கும் ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், வேல்ராஜ்.

‘காற்றின் தீராத பக்கங்களில்’ என்னும் பெயரில் உருவாகும் இந்த ஆவணப்படத்தை தங்கம் இயக்குகிறார். இவர் வெற்றிமாறனின் நண்பர். அமீர் இயக்கும் ‘இறைவன் மிக பெரியவன்’ படத்தின் கதையை வெற்றிமாறனுடன் இணைந்து எழுதியிருக்கிறார். தங்கமுடன் பேசினோம்.

“வெற்றிமாறன், வேல்ராஜ் போன்ற சினிமாவில் பிஸியாக இருப்பவர்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து ஆவணப்படம் எடுக்கும் அளவுக்கு முக்கியமான நபரா பிரமிள். யார் அவர் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.

பாரதிக்கு பிறகு தமிழ்க் கவிதையை நவீனமாக்கியவர் பிரமிள். கவிதையில் தமிழ் மரபையும் தற்காலத்தையும் இணைத்தவர். இலக்கியத்துக்காக இந்தியாவிலிருந்து நோபல் பரிசு பெற்ற தாகூரைவிட பிரமிள் முக்கியமானவர். தத்துவ அறிஞர்.

தமிழ் சமூகம், பாரதியை வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளாததுபோல் பிரமிளையும் கண்டுகொள்ளவில்லை. இனி இது நடக்கக்கூடாது என்று இன்றைய தலைமுறைக்கு பிரமிளை அறிமுகப்படுத்தும் நோக்கம்தான் இந்த ஆவணப்படம்.

எழுத்தாளர்களை பற்றிய வழக்கமான ஆவணப் படங்களிலிருந்து வேறுபட்டு இது முற்றிலும் புதிய கோணத்தில் தயாராகிறது. பிரமிள் ஒரு ஓவியரும் சிற்பியும்கூட. அதை நினைவூட்டும் வகையில் சிற்பக் கலையும் சினிமா கலையும் இணைந்ததாக இந்தப் படம் இருக்கும்.

இலங்கையின் திரிகோணமலையில் பிறந்து வளர்ந்த பிரமிள், இலங்கை இனப் பிரச்சினை தீவிரமடையும் முன்பே தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி வாழ்ந்து இங்கேயே மறைந்தவர். அவரது சமாதி வேலூர் அருகே கரடிக்குடியில் உள்ளது. இந்த சமாதியிலிருந்துதான் எங்கள் ஆவணப்படத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

எனது 19 வயதில் பிரமிளின் ‘ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை’ நூலைப் படித்தேன்.

‘ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை’ மற்றும் பிரமிளின் ‘தியான தாரா’ ஆகிய இரு புத்தகங்களின் பாதிப்பில் உருவானதுதான், அமீர் இயக்கும் ‘இறைவன் மிக பெரியவன்’ படத்தின் கதை. அந்த வகையில் பிரமிளுக்கு நாங்கள் செலுத்தும் காணிக்கை இந்த ஆவணப்படம்.

1988ஆம் ஆண்டு கோவையில் ‘சமுதாயம் பிரசுராலயம்’ கோவிந்தன் வீட்டில் முதன்முதலாக நான் பிரமிளை சந்தித்தேன். அன்று முதல் அவரை எனது குருவாக ஏற்றுக்கொண்டு விட்டேன். அதன்பின்னர் அவரது கடைசி காலம் வரை எனக்கு அவருடன் நட்பு இருந்தது.

சமீபத்தில் வடலூர் வள்ளலாரின் சத்திய ஞான சபை சென்று திரும்பும் வழியில் பிரமிள் சமாதியைப் பார்த்தேன். குப்பைகள் குவிந்து மிகவும் சிதிலமடைந்த நிலையிலிருந்தது சமாதி. ‘என்ன பாவம் செய்தேனோ?’ எனத் தொடங்கும் வள்ளலாரின் பாடலில் வரும், ‘குருவை வணங்கக் கூசி நின்றேனோ, குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ’ என்ற வரிகள்தான் அப்போது நினைவில் வந்தன. உடனே பிரமிள் கல்லறையை புதுப்பித்து, அவருக்கு ஒரு மணி மண்டபம் கட்டும் என் கனவை இந்த ஆண்டே செயல்படுத்த முடிவு செய்தேன். ஏனென்றால், பிரமிளின் 25ஆவது நினைவு ஆண்டு இது.

என் கனவை வெற்றிமாறனிடம் சொன்னேன். உடனே, “இதில் பிரமாதமான ஒரு கதை இருக்கிறது. இதை ஆவணப்படுத்துவோம்” என்றதுடன் தன்னுடைய ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ சார்பிலேயே அதை செய்யலாம் என்றார் வெற்றி. “ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக உங்கள் உதவியாளர்களில் ஒருவரை அனுப்புங்கள்” என்று வேல்ராஜிடம் கேட்டோம்.

வேல்ராஜ், “பிரமிள் ஆவணப்படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெரிய கவுரம். நானே செய்கிறேன், ஒரு பைசாகூட வேண்டாம்” என்று இறங்கிவிட்டார்.

கரடிகுடியில் பிரமிளுக்கு மணி மண்டபம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது. இந்த மணிமண்டபத்தில் நிறுவப்பட இருக்கும் சிலையை வடிவமைத்து உருவாக்க இருப்பவர், சிற்பியும் சென்னை ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வருமான சந்ரு. இவரும் எங்களைப் போலவே பிரமிளின் தீவிர விசிறி. திருநெல்வேலி – அம்பாசமுத்திரத்தில் இருக்கும் சந்ருவின் குருவனத்தில் அடுத்த வாரம் பிரமிள் சிற்பத்தை வடிக்கவுள்ளார், சந்ரு. அதுவும் படமாக்கப்படும். அடுத்து திருநெல்வேலியில் உள்ள பிரமிள் நினைவு நூலகத்தையும் ஆவணமாக்க திட்டமிட்டுள்ளோம்.

முதல்நாள் படப்பிடிப்பில் 160 மாணவர்களிடம் “பிரமிளை தெரியுமா?” என்று வெற்றிமாறன் கேட்டார். 160 பேரில் ஒரு மாணவன் மட்டும்தான் தெரியும் என்றான். மேலும்,

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

என்ற பிரமிளின் பிரபலமான கவிதையை சொன்னான். இந்த கவிதையின் வரிதான் எங்கள் ஆவணப்படத்தின் தலைப்பு.

“160 மாணவர்களில் ஒருவனுக்குத்தான் பிரமிளை தெரிந்திருக்கிறது என்பது நமது சமூகம் எவ்வளவு ஆரோக்கியமற்று இருக்கிறது” என்பதைக் காட்டுகிறது என்றார், வெற்றிமாறன்.

மே முதல் வாரத்தில் பிரமிள் ஆவணப்படமும் மணி மண்டபமும் தயாரானதும் கரடிகுடியிலேயே மாபெரும் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார், வெற்றி. பிரமிள் யார் என்பதை உலகத் தமிழர்களுக்கு உணர்த்தக்கூடிய விழாவாக அது இருக்கும்” என்றார் தங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...