No menu items!

பேரறிவாளன் விடுதலை – வழக்கு கடந்து வந்த பாதை

பேரறிவாளன் விடுதலை – வழக்கு கடந்து வந்த பாதை

முடிவற்று நீண்டுகொண்டே இருந்த பேரறிவாளன் விடுதலை வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு கடந்துவந்த பாதை – ஒரு பார்வை.

ராஜீவ்காந்தி படுகொலை

1991 மே 21… இந்தியாவின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் நேரம்… மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி தமிழ்நாட்டுக்கு அன்று தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்தார். சென்னையிலிருந்து ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூர் சென்ற ராஜீவ் பிரச்சார மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள், பள்ளிக் குழந்தைகள் மாலை அணுவித்தனர். ராஜீவ் காந்தியை நெருங்கிய ஒரு பெண் அவரது கால்களை தொட கீழே குனிந்தார். அப்போது மணி இரவு 10:21… பயங்கரமான ஒரு வெடிச் சத்தம். ராஜீவ்காந்தி உட்பட 14 பேர் அந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

யார் செய்தார்கள்? எத்தனை பேர்? எதற்குச் செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள்? என்று யாருக்கும் தெரியாத நிலையில் சம்பவ இடத்தில் கிடந்த ஒரு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக துப்பு துலங்கத் தொடங்கியது.

ராஜீவ் காந்தி காலில் விழந்த பெண்தான் குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர்.டி. எக்ஸ் வெடிபொருளை வெடிக்கச் செய்தார் என்பதும், அவர் பெயர் தனு என்பதும், அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற புலன் விசாரணையில், முக்கிய குற்றவாளிகளான சிவராசன், சுபா உட்பட எல்லோரும் தேடுதல் வேட்டையில் சுற்றிவளைக்கப்பட்ட போது, தற்கொலை செய்துகொண்டனர். குற்றவாளிகளில் மீதியிருந்த 26 பேர் மீதான வழக்கு சென்னை பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் நடைபெற்றது. 1993ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கில் 50 மாதங்கள், 288 சாட்சியங்கள், 3000 அரசுத் தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் என்ற நீண்ட பயணத்துக்குப் பின்னர் 1998இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

26 பேருக்கு தூக்குத் தண்டனை

குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது தடா நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க ஒரு புயலை உருவாக்கியது. சட்ட வல்லுனர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் திகைத்தனர். ஒரு கொலை வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது உலக நாடுகள் எதிலும் நிகழாதது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராஜீவ்காந்தி கொலை பற்றி விசாரணை நடத்திய ஜெயின் மற்றும் வர்மா விசாரணைக் கமிசன் அறிக்கைகள், ‘விசாரிக்க வேண்டும்’ என்று சுட்டிக்காட்டிய பெரும்புள்ளிகள் அனைவரும் சுதந்திரமாகச் சுற்றுக்கொண்டிருக்கும் போது, ராஜீவ் கொலை நடக்கப்போகிறது எனத் தெரியாமல் மாட்டிக்கொண்ட அப்பாவிகள் அனைவருக்கும் மரணதண்டனை என்பது வழக்கு விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளாலே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.

தடா நீதிமீன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியாது; எனவே,

27.02.98 அன்று உச்ச நீதிமன்றத்தில் 26 பேரின் சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், மீதமுள்ள 19 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

பக்கத்தில் வந்த தூக்கு கயிறு

தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நான்கு பேரும் 7.10.1999 அன்று ஆளுநரிடம் கருணை மனு அளித்தனர். அவை நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம், அமைச்சரவை ஆலோசனையை பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் 19.4.2000 அன்று அமைச்சரவை கூடி விவாதித்தது. ‘நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும்; மற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும்’ ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதன்படி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரும், 28.4.2000 அன்று, தமிழக அரசு வாயிலாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். அந்த மனு மீது 11 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், 12.8.2011 அன்று அன்றைய ஜனாதிபதி பிரதிபா பாட்டில் கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற 2011 செப்டம்பர் 9 என்று நாள் குறிக்கப்பட்டது.

இது தமிழகத்தில் பெரும் எழுச்சியை உருவாக்கியது.

மூன்று பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த 27 வயது செங்கொடி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மூவர் மரணத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.

இந்நிலையில், ‘1991இல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்கள் கருணை மனுக்கள் மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காததால் ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிக காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டோம். இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன. இதனை அடிப்படையாக்க் கொண்டு எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் டெல்லியிலிருந்து வந்து இதற்காக வாதாடினர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘மூவரையும் எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது’ என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. கொஞ்சம் ஆசுவாசமளித்தது.

ஆயுள் தண்டனையாக மாற்றம்

இதன்பின்னர் முதல்வரான ஜெயலலிதா, ‘மூன்று பேர் தூக்குத் தண்டனை தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவர்கள் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது’ என்கிற தீர்மானத்தை, 30.8.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.

அதேநேரம்

தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மேல்முறையீட்டில், தமிழகத்தைச் சேர்ந்த ப. சதாசிவம் உட்பட 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 2011 பிப்ரவரி 18ஆம் தேதி, மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.

மட்டுமல்லாமல் அந்தத் தீர்ப்பின் இறுதியில், “ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் வரைதான். ஆனாலும், அது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ன் கீழ் வழங்கப்படும் தண்டனைக் குறைப்புக்கு உட்பட்டதுதான். எனவே 432ஆவது பிரிவின்படி இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம். ஆனால், அந்தப் பிரிவு 433 Aன் கீழ் உள்ள கட்டுப்பாட்டுக்கு மீறாமல் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய தமிழ்நாடு அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவெடுத்தது. “இருப்பினும், இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏழு பேரும் விடுவிக்கப்படுவார்கள்” என்று ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கைக்கு அன்று மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு ஒப்புதல் வழங்காததோடு, தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே ஒரு மனுவினைத் தாக்கல் செய்தது. இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாக வந்த பாஜக அரசும் அதே நிலைப்பாட்டில் நின்று உச்ச நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடியது. இதனையடுத்து, “மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான இறுதி முடிவை மத்திய அரசே எடுக்க முடியும். அவர்களை விடுவிப்பதா இல்லையா என முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை தமிழக அரசு தன்னிச்சையாக விடுவிக்க முடியாது” என்று இந்த வழக்கில் நீதிபதி தத்து தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு திர்ப்பளித்தது.

விடுதலையின் வாசல் வரைச் சென்றுவிட்ட நிலையில் தடைபட்டு, கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நம்பிக்கையிழந்திருந்த நிலையில், 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தலுக்கு முன்பு, இந்த விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்தார் ஜெயலலிதா.

“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும்” என்று தமிழக அரசு கடிதம் எழுதியது.

வந்தது, விதி 161

மாநில ஆளுநருக்கு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161 கீழும், குடியரசுத் தலைவருக்கு பிரிவு 72ன் கீழும், தண்டனையைக் குறைக்க, ரத்து செய்ய, மன்னிக்க அளவில்லாத அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2018 செப்டம்பர் 9 அன்று சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அதன் மீது 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த ஆளுநர் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார்.

உச்ச நீதிமன்றம் சென்ற பேரறிவாளன்

இதனையடுத்து, குற்றமே நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை விடுதலை செய்யக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.

2021 மே 20 அன்று தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வாதங்களை முன்வைத்து வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று (18 மே 2022), அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...