No menu items!

அமைச்சர் மஸ்தான் மாற்றப்படுகிறாரா? – மிஸ் ரகசியா

அமைச்சர் மஸ்தான் மாற்றப்படுகிறாரா? – மிஸ் ரகசியா

“கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் போறது சந்தேகம்னு சொன்ன. ஆனா இப்ப அவர் போகப் போறதா தகவல் வந்திருக்கே?” என்று ஆபீசுக்குள் வந்தபோதே ரகசியாவைச் சீண்டினோம்.

“போகமாட்டார்னு சொல்லலியே.. போகலாமா வேணாமான்னு யோசிக்கறார்னுதானே சொன்னேன். இப்ப ராகுல் காந்தி கண்டிப்பா வரணும்னு அவர்கிட்ட சொல்லி இருக்கார். அவர் மட்டுமில்லாம காங்கிரஸ் தலைவர் கார்கே, முதல்வரா பதவியேற்கப் போற சித்தராமையான்னு பலரும் இந்த நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி முதல்வரை வற்புறுத்தி இருக்காங்க. அவங்க அழைப்பை தட்ட முடியாமத்தான் முதல்வர் பெங்களூருவுக்கு போறார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு போறதால கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி பத்தின ஆலோசனைக் கூட்டத்தை 22-ம் தேதிக்கு தள்ளி வச்சிருக்கார்.”

“கட்சிக்காரங்க மேல கோபமா இருந்த முதல்வர் இப்ப கூல் ஆகிட்டாரா?”

“கள்ளச்சாராய விஷயம் அவரோட கோபத்தை இன்னும் அதிகமாக்கி இருக்கு. ‘அமைச்சர் மஸ்தானுக்கு கள்ளச்சாராய வியாபாரிகளோட இருக்கிற தொடர்பைப் பத்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதா’ன்னு பொன்முடிகிட்ட கோபப்பட்டிருக்கார். பதிலுக்கு, ‘உளவுத்துறைக்கு இந்த விஷயம் தெரியுமே. அவங்க ஏன் சொல்லலை’ன்னு பொன்முடி கேட்டிருக்கார். அப்பவும் விடாத முதல்வர், ‘அவங்க சொல்றது இருக்கட்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் இது கெட்ட பெயர் கொடுக்கும்னு தெரிஞ்சும் நீங்க மறைச்சிருக்கலாமா? அதை விட்டுட்டு இப்படி எதிர்க் கேள்வி கேக்கறீங்களே’ன்னு பொன்முடிக்கு டோஸ் விட்டிருக்கார்.”

“அதுக்கு பொன்முடி என்ன சொன்னாராம்?”

“மஸ்தான் பத்தி முன்னாடியே நான் சொல்லி இருப்பேன். ஆனா அவரைப் பிடிக்காம நான் அப்படி சொன்னதா நீங்க நினைக்கலாம். அவரேகூட அப்படி உங்களை நம்பவைக்கலாம் அதனாலதான் நான் சொல்லலைன்னு பொன்முடி சொல்லி இருக்காரு. ஆனா முதல்வர் அதை ஏத்துக்கல. அனேகமா மந்திரிசபையில அடுத்து விழப்போற விக்கெட் மஸ்தானோடதா இருக்கும்னு பேசிக்கறாங்க.”

“தன் மேல சொல்ற குற்றச்சாட்டுக்களை மஸ்தான் மறுத்திருக்கிறாரே?”

“ஆமாம், என் கூட புகைப்படம் எடுத்ததெல்லாம் குற்றமானு கேட்டிருக்கிறார். இது மாதிரி பலர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்னு சொல்றார். அதோட நிக்காம அந்த ராஜா என்கிறவர் பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் உறவினர்னு வேற சொல்றார். கள்ளச்சாராய விஷயத்துல தன் பேரு மாட்டிக்கிட்டதுல ரொம்ப டென்ஷனா இருக்கிறாராம். உதவியாளர்கள்கிட்ட புலம்பியிருக்கிறார் தன்னையும் நீக்கிடுவாங்கனு பயப்படுறார்”

“நெருப்பில்லாம புகையுமா? சரி, ஏற்கெனவே அமைச்சர் பதவியில இருந்து நாசர் நீக்கப்பட்டிருக்கார். இப்ப மஸ்தானையும் நீக்கினா இஸ்லாமியர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா?

“நியாயமான கேள்வி. அதுக்குத்தான் அதே சமூகத்தைச் சேர்ந்த தகுதியான சட்டமன்ற உறுப்பினரை முதல்வர் தேடிட்டு இருக்கார். முதல்வர் முடிவு பண்னதும் அமைச்சரவை மாற்றம் மீண்டும் இருக்கும்”

”முதல்வர் இப்படி அதிரடியாக மாற்றங்கள் செய்வதை அமைச்சர்கள் விரும்பலனு சொல்றாங்களே. குறிப்பா ஐஏஎஸ் அதிகாரிகளை மாத்தினது பல அமைச்சர்களுக்குப் பிடிக்கலையாமே?”

“உண்மைதான். சில அமைச்சர்களுக்கு தங்களோட துறை செயலாளர்களை மாற்றியது வருத்தத்தை கொடுத்திருக்கு. நமக்கு தோதா இருந்தவரை மாத்திட்டாங்களேன்னு புலம்பறாங்க. இப்படி அதிருப்தியில இருக்கற அமைச்சர்கள்ல எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் ஒருத்தர். தன்னோட துறையில இருந்து மாத்தின செயலாளரை திரும்பவும் வேணும்னு கேட்டு முதல்வர் கிட்ட நின்னிருக்கார். அதைக் கேட்ட முதல்வர், ‘அதிகாரிங்க எங்களை மதிக்கறதில்லைனு சொல்றீங்க. ஆனா மாத்தினா ஏன் மாத்தினேன்னு கேட்கறீங்க. இதே வேலையாப் போச்சு. யார் அதிகாரியா இருந்தா என்ன? நீங்கதானே அமைச்சர். நீங்க சொல்றதைத்தானே அவங்க கேட்கப் போறாங்க’ன்னு சொல்லியிருக்கார். மூத்த அமைச்சரான அவருக்கு நடந்ததைக் கேள்விப்பட்டதும் மத்த அமைச்சர்கள் கப்சிப்னு ஆகிட்டாங்களாம்.”

”முதல்வர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசரா இருப்பார் போல. ஆமா, டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்தப்ப ஆரம்பத்தில் எதிர்த்த பூண்டி கலைவாணன் தரப்பு இப்ப அமைதியாகிடுச்சே?”

“அவரைச் சமாதானப்படுத்தற பொறுப்பை டி.ஆர்.பாலுகிட்டயே கொடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து பூண்டி கலைவாணன், திருவையாறு சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன் ஆகிய மூவர்கிட்டயும் டி.ஆர்.பாலு பேசியிருக்கார். ராஜாவோட பதவிக்காக நான் சிபாரிசெல்லாம் செய்யல. மதல்வர்தான் என் மகனை தேர்வு செஞ்சிருக்கார். உங்களுக்கு தேவையானதையெல்லாம் ராஜா நிச்சயம் செய்து கொடுப்பார். உங்களுக்கு என்ன வேணும்னாலும் அவர்கிட்டயோ இல்லை என்கிட்டயோ தாராளமா கேட்கலாம்’னு சொல்லியிருக்கார் டி.ஆர்.பாலு. பூண்டி கலைவாணன் தரப்பும் இதை ஏற்று சமாதானம் ஆகியிருக்கு.”

“செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு தடை இல்லைன்னு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கே? அவருக்கு அமைச்சரவைல இடம் இருக்குமா?”

“ இந்த வழக்கு திமுகவுக்கு பெரிய பின்னடைவாயிடுமோன்னு திமுக தலைமை யோசிக்குது. டெல்லி துணை முதல்வர் சிசோடியாவை கைது செஞ்சது மாதிரி செந்தில்பாலாஜியையும் கைது செய்யலாம்னு அவங்க நினைக்கறாங்க. ஆனா செந்தில் பாலாஜியை இப்ப மாத்தினா குற்றச்சாட்டு உண்மைன்ற மாதிரி ஆகிடும். என்ன செய்யறதுனு முடிவெடுக்காம இருக்காங்க. விசாரணை எப்படி போகுதுனு பார்த்துட்டு முடிவெடுத்துக்கலாம்னு முதல்வருக்கு ஆலோசனைக் கூறப்பட்டிருக்கு. செந்தில் பாலாஜியை வைத்துதான் நாடாளுமன்றத் தேர்தல்ல கொங்கு மண்டலத்தைப் பிடிக்க முடியும்னு திமுக் தலைமை நம்புது. அவருக்கு சிக்கல்னா அது நாடாளுமன்றத் தேர்தலையும் பாதிக்கும்னு நினைக்கிறாங்க. ஆனா ஒரு விஷயம், செந்தில் பாலாஜிக்கு பிரச்சினைனதும் சில மூத்த அமைச்சர்கள் ஸ்வீட் கொடுக்காத குறையா கொண்டாடிட்டு இருக்காங்க.”

”லைகா நிறுவனத்தில் நடந்த சோதனை பற்றி ஏதாச்சும் தெரியுமா?”

“பணப்பரிவர்த்தனை பத்தின விவரங்களை அமலாக்கத் துறை விசாரிச்சப்ப, உதயநிதி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு செய்த பணப்பரிவர்த்தனை பற்றி சில விவரங்கள் தெரிய வந்திருக்கு. இப்ப அந்த அறக்கட்டளை உறுப்பினரான வழக்கறிஞர் பாபுவை விசாரிச்சுட்டு இருக்காங்க. அவங்களோட அடுத்த குறி உதயநிதி ஸ்டாலினா இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கு.”

”மத்திய துறைகள் எல்லாம் திமுகவையே சுத்தி சுத்தி வராங்க போல…நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால அதிரடி நடவடிக்கைகள் இருக்குமா?

“இருக்கும் என்கிறது டெல்லி வட்டாரங்கள். அதனாலதான் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு கூட போகாம இருந்துரலாமானு யோசிச்சிருக்காங்க. அங்க போனா பாஜகவின் கோபம் அதிகமாகும்னு முதல்வருக்கு ஆலோசனை சொல்லப்பட்டிருக்கு. ஆனா, முதல்வர் வேற மாதிரி யோசிச்சிருக்கிறார். அங்க போகலனாலும் நடவடிக்கை எடுப்பாங்க. பதவியேற்பு விழாவுக்கு போனா எதிர்க் கட்சிகள் நட்பாவது கிடைக்கும், அவங்க நம்ம துணைக்கு நிப்பாங்கனு சொல்லியிருக்கிறார்.”

“திமுக செய்திகள் போதும். அதிமுக ஆபீஸ் பக்கம் போனியா? மாவட்ட செயலாலர்கள் கூட்டத்துல என்ன நடந்துச்சு?”

“இந்த கூட்டத்துக்கு முன்னால எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமிகிட்ட எடப்பாடி பேசிட்டு இருந்திருக்கார். அப்ப கே.பி.முனுசாமி, ‘கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சியை இழந்துடுச்சு. இதுக்கு முன்னாலகூட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களைப் பிடிச்சுதான் ஆட்சிக்கு வந்தது. பாண்டிச்சேரியிலும் கோக்குமாக்கு வேலை செஞ்சுதான் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்குது. அதனால நாம இனி அவங்களைப் பார்த்து பயப்பட வேணாம்’னு சொல்லி இருக்கார். ஆனா அவருக்கு நேர்மாறா பேசின எஸ்.பி.வேலுமணி, ‘டெல்லியில திரும்பவும் பாஜக ஆட்சிதான் வரும். அவங்களும் நம்மகிட்ட சரியாத்தான் நடந்துக்கறாங்க. சமீபத்துல அமித் ஷாவை சந்திச்சப்பகூட அவர் கவுரவமாத்தான் நடத்தினாரு. அதனால கே.பி.முனுசாமி பேச்சைக் கேட்டு தேவையில்லாம பாரதிய ஜனதாவை பகைச்சுக்க வேணாம்’ன்னு சொல்லி இருக்கார். ரெண்டு தரப்பு கருத்தையும் கேட்டுக்கிட்ட எடப்பாடி, கடைசியில வேலுமணி சொன்னபடி பாஜகவை அனுசரிச்சு போக முடிவெடுத்திருக்கார்.”

“மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துல எடப்பாடி என்ன பேசினாராம்?”

“இப்போது இருக்கும் சூழ்நிலை நமக்கு சாதகமா இருக்கு. இதைப் பயன்படுத்திக்கணும். உறுப்பினர் சேர்க்கை பூத் கமிட்டி அமைத்தல் வேலைகளை நானே நானே மாவட்ட வாரியா மாவட்ட அலுவலகத்துக்கு வந்து ஆய்வு செய்வேன். என்னை ஏமாத்த நினைச்சா மாவட்ட செயலாலர் பதவியில இருந்து நீக்கவும் தயங்க மாட்டேன்னு மாவட்ட செயலாலர்கள் கூட்டத்துல எடப்பாடி பேசியிருக்கார்.”

“எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது தைரியம் அதிகமாகிவிட்டது போல!”

“ஆமாம். பன்னீர்செல்வம் பலவீனமானதுதான் இந்த தைரியத்துக்கு காரணம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...