No menu items!

நம் ஆதி மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் – நோயல் நடேசன்

நம் ஆதி மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் – நோயல் நடேசன்

தென் ஆப்பிரிக்கா பயணம் – 3

உயிரியல் பரிணாமக் கொள்கையின் தந்தையான சார்லஸ் டார்வின்தான், உலகின்  பல இடங்களுக்கும் சென்று ஆய்வுகள் செய்து தற்போதைய ‘பரிணாமம்’ என்ற கொள்கையை உருவாக்கியவர். இவர் ஆப்பிரிக்காவை மனித சமூகத்தின் தொட்டில் எனச் சொல்கிறார். டார்வின் சொன்னதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு இந்த தென் ஆப்பிரிக்கா பயணத்தில் கிடைத்தது.

ஜோகன்னஸ்பர்க்கின் அருகாமையில் உள்ள ஸ்ரேக்பொன்ரயின் என்னும் இடத்தை மனிதகுலத்தின் ஆரம்பத் தொட்டிலாக வர்ணிக்கிறார்கள். நாலு மில்லியன் வருடத்திற்கான மனித எலும்புகளும் உயர்விலங்குகளின் எலும்புகளும் அதன் தடயங்களும் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பல சுண்ணாம்புக் குகைகள் அமைந்திருக்கின்றன. இதனால் எலும்புகள் பழுதடையாது பாதுகாப்பாக இருக்கின்றன.

இந்தக் குகைகளுக்குள் இப்போது செல்வது மிகவும் கடினமாக இருந்தது. குனிந்தும், சிலவேளைகளில் முழங்காலிலும் போக வேண்டியிருந்தது. இந்தக் குகைகளுக்கு அருகாமையில் மிக அழகான மனித வரலாற்று மியூசியத்தை அமைத்துள்ளார்கள்.

சுண்ணாம்புக் குகைகள் அமைந்த இந்த இடத்தில், 1890-ம் ஆண்டில் இருந்து அகழ்வாராய்ச்சி நடக்கிறது.  இங்கு இன்று வரை ஆதிகால மனிதர்களின் அடையாளங்கள் கிடைத்து வருகின்றன. இந்தப் பகுதி தென்னாப்பிரிக்க விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தை (University of Witwatersrand) சேர்ந்தது. இங்கு தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நமது பூமி கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள் வயதானது. ஆரம்ப அக்கினிக்கோளத்தின் வெப்பம் குளிர, 4 பில்லியன் வருடங்களின் ஆரம்பத்தில் நீரில் எளிய உயிரினங்கள் உருவாகின. அதன்பின்னர் நிலத்தில் உயிரினம் உருவாக பல காலங்கள், அதாவது 350 மில்லியன் வருடங்கள் சென்றன.

அதன்பின்னர், குட்டிகளை ஈன்று பாலைக் கொடுக்கும் முலையூட்டிகள். இவை 200 மில்லியன் வருடங்கள் வாழ்கின்றன. பிறைமேட்ஸ்  (Primates) என்னும் வானரங்கள் 65 மில்லியன் ஆண்டுகளும், ஏப்ஸ் (Apes) எனும் மனிதக் குரங்கு 30 மில்லியன் வருடங்களும் இந்தப் புவியில் வசிக்கின்றன.

அதன் பின்னர் மனித மூதாதைகள். இவர்கள் 7.5 மில்லியன் ஆண்டுகளும், பின்னர் வந்த தற்கால மனிதர்கள் 0.1 மில்லியன் (ஓரு லட்சம்) வருடங்களும் வாழ்கிறார்கள். தற்கால மனிதர்களுக்கு மிகவும் நெருங்கிய உருவ அமைப்புள்ளவர்களான, நியண்டதால் (Neanderthal) என்பவர்கள் 35,000 வருடங்கள் வரையும் ஐரோப்பவில் குளிர்ப் பிரதேசங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். நியண்டதால்களும் தற்கால மனிதர்களும் ஓரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

பல ஆதிமனித தடயங்கள் கிழக்காப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆதிமனிதனின் பல பரிணாமங்கள் இந்தப் பகுதியிலே நடந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கிய காரணம் 20 மில்லியன் வருடங்கள் முன்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் நடந்த நிலக்கண்டங்கள் நகர்வு. இதனால் ரிப்ட் பள்ளத்தாக்கு (Rift Valley) என்ற பிரதேசம் உருவாகியது. இது வட ஆப்பிரிக்காவில் இருந்து எத்தியோப்பியா, கென்யா, தன்சானியா என ஒரு முதுகுத் தண்டுபோல தெற்கே மொசாம்பிக்  வரை ஓடுகிறது. இந்த காண்டினெண்டல் ரிப்ட் (Continental rift) பள்ளத்தாக்கின் கிழக்குப் பக்கத்தில் மலைகள் உருவாகின்றன. கென்யா மலை, கிளிமஞ்சரோ இப்படி உருவாகிய மலைகள்தான். இந்து சமுத்திரத்தின் ஈரலிப்பான காற்று இப்படி உருவான மலைப் பிரதேசத்தால் தடுக்கப்படுவதால் இந்த ரிவ்ட் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதி வறண்டு போகிறது.

பூமத்திய ரேகையின் இரு பக்கத்திலும் இருந்த ஆப்பிரிக்காவின் பெரிய பிரதேசம் இதற்கு முன்பு வளமாக மழை பெற்றதால் செழிப்பாக இருந்த நிலை இந்தக் கண்ட நகர்வால் மாறுகிறது. இதன்பின்பே ஆப்பிரிக்காவில் செழிப்பற்ற சவானா காடுகள் உண்டாகிறது. இதனால் இங்கு வாழ்ந்த உயிரினங்களுக்கு உணவு, இடம், பாதுகாப்பு என நெருக்கடி உருவாகிறது.

வளமாக இருந்த காலத்தில் இருபது வகையான மனிதக் குரங்கு வகைகள் இருந்தன. தற்போது மூன்று விதமான மனித குரங்குகளே உள்ளன (இரண்டு விதமான சிம்பான்சி, மற்றையது கொரில்லா). இதேபோல் ஏராளமான மிருகங்கள் அழிந்துவிட்டன.

இப்படியான நெருக்கடி நிலைமையே 7.5 மில்லியன் வருடங்கள் முன்பாக நம் மூதாதையர்களை இரண்டு கால்களை பாவிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளுகிறது. உணவுகள் குறைந்து வாழ்க்கை கடினமாகியதால் வாழ்வுப் போட்டியில் வெற்றிபெற இரண்டு கால்களை பயன்படுத்துதல், மூளை திறன் கூடுதல் ஏற்பட்டதாக விளக்கப்படுகிறது. இரண்டு கால்களால் ஆயுதம் தரிக்க, வேட்டையாட, ஓடுவதற்கு இலகுவாக இருக்கிறது.

 கொரில்லா,  சிம்பான்சி இரண்டும் பின்னங்கால்களால் நடக்கும்போது கை மூட்டுகளால் நிலத்தில் ஊன்றி (Knuckle walkers) நடப்பன. இதனால் ஆரம்ப மனித மூதாதையினரும் இப்படி இருந்திருக்கலாம் என நினைக்க முடிகிறது.

இரண்டு காலில் நடப்பதும் மூளை விருத்தியாகி கருவிகளைப் பயன்படுத்துவதும் நிகழ்ந்த பின்னர் மூன்றாவதாக தொண்டையில் உள்ள லரிங்ஸ் (Larynx) கீழிறங்கி மொழி விருத்தியாக்கியது. மனிதர்களின் மூளையில் மடிப்புகளை உருவாக்கி மிகவும் விருத்தியடைவதற்கு காரணமாக இருந்தது மொழிதான்.

தற்கால மனிதனின் மூளை 1350 (Cubic centre meter) கன செனடிமீட்டர்; குழந்தை பிறக்கும்போது 725 கன செனடிமீட்டர். ஆனால், நம் மூதாதையர்களது மூளை 500 – 700 கன செண்டிமீட்டர் இடையில் இருந்தது. அதாவது, தற்கால மனிதர்களின் மூளையில் மூன்றில் இரண்டு பகுதியை மட்டுமே கொண்டவர்களாகதான் நம் மூதாதையர்கள் இருந்திருக்கிறார்கள்.

மனிதக் குரங்களில் இருந்து மனிதர்களின் வித்தியாசம் நிறமூர்த்தத்தில் (டிஎன்ஏ) இரண்டு வீதம்தான். மேலும், 24 நிறமூர்த்தங்கள் உள்ள சிம்பான்சியில் ஏதோ காரணத்தால் மனிதர்களில் 23 சோடிகளாகியுள்ளது. ஆனால், சிம்பான்சியை விட மனிதர்களுக்கு தூரத்து உறவாக கொரில்லாவைதான் கணிக்கிறர்கள்.

புவி சூழலில் நடந்த மாற்றங்கள், ஆப்பிரிக்காவில் நடந்த மாற்றங்கள், உணவுகள் உட்கொள்வதில் ஏற்பட்ட மாற்றங்கள் என ஏராளமானவை புவி வரலாற்றில் நடந்தது மனித குலத்தை உருவாக்கும் நோக்கத்துடனா என்ற கேள்வியுடன் அந்த சுண்ணாம்புக் குகைகளை விட்டு வெளியே வந்தேன்.

மீண்டும் குருகர் தேசிய வனம் வருவோம். அங்கே சிங்கம் பார்த்ததைப் பற்றி சொல்லியிருந்தேன்.

சிங்கம், புலி, சிறுத்தை, ஜகுவார், பனிச் சிறுத்தை முதலான ஐவகை மிருகங்கள் ஒரே கிளையை சேர்ந்தவை. இவை எல்லாம் பந்தர் என்ற இனத்தை சேர்ந்தவை. பொது பேச்சுவழக்கில் பெரும் பூனைகள் எனவும் சொல்லப்படும்.

இந்தியாவில் பெரியார் தேசிய வனத்தில் 2014 ஜனவரியில் புலியை பார்க்க சென்றோம். இரண்டு நாட்கள் வாகனத்தில் சென்றபோதும் அங்கே புலி கண்ணுக்கு தென்படவில்லை. பின்னர் ஒரு வழிகாட்டியோடு நானும் மனைவியுமாக காட்டுக்குள் சில கிலோமீட்டர் கால்நடையாக சென்றபோது புலி வந்து சென்ற அடையாளத்தை மட்டும் பார்க்க முடிந்தது. அங்கே புதிதாக கிடந்த புலியின் மலத்தை பார்க்க முடிந்தது.

புலியின் மலம் என எப்படித் தெரியும்?

நாங்கள் பார்த்தபோது ஈரலிப்போடு காயாமல் மலம் நீள்வடிவில் அதாவது துண்டுகளாகாமல் இருந்தது. அதற்குக் காரணம் புலி தனது உடலை நாவால் நக்கி சுத்தம் பண்ணுவதால் உள்ளே செல்லும் மயிர்கள் இரும்புக் கம்பி காங்கிரீட்டை இணைப்பதுபோல் மலத்தை ஒன்றிணைக்கும். மேலும், பெரும்பாலும் இறைச்சியை உண்ட பின்பு வெளிவரும் மலத்தில் இரத்தத்தில் இருந்து இரும்புத் தாது படிவதனால் கருமையாக இருக்கும்.

இந்தியாவில் புலிப் புழுக்கையையாவது பார்க்க முடிந்தது. தென் ஆப்பிரிக்காவில் அதுவும் கிடையாதோ என நினைத்தேன்.

இந்நிலையில்தான் குருகர் பார்க்கில் ஒருநாள் மதிய நேரத்தில் ‘அதோ அந்த மரத்தில் சிறுத்தை இருக்கிறது’ என வழிகாட்டியும் சாரதியுமான மார்லின் சுட்டிக்காட்டியபோது அது எனக்குத் தெரியவில்லை. தொலைநோக்கி கேமராவால் பார்த்தபோது ஏதோ மங்கலாகத் தெரிந்தது. இங்கே வாகனத்தில் இருந்து இறங்க முடியாது என்பது கட்டுப்பாடு.

தொடர்ந்து எமது வாகனம் சென்றது. சிறுத்தைகளைப் பற்றிய விடயங்கள் மனதில் குமிழியிட்டன.

அமெரிக்காவில் நிறமூர்த்த குறைபாடால் (Melenistic defect) ) கருப்பு பந்தரையும், (Black Panther) ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் (Black Leopard) கருப்பு சிறுத்தைகளையும் காணமுடியும். ஆனால், சிறுத்தைகளைப் பார்ப்பது இலகுவான விடயமல்ல. மற்றைய வேட்டையாடும் மிருகங்களில் இருந்து சிறுத்தை வித்தியாசமானது. தனிமையாக கரந்துறைவதனாலும் வேட்டைக்கு இரவில் செல்லுவதாலும் இவற்றைப் பார்ப்பது கடினமானது.

சிறுத்தை பெரும்பாலும் ஆண்-பெண் சேர்க்கை காலத்தை தவிர்த்த காலங்களில் தனிமையாகவே பல கிலோமீட்டர் தூரம் திரிவது வழக்கம். பகல் நேரங்களிலும் மரங்களில் இலகுவாக ஏறி அமர்ந்திருப்பதால் இவற்றைக் கண்டுகொள்வது கடினம்.

ரோஜா மலரின் அமைப்பில் (Rossettes) புள்ளிகள் தலையில் இருந்து பின்பகுதி வரையில் உடலில் அமைந்திருந்தாலும் கால்களில் வட்டமான புள்ளிகளாகவும் வயிற்றுப்பகுதியில் எதுவும் அற்று மறைந்து விடுகின்றன. இந்தப் புள்ளிகள்தான் மரங்களில் தனியாகவும் கரந்துறைவதற்கும் இலைகளோடு இலைகளாக மறைந்திருக்கவும் உதவுகிறது.

சிறுத்தைகளின் மிருதுவான ரோமமும் அத்துடன் அதன் அழகிய தோலும்தான் காலம் காலமாக மனிதர்களின் வேட்டைப் பொருளாகின. மற்ற மிருகங்களை வேட்டையாடும் சிறுத்தைகளுக்கு மனிதர்கள் மட்டுமே எதிரி.

நீளமான உடலுடன் குட்டையான கால்களும் பரந்த முகத்தையும் கொண்டவை. வாலின் நுனியில் வெள்ளை நிறம். வாலை நிமிர்த்தியபடி புதர்களுக்குள்ளே செல்லும்போது வேட்டையாடவில்லை என்பது செய்தியாக இருப்பதால் மான் வர்க்க மிருகங்கள் போன்றவை அதனைப் புறக்கணித்துவிட்டு மேயும். புலியின் வால் கீழிருந்தால் அது வேட்டைக்குத் தயார் என்பதறிந்து மற்றைய மிருகங்கள் எச்சரிக்கையாகிவிடும்.

60 கிலோவில் இருந்து 90 கிலோ நிறையான ஆப்பிரிக்க சிறுத்தைகள் சிவப்பு பொன் மஞ்சள் மற்றும் இரும்பு நிறம் என பல்வேறு வர்ணத்தில் காணப்படுகின்றன.

பூனை போல் போத்தல் பிறஸ் போன்று முள்ளமைந்த ஆண் குறியால் உடலுறவில் பல தடவை ஈடுபட்டு கருத்தங்கிய பின்பு இரண்டரை மாதம் கர்ப்ப காலம். பெண் சிறுத்தைகள் பாறைகளின் இடைவெளிகள் கற்குகைகளில் சராசரியாக மூன்று குட்டிகளை ஈனும். ஆண் சிறுத்தை அந்தப் பிரதேசத்தை மற்றைய ஆண் சிறுத்தைகளில் இருந்து பாதுகாப்பதை மட்டும் செய்யும். குட்டிகளைக் கொன்றால் பெண் சிறுத்தை மீண்டும் உடலுறவுக்கு தயாராகும் இரகசியம் பற்றி அவை அறிந்து வைத்திருப்பது தந்தை சிறுத்தைக்கு தெரியும். அத்துடன் காட்டு நாய்கள் மற்றும் ஹைனா போன்றவற்றிலும் இருந்து குட்டிகளைப் பாதுகாப்பதும் அவசியம்.

உணவைப் பொறுத்தவரை சிறுத்தைகள் பல வகையான உணவு வகைகளை உண்பதால் பல நாடுகளில் வேறுபட்ட சுவாத்தியங்களில் வாழக் கூடியதாக உள்ளன. மான் வர்க்கத்திலிருந்து பன்றி, ஓணான், பறவைகள் மற்றும் மலத்தில் வாழும் வண்டுகள் என எதையும் தவறவிடாமல் உண்பன. மரத்தில் ஏற முடிவதால் குரங்குகளும் சிறுத்தைகளிடம் அகப்பட்டுக்கொள்ளும்.

சிங்கம் – கழுதைப்புலி (Hyena) என்பன சிறுத்தையால் வேட்டையாடப்பட்ட மிருகத்தை பறித்துண்பன. இதைத் தவிர்க்க தனது எடையிலும் மூன்று மடங்கு எடையான வேட்டையாடிய மிருகத்தை வாயால் கடித்தபடி மரத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து அதனால் சாப்பிட முடிகிறது. மிகவும் பலமாக விருத்தியாகியுள்ள தோள்த்தசைகள் இதற்கு உதவுகின்றன.

தென்னாப்பிரிக்காவில் சிறுத்தைகளுக்கு நல்ல எதிர்காலம் தெரிந்தது. இந்த நிலைமை மற்றைய தென்னாபிரிக்க நாடுகளிலோ உலகில் சிறுத்தைகள் வாழும் மற்றைய நாடுகளிலோ இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இந்தியாவில் காடுகள் அழித்து விவசாயம் செய்யப்படுவதால் சிறுத்தைகளின் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படும்போது வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. தென்னாபிரிக்காவில் உணவுக்குப் பஞ்சமில்லை என்பதால் இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை.

ஆனால், சிறுத்தைத் தோலை வீரத்தின் அடையாளமாக நினைப்பதால் கவசூலு நத்தால் பிரதேசத்தில் ஏராளமான சிறுத்தைகள் கொல்லப்படுவதும் அவற்றின் தோல்களை உரிப்பதும் நடைமுறையில் இருந்தது. தற்போது இவையும் குறைந்துவிட்டதால் சிறுத்தைகள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதாகவும் அவை அதிகம் குட்டிகளை ஈனுவதும் உறுதி செய்யப்படுகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுத்தைகள் எந்த மிருகத்தையும் பறவையையும் வேட்டையாடுவதாலும் இறந்த உடல்களை உண்பதாலுமே தொடர்ச்சியாக வாழ்கிறது. மற்ற மிருகங்கள் அதற்கு எதிரியில்லை. ஆனால், மனிதர்கள் காலம் காலமாக அவற்றை வேட்டையாடுவதால் மற்றைய நாடுகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டுவருகிறது.

உலகத்தின் பல நாடுகளில் சிறுத்தைகள் சிறிய உடலமைப்பு வித்தியாசத்துடன் வாழ்கின்றன. ஆனாலும் சிறுத்தைகளைப் பற்றி அதிக அளவில் ஆராய்ச்சிகள் தென்னாபிரிக்காவிலேயே நடந்திருக்கிறது.

ஜிம்பாப்வேயில் சிறுத்தைகளைப் பார்ப்பதற்கு இரவு வேளையில் வாகனத்தில் சென்றபோது பிரகாசமான வெளிச்சத்தை காட்டுக்குள் செலுத்தும்படி அந்த வழிகாட்டி கூறினார்.

வேட்டையாடி உண்ணும் மிருகங்களின் கண்களின் உள்ளே அமைந்திருக்கும் விசேட விழிப்படலம் (Tapetum Lucidum) பிரகாசமாகத் தெரியும். இந்த கண்ணின் அமைப்பு குறைந்த ஒளியில் பார்வையை அதிகப்படுத்தும். இதனால் இரவில் வேட்டையாடுவதற்கு உதவுகிறது. ஆனால், அதிகமாக பிரகாசமான வெளிச்சத்தை செலுத்தும்போது அதன் கண்கள் பார்க்கும் சக்தியை இழந்து குருடாகி அதே இடத்தில் அவை நிற்கும்.

பல மணிநேரமாக நாங்கள் லைட்டை அடித்தபோதும் அங்கு எந்த சிறுத்தையும் எமக்குத் தென்படவில்லை.

சிறுத்தைகளை காண்பதே கடினமானபோது, அவை வேட்டையாடியதை உண்பதை காண்பதற்கான அரிய சந்தர்ப்பம் வாய்த்தது; அதுவும் தெருவோரத்தில் என்பது நம்பமுடியாததுதான்.

பயணம் தொடரும்

கடந்த அத்தியாயம் படிக்க

தென் ஆப்பிரிக்கா பயணம் 1 – நோயல் நடேசன்

தென் ஆப்பிரிக்கா பயணம் 2 – நோயல் நடேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...