No menu items!

பிரதமர் மோடி – 8 வருடங்கள் 5 கார்கள்

பிரதமர் மோடி – 8 வருடங்கள் 5 கார்கள்

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் செங்கோட்டையில் கொடியேற்றுவதற்காக வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய காரைப் பற்றித்தான் மிடியாக்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் Range Rover Sentinel வகை காரில் பிரதமர் மோடி வந்து இறங்கினார்.  அதிக ஆற்றலும், பாதுகாப்பு அம்சங்களும் கொண்ட இந்த காரின் மதிப்பு 15 கோடி ரூபாய்.

இந்த காருக்கு ஏன் இத்தனை விலை என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால் இதிலுள்ள வசதிகளைப் பற்றிக் கேட்டால், காரை வாங்குவதற்கு  தாராளமாக இந்த பணத்தைக் கொடுக்கலாம் என்று தோன்றும்.

இந்தியாவின் பிரதமர் என்ற வகையில் நரேந்திர மோடிக்கு  தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே பாதுகாப்பான கார்களில் ஒன்றாக கருதப்படும் இதை தீவிரவாதிகளால் எளிதாக தகர்க்க முடியாது.

துப்பாக்கியின் புல்லட்டுகள் துளைத்துச் செல்ல முடியாதபடி சக்திவாய்ந்த கண்ணாடிகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி புல்லட்கள் மட்டும்தான் என்றில்லை. சக்திவாய்ந்த வெடிகுண்டுகளாலும் இந்தக் காரை தகர்க்க முடியாது. வெடிகுண்டு தாக்குதல் மட்டுமின்றி ரசாயன ஆயுதங்களைக் கொண்டும் இந்தக் காருக்குள் உள்ள பிரதமரை தாக்க முடியாது. இதற்காக ஒரு டன்னுக்கும் அதிக எடைகொண்ட ஸ்டீல் பிளேட்டுகள் மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு இந்த கார் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு கார் எத்தனை பாதுகாப்பானதாக இருந்தாலும், அதன் டயரை பஞ்சராக்கினால் ஒன்றும் செய்ய முடியாது. காரையும் ஓட்ட முடியாது. ஆனால் Range Rover Sentinel காரின் சக்கரம் மிகவும் வலிமையானவை. எதிராளிகள் டயரைச் சுட்டாலும் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தூரத்துக்காவது இந்த காரை ஓட்டிச் செல்லலாம்.

Range Rover Sentinel காரில் ஜாகுவார் ரக இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இஞ்ஜின் மிகவும் சக்திவாய்ந்தது என்பதால், காரை ஸ்டார்ட் செய்த 10.4 விநாடிகளுக்குள் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 193 கிலோமீட்டர்கள்.

கூடவே எமர்ஜென்சி லைட்டிங் வசதி, 10 அங்குல அகலம் கொண்ட 2 டச் ஸ்கிரீன்கள்,  பிரதமர் விரும்பினால் காருக்குள் இருந்துகொண்டே பொதுமக்களிடம் பேசும் வசதியும் இதில் உண்டு. உலகிலேயே மிகக் குறைவான நாடுகளின் பிரதமர்கள்தான் இத்தனை பாதுகாப்பான, நவீன வசதிகளைக் கொண்ட கார்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த கார் மட்டுமல்ல, கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு 5 முறை கார்களை மாற்றியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அப்படி அவர் பயன்படுத்திய கார்களில் முக்கியமான ஒன்று  Mercedes Maybach S650.    2019-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த காரிலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. 10.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த காரை மேலும் 1.5 கோடி ரூபாய் செலவழித்து நவீனப்படுத்தியுள்ளனர் பிரதமரின் பாதுகாப்பு படையினர்.

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருக்கும் சூழலில் இத்தனை விலை உயர்ந்த கார்களை பிரதமருக்காக வாங்கலாமா என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வியாக உள்ளது. ஆனால் இது நாட்டின் தலைமகனான பிரதமரின் பாதுகாப்புக்கு கொடுக்கும் விலை என்பது பாஜகவினரின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...