பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பெட்ரோலிய பொருட்கள், உணவுப் பொருட்கள், நிதியுதவி என ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறது இந்தியா. ஆனால் இதற்கு இந்தியாவுக்கு நன்றி காட்டுவதற்கு பதிலாக சீனாவின் உளவுக் கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி தந்தித்திருக்கிறது இலங்கை அரசு.
இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு டென்ஷனை ஏற்றியிருக்கிறது.
இலங்கைக்கு வரும் உளவுக்கப்பலைப் பற்றியும், அந்த கப்பல் இலங்கைக்கு வருவதால் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு எதிர்கொள்ளப் போகும் ஆபத்தைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்…
சர்வதேச நாடுகளின் விண்கலங்களையும், ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் உளவு பார்ப்பதற்காக ‘யுவாங் வாங்’ என்று பெயரிடப்பட்டுள்ள 7 உளவுக் கப்பல்களை சீனா வைத்துள்ளது. இந்த உளவுக் கப்பலை ஓரிடத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்தால், அந்த கப்பல் நிற்கும் பகுதியில் இருந்து 750 கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பில் உள்ள ஏவுகணைகள், விண்கலங்கள், ராக்கெட்கள் ஆகியவற்றை அந்த கப்பலில் இருந்து கண்காணிக்க முடியும். அதற்கு தேவையான சக்திவாய்ந்த ராடர்கள் அந்த உளவுக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த உளவுக் கப்பல்களில் ஒன்றுதான் ‘யுவான் வாங் 5’. சீனாவின் ஜியாங்நான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கப்பல் 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் கொண்டது. கடல், வான் மற்றும் நிலப்பகுதிகளின் எதிரி நாடுகளின் ஆயுதங்களின் நகர்வை கண்காணிக்கும் ஆற்றல் இந்த கப்பலுக்கு உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அத்தகைய ஆற்றல் வாய்ந்த ‘யுவான் வாங் 5’ கப்பல்தான் இப்போது இலங்கையின் ஹம்பன்டோடா (Hambantota) துறமுகத்துக்கு வரவிருக்கிறது.
ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் ஹம்பன்டோடா துறைமுகத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை இந்த கப்பல் மேற்கொள்ளவுள்ளது. இந்தியப் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள சீனாவின் சில விண்கலங்களை ஆய்வு செய்வதற்காக அந்த துறைமுகத்தில் தங்கள் கப்பலை ஒரு வாரம் நிறுத்தி வைப்பதாக சீன பாதுகாப்பு துறை தெரிவிக்கிறது.
அத்துடன் இந்த கப்பலை ஹம்பன்டோடா துறைமுகத்தில் நிறுத்தி ஆய்வு செய்வதால் விண்வெளி ஆய்வில் சில தொழில்நுட்பங்களை இலங்கையால் கற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கிரது. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்தியாவின் தென் பகுதியான தமிழ்நாடு மற்றும் கேரளாவை உளவு பார்க்கத்தான் இக்கப்பல் அங்கு நிறுத்தப்பட போகிறதா என்று இந்திய அரசு அந்தேகப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசியாவுடன் இணைக்கும் கடல்வழியில் உள்ள 2-வது மிகப்பெரிய துறைமுகமாக ஹம்பன்டோடா உள்ளது. அதனாலேயே ஆரம்பம் முதல் இந்த துறைமுகத்தின் மீது சீனா கண் வைத்துள்ளது. அதனாலேயே இந்த துறைமுகத்தை மேம்படுத்த உதவி செய்யுமாறு 2017-ம் ஆண்டில் இலங்கை கேட்டுக் கொண்டதும் சந்தோஷமாக தலையாட்டியது சீனா. இதைத்தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இந்த துறைமுகத்தை சீனா வசம் இலங்கை ஒப்படைத்தது. இப்போது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்த துறைமுகத்தில்தான் தனது உளவுக் கப்பலை சீனா நிறுத்தவுள்ளது.
750 கிலோமீட்டர் சுற்றளவுக்கும் மேல் அந்த கப்பலால் உளவு பார்க்க முடியும் என்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளின் பாதுகாப்புக்கு இந்த கப்பலால் ஆபத்து ஏற்ட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்டவற்றை அந்த கப்பலால் உளவு பார்க்க முடியும். அதனால்தான் இந்திய அரசு அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.