மயிலாப்பூர் கோயில் குளத்துக்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் ஒன்று அதிலிருக்கும் மீன்கள். குளக்கரைக்கு செல்லும் பக்தர்கள் ஏதாவது உணவை தண்ணீரில் போட்டால் ஏராளமான மீன்கள் அதை உண்ண வரும் காட்சி அழகானது. ஆனால் இனி மைலாப்பூர் கோயில் குளத்தில் சில நாட்களுக்கு அதிக எண்ணிக்கையில் மீன்களைப் பார்க்க முடியாது. கடந்த 2 நாட்களில் 2 டன் மீன்கள் குளத்தில் செத்து மிதப்பதே இதற்கு காரணம்.
மயிலை கோயிலில் கபாலீஸ்வரரை தரிசித்துவிட்டு குளக்கரைக்கு செல்லும் பக்தர்களை, அங்கு செத்து மிதக்கும் மீன்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. கூடவே அதனால் குளத்தைச் சுற்றி வீசும் துர்நாற்றமும் பக்தர்களை கடுமையாக பாதித்துள்ளது. மீன்கள் திடீரென செத்து மிதப்பதற்கு என்ன காரணம் என்ற விசாரணையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் கார்த்திகை தீபத்துக்காக குளத்தின் படிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதே மீன்கள் செத்து மிதப்பதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த அகல் விளக்குகளை ஏற்ற ஏராளமான லிட்டர் தீப எண்ணை பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்துக்கு பின் பெய்த மழையால், இந்த எண்ணை குளத்தில் கலக்க, தண்ணீரில் எண்ணெய்ப் படலம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அகல் விளக்கு எண்ணெயுடன் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையும் மீன்களின் இறப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. “கபாலீஸ்வர்ர் கோயில் குளத்தில் உள்ள மீன்கள் மிகுந்த சென்சிடிவானவை. தங்களுக்கான தட்பவெட்ப நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டால்கூட அவற்றால் சமாளிக்க முடியாது. தொடர் மழையால் மயிலாப்பூர் கோயில் குளத்தின் தட்பவெட்ப நிலை மாற, அதைச் சமாளிக்க முடியாமல் அந்த மீன்கள் இறந்திருக்க கூடும்” என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இந்த கோயில் குளத்தில் இருப்பவை பெரும்பாலும் கெண்டை மீன்களாகும். சில மாதங்களுக்கு முன் இவை குளத்தில் விடப்பட்டன.
இந்த கெண்டை மீன்கள் எதனால் இறந்தன என்ற ஆராய்ச்சிக்காக மயிலாப்பூர் கோயில் குளத்தில் இறந்து கிடக்கும் மற்றும் உயிரோடு இருக்கும் சில மீன்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்வள பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கூடத்துக்கு அவை கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு மீன்களின் இறப்புக்கான முழு காரணம் தெரியவரும்.