சினிமா உலகின் உச்சக்கட்ட கொண்டாட்டம் Oscar விருது விழாவாகதான் இருக்க முடியும். அந்த விழா மேடையில் நன்றிகள் பகிரப்படும். முத்தங்கள் பறக்க விடப்படும். அரவணைப்புகள் ஆராதிக்கப்படும். உணர்வுப்பூர்வமான பேச்சுகள் கண்ணீரில் முடியும். ஆனால் இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில், ஒரு பளார் அறை அரங்கேயிருக்கிறது. அது உலகம் முழுவது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது
.ஆஸ்கர் விழா மேடையில், சிறந்த டாக்குமெண்டரி பிரிவுக்கான விருதுகள் குறித்து காமெடி நடிகர் க்ரிஸ் ராக், கலகலவென பேசிகொண்டிருக்கிறார். ’இன்டிபென்டென்ஸ் டே’, ‘மென் இன் பிளாக்’, ஐ யம் லெஜன்ட்’, ‘ஐ ரோபோ’ படங்களின் மூலம் இந்தியாவில் அதிகம் தெரிந்த அழகன் வில் ஸ்மித் மேடையேறுகிறார். க்ரிஸ் ராக்கை நெருங்குகிறார். பளார் என முகத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.
அரங்கம் முழுவதும் அதிர்ச்சி. அமைதி. நேரலையில் அந்நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பார்த்து கொண்டிருப்பவர்களுக்கும் அதே அதிர்ச்சி. வில் ஸ்மித் கொடுத்த பளார், விழாவின் ஸ்கிரிப்ட் படி நடக்கிறதா இல்லை உண்மையாகவே அடித்து விட்டாரா என்று எல்லோருக்கும் குழப்பம்.
ஆஸ்கர் விருது விழாவில் நடந்தது என்ன?
க்ரிஸ் ராக் மேடையில் நின்றபடி, முன்னால் அமர்ந்திருக்கும் விருந்தினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் காமெடி கமெண்ட்களை அள்ளி விடுகிறார். இதில் முதலில் மாட்டியவர்கள் ஜாவியர் பார்டெம், பினோலோப் க்ரூஸ். கூட்டமும் அந்த நகைச்சுவையை ரசிக்கிறது. உற்சாகமான ராக், அடுத்து தனது பார்வையை வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஜடா பின்கெட் ஸ்மித் பக்கம் திருப்புகிறார்.
“Jada, I love you, G.I. Jane 2, can’t wait to see it” என்று கமெண்ட் அடிக்கிறார்.
அவ்வளவுதான். விறுவிறு மேடையேறுகிறா வில் ஸ்மித். க்ரிஸ் ராக் கன்னத்தில் பளார் என ஒரு அறை வைக்கிறார். உடனே ஆஸ்கர் விழா நேரலை குழுவினர், சட்டென்று அங்கு நடக்கும் உரையாடலை யாருக்கும் கேட்காத வகையில் ம்யூட் செய்துவிடுகிறது. ராக்கை அறைந்துவிட்டு வில் ஸ்மித் இருக்கைக்கு திரும்பிய பிறகும் வார்த்தை மோதல்கள் தொடர்கின்றன.
‘என் மனைவி பெயரை உன் ’’ வாயால் சொல்லாதே..’ (“Keep my wife’s name out of your ’_’ mouth.”)என வில் ஸ்மித் கோபத்தில் கெட்ட வார்த்தையுடன் சொல்வது எடிட் செய்யப்படாத வீடியோவில் கேட்கிறது.
அதற்கு ‘இது “G.I. Jane joke!” என்று க்ரிஸ் ராக் பதிலளிக்கிறார். மேலும் பல கெட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் வில் ஸ்மித்.
இறுதியில் ’தொலைக்காட்சிகள் வரலாற்றில் இந்த இரவுதான் மிகச் சிறப்பான இரவாக இருக்கும்’ (“That was the greatest night in the history of television.”) என்று முடிக்கிறார் ராக்.
சில நிமிடங்களுக்குப் பிறகு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற மேடை ஏறிய வில் ஸ்மித், உணர்ச்சிபூர்வமாக பேசினார், ‘’அகாடமி என்னை மன்னிக்கவும், காதல் உங்களை குழந்தைத்தனமான விஷயங்களையும் செய்ய தூண்டும்’’ (“I wanna apologize to the Academy… to all my fellow nominees. …Love will make you do crazy things.”) என்றவாறே கீழே இறங்கிவிட்டார். உஷ்ணமாக இருந்த வில் ஸ்மித்தை அமைதிப்படுத்தினார் டென்சல் வாஷிங்டன்.
’’உங்களுடைய உச்சமான தருணத்தின் போது, மிகவும் கவனமாக இருங்கள். அப்போதுதான் கெட்டவிஷயங்கள் உங்களைத் தேடி வரும்’’ என்று டென்சல் வாஷிங்டன் தன்னிடம் சொன்னதாக வில் ஸ்மித் பிறகு கூறினார்.
ஜிஐ ஜேன் (G.I. Jane) என்று ராக் கூறியதற்கு வில் ஸ்மித் ஏன் கோபப்பட்டார். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுபவர்களை ஜிஐ என்று கூறிப்பிடுவது. வழக்கம் ஆண்களை ஜிஐ ஜோ என்றும் பெண்களை ஜிஐ ஜேன் என்றும் கூறுவார்கள்.
சரி, இதற்கும் வில் ஸ்மித் கோபத்துக்கும் என்ன தொடர்பு?
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித், அலொபிசியா (Alopecia) என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த நோயால் தினமும் தலை முடி கொத்து கொத்தாக கொட்டும். இதனால் அவர் தனது தலை முடியை முற்றிலும் ஷேவ் செய்துவிட்டார். தற்போது மொட்டை தலையுடன் தான் எங்கும் வருகிறார். டிசம்பர் 2021-ல் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ’நானும், அலொபிசியாவும் இனி பிரிக்க முடியாத நண்பர்களாகிவிட்டோம்’ என்று முதல் முறையாக பதிவிட்டார்.
தன் மனைவியில் முடியில்லா தலையை ராக் கிண்டலடிக்கிறார் என்று வில் ஸ்மித் கருதியதுதான் அவரது கோபத்துக்கு காரணம்.
அலோபிசியா வியாதி என்றால் என்ன?
அலொபிசியா ஏரியட்டா என்பது உங்களது நோயெதிர்ப்பு முறை தலைமுடி வேர்க்கால்களைப் பாதிக்கும் ஒரு வினோதமான வியாதி. அது தலைமுடி உதிர்வதை பல மடங்காக அதிகரிக்கும் என்கிறது அமெரிக்காவின் ஹெல்த் & ஹியூமன் சர்வீசஸ் டிபார்ட்மெண்ட்
இந்த மாதிரியான நிலையில் நம்முடைய தலை மற்றும் முகம் பாதிக்கப்படும் என்றும் தெரியவந்திருக்கிறது. பொதுவாக இந்த வியாதி இருந்தால், சின்ன சின்ன வட்டமாக, தலைமுடி உதிர ஆரம்பிக்கும். ஆனால் இந்த முடி உதிரும் பிரச்னை உடல் நல ஆரோக்கியத்தைப் பாதிப்பது இல்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம்.