நடிகர் ரஞ்சித்தின் ‘குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம்’படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி, “பா ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற சில இயக்குனர்கள் சினிமாவில் வளர்ச்சி பெற்ற பிறகு தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்துவிட்டது. ஜாதி என்ற பெயரில் சினிமாவை அழித்து வருகிறார்கள். சினிமாவில் ஜாதியை பற்றியே பேசக்கூடாது” என்று கூறியிருந்தார்.
பா. ரஞ்சித், வெற்றிமாறன் பற்றி பிரவீன் காந்தி பேசிய இந்த நிகழ்ச்சியின் வீடியோ கோலிவுட் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பா. ரஞ்சித், வெற்றிமாறன் மீது மட்டுமல்லாமல் மாரி செல்வராஜ், கோபி நயினார் போன்ற சில இயக்குநர்கள் படங்களி மீதும் இத்தகைய விமர்சனங்கள் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிரவீன் காந்தியின் இந்த விமர்சனம் சரியா?
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிலளித்துள்ள திரைப்பட விமர்சகரும் ஆய்வாளருமான குமரன் தாஸ், ‘தேவர் மகன்’, ‘சின்னக்கவுண்டர்’ இரண்டு படங்களும் 1992ஆம் ஆண்டு வெளி வந்தன. ‘போற்றிப்பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே’, ‘கண்ணுபடப் போகுதய்யா சின்னக்கவுண்டரே’ எனச் ஜாதிப் பெருமை பேசின படங்கள் இவை. இந்தப் படங்கள் வந்தபோது ‘ஜாதிப் படங்கள்’ என்ற முத்திரை இல்லை.
வெற்றிமாறனின் முதல் படம் ‘பொல்லாதவன்’ 2007ஆம் ஆண்டுதான் வெளிவந்தது. பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘அட்டக்கத்தி’ வெளிவருவதற்கு 30 ஆண்டுகளுக்கும் முன்னாடியே ‘தனிக்குடித்தனம்’, ‘வியட்நாம் வீடு’, ‘பட்டிக்காடா பட்டனமா’, ‘என் மகன்’ போன்ற படங்கள் வந்து அவற்றில் ஜாதி அடையாளம் முன்னிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது எல்லாம் பிரவீன் காந்தி கோழி முட்டைக்கு மயிறு புடிங்கிக்கிட்டு இருந்தாரா?’ என்று காட்டமாக கேள்வி எழுப்புகிறார்.
தலித் எழுத்தாளர் தி. ஸ்டாலின், ‘தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கியமான தயாரிப்பாளராக இருந்தவர் கே.டி. குஞ்சுமோன். ‘ரட்சகன்’ என்னும் ஒரு படத்தை அவருடைய தயாரிப்பில் இயக்கினார் பிரவீன் காந்த். அதில் நட்டப்பட்டு விழுந்ததுதான், குஞ்சு மோனால் இருபதாண்டுகளுக்கு மேலாக எழுந்திருக்கவே முடியவில்லை. கடைசியாக அரை ஆபாச படமொன்றை இயக்கி பங்கப்பட்டார் பிரவீன் காந்த். இன்றைக்கு, பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களால்தான் சினிமா தளர்ச்சி அடைந்தது என்கிறார் பிரவீன்காந்த். வெட்கம்!’ என்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.
இதனிடையே, பிரவீன் காந்தி பேச்சு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன், “இந்தியாவில் சாதிய ரீதியான ஒடுக்குமுறை இன்று இல்லை என்றோ அல்லது சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என ஒருவர் சொன்னால், அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இந்தியா முழுவதும் சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.