நோயல் நடேசன்
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
இந்தியாவில் சுத்தத்தை ஆராதிப்பவர்களாகச் சீக்கியர்களை சொல்வார்கள். அதை இந்த வட இந்திய பயணத்தில் நான் நேரில் பார்த்தேன்.
அமிர்தரஸில் பொற்கோவில் எனக்கு மிகவும் விரும்பி பார்க்க வேண்டிய பிரதேசமாக இருந்தது. மாலையில் பொற்கோவிலை அடைந்தோம். மிகவும் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் தங்க கோபுரம் தகதகவென மின்னியது. சுற்றியிருந்த வாவியில் அந்தக் காட்சி பிரதிபலித்து கண்களைக் கவர்ந்து செல்லும் காட்சியாய் எம் முன்னே விரிந்தது.
பொற்கோயிலில் மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே பூசாரி, முல்லா, பாதிரி போல் எவருமில்லை. அங்குள்ளவர்கள் எல்லோரும் வேதனமற்று வேலை செய்தார்கள். என்னோடு வந்த சுவிஸ், ஆங்கிலய பெண்கள் இருவரும் இரு மணி நேரமாக சப்பாத்தி செய்ய உதவினார்கள். அங்குள்ள உணவையே நாம் உண்டோம். சப்பாத்தி, பருப்பு, சர்க்கரை சோறு என மிகவும் எளிமையான உணவுதான். ஆனால், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து உணவூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
நடந்து செல்லும்போது, எனக்கு முன்பு தரையில் ஒரு இலை வந்து விழுந்தது. உடனே ஒரு சீக்கியப் பெண் அதை குனிந்து எடுத்தார். அப்படி ஒரு சுத்தம்!
பஞ்சாபிய மகாராஜா ரன்ஜித்சிங்கால் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு செப்பு தகடுகளால் கூரை வேயப்பட்டு பின்னர் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட கோயிலுள்ளே ‘ஆதிகிரந்தம்’ எனப்படும் சீக்கிய குருவால் எழுதப்பட்ட புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்பதற்குப் பல மணிநேரம் காத்து நிற்கவேண்டும். இரவு கோயிலைப் பல முறை பார்த்துவிட்டு அடுத்தநாள் அதிகாலை மீண்டும் வந்தபோது, அப்போதும் அனேகர் வரிசையில் காத்து நிற்பதை காணமுடிந்தது. பக்தியோடு நிற்பவர்கள் மத்தியில் வெறுமனே உல்லாசப் பயணியாய் காத்து நிற்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை.
மதியத்தில் சென்று ‘ஜாலியன் வாலாபாக்’ பூங்காவைப் பார்த்தேன். ஒரு விதத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சமடைவதற்கு உந்துசக்தியாக இருந்த ஒரு அவலச் சம்பவம் அங்கே நடந்தது! அதே வேளையில் ஆங்கிலேயர்களின் சுயரூபத்தை தோலுரித்த சம்பவமும் அதே. மிகவும் சிறிதான அந்த பூந்தோட்டம், மதில்களால் சுற்றிக் கட்டப்பட்டது. வெளியே செல்லவும் உள்ளே வரவும் ஒரு வாசல் மட்டுமே. அங்கு கொண்டாட்டத்திற்குத் திரண்ட மக்களை தங்களுக்கு எதிராக போராட வந்தவர்கள் என நினைத்து குண்டுகள் தீரும்மட்டும் சுட்டார்கள் சிப்பாய்கள். 379 பேர் கொல்லப்பட்டு 1200 பேருக்கு மேல் காயமடைந்ததாக அரசு அறிக்கை சொல்லியது. ஆனாலும் இறந்தவர்கள் தொகை இதைவிட அதிகமாக இருக்குமென சொல்லப்பட்டது. அங்கு பலர் பயத்தில் அங்கிருந்த ஒரு கிணற்றுக்குள் பாய்ந்து காயமடைந்தனர். அந்த கிணறு தற்பொழுது கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது.
சுடப்பட்ட குண்டுகளின் துளையை சுவரில் இப்போதும் பார்க்கலாம். மிகவும் பெரிய குண்டுகளாக அவை இருந்தன. காத்தான்குடி மசூதிக்குப் போனபோது விடுதலைப் புலிகளால் அங்கு நடந்த படுகொலையும் அப்போது அவர்கள் சுட்டதால் சுவரில் பதிந்திருந்த குண்டுகளின் துளைகளும் எனக்கு நினைவுக்கு வந்தன.
ஜாலியன் வாலாபாக்கில் மக்களைக் கொலை செய்ய ஆங்கிலேய ராணுவ அதிகாரி உத்தரவிட்டாலும் ஆயுதங்களைப் பாவித்தவர்கள் இந்தியர்களே! கூர்க்கா, பாலுசிஸ்தான் படைவீரர்களும் இதில் அடங்கும். தற்போது அங்கு ஒரு அடையாள தூணும் புதிதாக இரண்டாவது பாதையும் உள்ளது. இந்த இரண்டாவது பாதை அக்காலத்தில் இருந்திருந்தால் எத்தனை உயிர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற சிந்தனை மனத்தில் எழாமலில்லை.
மாலையில் இந்திய பாகிஸ்தான் (ATTARI-WAGAH Border) எல்லையில் நடக்கும், எல்லைக் காவலர்களது மாற்றத்துடன் நாடுகளின் கொடி இறக்கும் நிகழ்வுக்கு போயிருந்தோம். கிட்டத்தட்ட 3 மணி நேர நிகழ்வு பொலிவூட் படம் அல்லது T-20 கிரிக்கட் விளையாட்டுபோல் தொடர்ச்சியாக எந்த தொய்வில்லாது எங்களை இருக்கையில் வைத்திருந்தது அந்நிகழ்வு. இதை நடத்துபவர்கள் பாகிஸ்தான் – இந்தியா என்ற இரு நாடுகளின் எல்லைப் படையினரே.
ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்த நிகழ்வில் தொடர் அணிவகுப்புடன் தேசபக்தி பாடல்கள் ஒலித்தபடி இருக்கும். பாகிஸ்தான் பக்கத்தில் ஒரு காலில்லாத இராணுவ வீரர், பாகிஸ்தானின் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி பம்பரமாகச் சுழன்ற காட்சி எனது மனத்தில் பல காலம் பசுமையாக நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். அவர் நிச்சயமாக ஏதாவது துப்பாக்கி ரவையால் அல்லது கண்ணி வெடியால் காலை இழந்தவராக இருக்க வேண்டும். முப்பத்தைந்து வருடங்கள் முன்பு ஈழப் போராளிகளில் காலிழந்த பலரைப் பார்த்தேன். எதிரியால் மட்டுமல்ல பயிற்சியின்போதும் விபத்தாலும் இவை நடந்ததுண்டு. இளங்கோ என்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர் ஒருவர் கைகுண்டை எறிந்து பழகும்போது குண்டு வெடித்து காலிழந்தவர். பலகாலம் சென்னையிலிருந்த அவரை சந்தித்தேன். இளைஞரான அவரைப் பார்த்தபோது போரையும் சண்டையும் வெறுப்பதை விட வேறு என்ன செய்யமுடியும்?
அமிர்தசரஸில் இருந்து புறப்பட்டு ரயிலில் ஹரித்துவார் சென்றோம். பல காலத்தின் பின் இரவு ரயில் பயணம். வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. என் முன்பாக ஒரு குழந்தையுடன் பஞ்சாபி பெண்ணெருவர் இருந்தார். நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்க நினைக்கும் அழகான முகத்தோற்றம் கொண்ட பெண்மணி. கழுத்தின் கீழ் உப்பிய பலுனாக உடல் வாகு.
அந்தப் பெண்ணின் முக அழகிற்கு அப்பால், அவள் எனது கவனத்தைக் கவர்ந்ததன் காரணம், தனது ஒரு காலை கணவனது மடியில் அவர் போட்டிருந்ததுதான்! அது இந்தியாவில் நான் பார்த்திராத காட்சி. இரவு பத்து மணியளவில் மேல் அந்தப் பெண் பெர்த்தில் சாய்ந்து இலகுவாக உறங்கிவிட்டார். ஆனால், மற்றவர்கள் உறங்க முடியாதபடி அவரது உரத்த குறட்டை சத்தம் அந்த ரெயில் பெட்டியை நிரப்பியதுடன் ரயிலின் ஓசையை அடக்கி வாசித்தது!
எனக்கு மேலுள்ள பேர்த்தில் படுத்த ஆஸ்திரேலியன் ஜிம்மி, “எனக்கு தலை மேலே யாரோ சுத்தியலால் அடிப்பது போலிருக்கிறது” என்று நகைச்சுவையாக என்னிடம் சொல்லியபோது, “பாவம், உடல் பருமனே காரணம்” என்றேன். அந்த பஞ்சாபி பெண்ணின் தயவில் நாங்கள் சிவராத்திரி விரதமிருந்தபடி ஹரித்துவார் வந்து சேர்ந்தோம்.
ஹரித்துவாரில் இருந்து எங்களது பயணம் வேன் ஒன்றில் யோகாசனத்தின் தலை நகரெனச் சொல்லப்படும் ரிசிகேஷ் நோக்கி தொடங்கியது.
ரிசிகேஷத்தில், கங்கைநதி அமைதியாக சலசலத்து தெளிவாக ஓடியது. காசியைப்போல் கூட்டம் அதிகமில்லை. சில மணிநேரம் கரையிலிருந்தபடியே கால்களை நீரில் நனைத்தபடி இருந்தேன். எங்கு பார்த்தாலும் யோகா சொல்லிக்கொடுக்கும் பாடசாலைகள். மறு நாள் காலையில் இரு மணி நேர வகுப்பிற்கு பணம் கொடுத்து யோக பழகுவதற்கு சியாமளா மற்றவர்களுடன் சென்றார். நான் அவர்களுடன் இணைந்து கொள்ள மறுத்துவிட்டேன். அதைவிட மலையில் நடத்தல், ஆற்றில் செல்லுதல் என பல சுவாரசியமான விடயங்களுக்கு ரிசிகேஷ் புகழ்பெற்றிருந்தது.
மாலையில் நாங்கள் கங்கைக் கரையில் நடந்த 2023 சர்வதேசிய யோகா மாநாட்டிற்கு சென்றோம். ஒரு வித அரசியல் மாநாடுபோல் ஒருவரை ஒருவர் புகழ்வதும் பொன்னாடை போர்த்துவதுமாக இருந்தது. அதற்கு மத்திய அரசு அமைச்சர் ஒருவரும் வந்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள், கொல்லனது பட்டறையில் அகப்பட்ட ஈயாக, வேறுவழியில்லாது கங்கை நதியோரத்து படிகளில் குந்தியிருந்தேன்.
அடுத்த நாள் நாங்கள் சென்ற இடம் மகேஸ்யோகி தங்கியிருந்த, 1968இல் அவருடன் பீட்டில் இசைக் குழுவினர் இணைந்து கொண்ட ஆச்சிரமம். அது தற்போது கங்கைகரையில் கைவிட்ட நிலையில், இந்திய வனத்துறையினரால் நிர்வாகிக்கப்படுகிறது. இன்றும் பழைய நினைவுகளுடன் பல உல்லாசப் பிரயாணிகள் இங்கே வந்துபோகிறார்கள்.
ரிசிகேஷ் அருகே உள்ள மலையருகே, ஒரு முகாம் போன்ற பகுதியில் எங்கள் பயணத்தின் கடைசி இரவைக் கழித்தோம். மலைப் பகுதி என்றபோதும் நல்ல வசதிகளுடன் அது இருந்தது. மறுநாள் மீண்டும் டில்லி வந்தோம். எங்களுடன் வந்த ஜுடி இருமல் குணமாகிவிட்டதால் இப்போது அமைதியாக இருந்தார். ஆனால், வழிகாட்டியாகிய வர்ஷாவின் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. என்ன என்று கேட்டபோது, பயணம் பற்றிய ரிவியூவில் ஜுடி பத்துக்கு மூன்று புள்ளிகள் மட்டுமே வழங்கினார் என்றார். நாங்களெல்லாம் பத்திற்கு பத்து புள்ளிகள் வழங்கி சரி செய்கிறோம் என வர்ஷாவிடம் மற்றவர்களுக்கும் சேர்த்துச் சொன்னேன்.
இந்த பயணத்தில் எந்தக் குறையில்லாதபோதும் வட இந்திய உணவு மட்டும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எப்பொழுது சென்னை திரும்புவோம், இட்லி தோசையை பார்போம் என்ற ஏக்கம் மனத்திலிருந்தது. சென்னைக்கு வந்ததும் நீல வானமும் வெண்முகிலும் பார்ப்பதற்கு மகிழ்வாக இருந்தன!
முற்றும்