நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த ஊடுருவல் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் நாடாளுமன்ற ஊடுருவல் எதற்காக நடந்தது? எப்படி நடந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
எதற்காக இந்த ஊடுருவல்?
நாடாளுமன்ற ஊடுருவலில் ஈடுபட்டவர்களில் இருவர், தாங்கள் எதற்காக இந்த ஊடுருவலில் ஈடுபட்டோம் என்பதற்கான காரணங்களை தெரிவித்துள்ளனர்.
அமல் ஷிண்டேவிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, “மணிப்பூர் வன்முறை, விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் போன்றவை எங்களுக்கு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தில் ஒரே சிந்தனை கொண்ட நாங்கள் வித்தியாசமான முறையில் ஒரு போராட்டத்தை நடத்த விரும்பினோம். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடாளுமன்றத்துக்குள் ஊடுருவினோம்” என்று தெரிவித்துள்ளார்.
நீலம் கூறும்போது, “இந்திய அரசு எதிர்ப்புகளை ஒடுக்கி வருகிறது. தங்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை தடியடி நடத்தியும், சிறையில் அடைத்தும் தண்டித்து வருகிறது. அதைக் கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். நாங்கள் அனைவரும் படித்த, வேலை இல்லாத இளைஞர்கள். எந்த இயக்கத்துடனும் எங்களுக்கு தொடர்பு இல்லை. சர்வாதிகாரம் நம் நாட்டுக்கு சரிப்பட்டு வராது” என்று தெரிவித்துள்ளார்.
பாஸ் வாங்கியது எப்படி?
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தங்கள் எதிர்ப்பை காட்டவேண்டும் என்றுதான் முதலில் நினைத்துள்ளனர். இதற்காக நாடாளுமன்றத்தில் நுழையும் பாஸை வாங்கும் முயற்சியில் மனோரஞ்சன் ஈடுபட்டுள்ளார். மைசூருவைச் சேர்ந்த மனோரஞ்சனுக்கு அந்த தொகுதியின் எம்பியான பிரதாப் சிம்ஹாவை தெரியும் என்பதால் அவரைச் சந்தித்து நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்க தனக்கும் தன் நண்பர்கள் 5 பேருக்கும் பாஸ் வேண்டும் என்று கூறியுள்ளார்.
தன்னால் 6 பேருக்கு பாஸ் வாங்கித் தர முடியாது என்று கூறிய பிரதாப் சிம்ஹா, 2 பாஸ்களுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர்களில் 2 பேர் மட்டும் நாடாளுமன்றத்தில் ஊடுருவுவது என்றும், மற்றவர்கள் வெளியில் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற விதிப்படி பார்வையாளர்களுக்கு பாஸ் கொடுக்க சிபாரிசு செய்யும் எம்பி, அந்த நபரின் செய்கைகளுக்கு பெறுப்பேற்பதாக சான்றிதழ் வழங்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஊடுருவ தயாரானது எப்படி?
நாடாளுமன்றத்துக்குள் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் கிடைத்ததும் தங்கள் மீது கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்துக்குள் வண்ணப் புகை குண்டுகளை வீச திட்டமிட்டுள்ளனர். இதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்யாண் என்பவரிடம் இருந்து 1,200 ரூபாய்க்கு 5 வண்ணப் புகைக் குண்டுகளை வாங்கியுள்ளனர். இதற்காக அமல் மும்பை சென்றிருக்கிறார்.
இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் பார்வையாளர்கள் எப்படியெல்லாம் சோதனை செய்யப்படுகிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஷூக்களை சோதனை செய்வதில்லை என்று தெரிந்ததால், அதற்குள் வைத்து வண்ண புகைக் குண்டுகளை உள்ளே கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பு குருகிராமில் உள்ள விஷாலின் வீட்டில் அவர்கள் ஆனைவரும் தங்கி இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த நாளில்:
நேற்று மதியம் 1.01 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் பாஜக உறுப்பினர் கென் முர்மு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மனோரஞ்சனும், சாகரும் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவையில் எம்பிக்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்துள்ளனர். தங்கள் ஷூக்களில் இருந்து வண்ண புகைக் குண்டுகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் நிற புகையை திறந்து விட்டுள்ளனர். எம்பிக்கள் அவர்களை சூழ்ந்து பிடித்துள்ளனர். அதே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியில், அமலும் நீலமும் வண்ணப் புகை குண்டுகளை வீசி போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் மற்றும் நடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற தங்கள் நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.