இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் கசப்புணர்வை ஏற்படுத்திவரும் சில விஷமப் பிரச்சாரங்களுக்கு நடுவில், இரு மதத்தினருக்கும் இடையிலான பாசப் பிணைப்பை ஏற்படுத்தும் படமாக மலையாளி ஃப்ரம் இந்தியா (Malayalee From India) படத்தைச் அமைந்துள்ளது. ‘ஜன கன மன’ படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியிருக்கும் இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
கேரளாவில் ஒரு சிற்றூரில் வாழ்ந்துவரும் இளைஞர் ஆலப்பரம்பில் கோபி (நிவின் பாலி). கோபியும் அவரது நண்பர் மல்கோஷும் (தியான் ஸ்ரீனிவாசன்) வேலையில்லாமல் திரிந்துகொண்டு இருக்கும் இளைஞர்கள். மதவாதத்தை அடிப்படையாக கொண்ட (மறைமுகமாக பாஜகவை சொல்கிறது) ஒரு கட்சியில் தொண்டர்களாக இருக்கும் அவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்க, அந்த கிராமத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வீட்டில் இருக்கும் 2 குழந்தைகள் பட்டாசு வெடிக்கிறார்கள்.
இதனால் கோபப்படும் மல்கோஷ், அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுகிறார். குண்டு வீசச் செல்லும்போது கோபியையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஊரில் பெரும் கலவரம் வெடிக்கிறது. மல்கோஷை எதிர்க் கோஷ்டியினர் வெட்ட, கோபியை வளைகுடா நாட்டில் வேலைக்கு அனுப்புகிறார்கள் அவரது உறவினர்கள்.
வெளைகுடா நாட்டில் யாருமில்லாத ஒரு பண்ணையில் பாகிஸ்தானியான சாகிப்பின் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்த்த்துக்கு தள்ளப்படுகிறார் கோபி. ஆரம்பத்தில் சாகிப்பை வெறுக்கிறார் கோபி. நாளடையில் அவர்களுக்குள் நல்ல உறவு ஏற்படுகிறது. தன் மகளை படிக்கவைப்பதற்காக வளைகுடாவில் வேலை பார்க்கும் சாகிப், ஒரு கட்டத்தில் கொரோனாவால் இறக்க, சாகிப்பின் பொருட்களை எடுத்து பாகிஸ்தான் செல்கிறார் கோபி. அவரது பயணத்தால் சாகிப்பின் மகளின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் என்ன என்பது படத்தின் க்ளைமேக்ஸ்.
இந்து, இஸ்லாம் என்ற பிரிவினையைப் பார்க்க்க் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நகைச்சுவையுடன் தகவலை சொல்கிறது. ஆரம்பத்தில் வேலை இல்லாத இளைஞராகவும், பின் பாதியில் பொறுப்புள்ள இளைஞராகவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நிவின் பாலி.
ஆரம்ப காட்சிகளில் பாஜகவை விமர்சிக்கும் பல நகைச்சுவை காட்சிகளை தில்லாக வைத்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. இதுபோன்ற தில்லான இயக்குநர்கள் தமிழகத்துக்கும் தேவை.