சென்னை மாநகர மாமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி…
விஷச் சாராயம் அருந்தி 22 பேர் இறந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களுக்கு அரசு தலா 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகை அறிவித்திருக்கிறது. இப்படி கருணைத் தொகை வழங்குவது கள்ளச் சாராயத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என கண்டனங்கள் எழுந்துள்ளன. நீங்கள் இந்தக் கருணைத் தொகை கொடுப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
ரொம்ப வருந்தத்தக்கது, கேலிக்குறியது. நிச்சயமாக இது மிகப்பெரிய தவறு. கள்ளச் சாராயம் குடிப்பவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. இதில் பெரிய கேலிக்கூத்து கள்ளச் சாராயம் விற்றவரையே ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து அவருக்கும் நிவாரணம் அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்றார்கள். ஆனால், என்ன நடக்கிறது? 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில், ஸ்டெர்லைட், நீட், சாத்தான்குளம் சம்பவம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலையில் இருந்து போராடிய போராளிகள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள். சினிமாக்காரர்களே எத்தனை பேர் அப்போது பேசினார்கள். இப்போது சத்தமே காணோமே. திமுகவின் உண்மையான முகம் இன்று தெரிந்துவிட்டது. தமிழக மக்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். ஏன் இவர்களுக்கு ஓட்டு போட்டோம் என்று யோசிக்க வேண்டிய நேரம் இது.
‘ஏழை மக்கள்… குடும்பத்தில் சம்பாதிப்பவர் இறப்பால் அவதிப்படும். அதனால் அரசு பணம் கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல் இது அரசின் தவறால் ஏற்பட்ட சம்பவம். அதனால் பணம் கொடுக்கிறது’ என்று ஆளும் கட்சி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அரசின் தவறு என்று அவர்களே ஒப்புக்கொண்டால் ராஜினாமா செய்துவிட்டு போகவேண்டியதுதானே. வக்காலத்து வாங்குவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
எல்லா இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் வாங்காமல் இது போன்ற விஷச் சாராயத்தை ஏதோ சிலர் வாங்கியதை அரசின் தவறாக பார்க்க முடியுமா என்றும் ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் கேட்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் கடமையை சரியாக செய்யாத உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல்வரே நேரில் சென்று பார்த்திருக்கிறார். அரசு தரப்பில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லலாமா?
முதலமைச்சர் நேரில் சென்று பார்த்ததை எப்படி நடவடிக்கை என்று சொல்லமுடியும்? இந்த தவறு நிகழாமல் அவர் பார்த்திருக்க வேண்டும். காவல்துறை அவர் கையில்தானே இருக்கிறது. ஒன்று, இவ்வளவு நடப்பது அவர்களுக்கு தெரியாமல் தூங்கிக்கொண்டு இருந்திருக்க வேண்டும்; அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் நிர்வாக சீர்கேடுதான் இது.
எடப்பாடியார் ஆட்சியின் போது இதே முதலமைச்சர் என்ன பேசினார்? சாத்தான்குளம் சம்பவத்தில் எவ்வளவு பேசினார். இப்போது காவல்நிலைய கஸ்டடி மரணங்கள் நடக்கவில்லையா? பல்லு பிடுங்கிய சம்பவத்தில் இதுவரை உண்மை வெளிவரவில்லையே.
கள்ளச் சாரயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை பார்க்க ஓடிய முதலமைச்சர், முக்கொம்பில் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த வேத பாடசாலை மாணவர்களைப் பற்றி ஏன் இன்னும் வாயே திறக்கவில்லை. அதுவும் அரசின் தவறால் நிகழ்ந்ததுதான். அதே நாளில் நடந்ததுதான். அதிகாலை ஆற்றில் அந்த மாணவர்கள் குளிக்கும்போது, திடீரென அணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்துவிட்டதால், தண்ணீரில் மூழ்கி அவர்கள் இறந்துவிட்டார்கள். அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? பிராமணனாக பிறந்ததால் அந்த குழந்தைகள் பற்றி ஒருவர்கூட வாய் திறக்கவில்லை. கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்தினர் கஷ்டப்படுவார்கள் என்றால், இந்த ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் கஷ்டப்படமாட்டார்களா? ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் வெண்ணெய் என்பது இதுதான்.