கேட்பதற்கு சாதாரணமாய் தோன்றினாலும் 166 நிமிட படத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஹீரோ தனிமையில் வாழ்பவன். ஒரு விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த சோகத்தினால் வாழ்க்கையை எதிர்மறையாக பார்த்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். வீடு – தொழிற்சாலை – வீடு என்று அவனது வாழ்க்கை கழிகிறது. சண்டை போடுவது, இட்லி சாப்பிடுவது, புகை பிடிப்பது, பியர் குடிப்பது இதுதான் அவன் அன்றாட வாழ்க்கை. அவனுக்கு துணையாக இருப்பது அவன் வீட்டில் இருக்கும் டிவியும் அதில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் சார்லி சாப்ளின் படங்களும்தான்.
எலிகள் ஓடும் அழுக்கு வீட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஹீரோவுக்கு ஒரு நாய் அறிமுகமாகிறது. அவன் தனிமையை மெல்ல போக்குகிறது. அவன் வாழ்க்கையில் உற்சாகம் வருகிறது.
இந்த சமயத்தில் நாய்க்கு ஒரு பிரச்சினை. அந்தப் பிரச்சினையை அவன் எப்படி சமாளிக்கிறான்? நாயுடன் நட்பு தொடர்கிறதா என்பதுதான் 777 சார்லியின் திரைக்கதை.
ரஷித் ஷெட்டிதான் ஹீரோ – படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே – தன் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். நாயினால் அவர் வாழ்க்கையில் சிறிது சிறிதாக ஏற்படும் மாற்றங்களை அழகாய் பதிவு செய்திருக்கிறார்.
படத்துக்கு மிகப் பெரிய பலம் நம்மை ஈர்க்கும் அந்த லாப்ரடார் நாய். பார்க்கும் பார்வையே வசீகரிக்கிறது. நாயகனுடன் நட்பாகி பழகும் காட்சிகள் உணர்ச்சிகரமாக இருக்கின்றன.
படத்தின் சின்ன கதாபாத்திரத்தில் வரும் பாபி சிம்ஹா மனதை கவருகிறார். கதையின் ஓட்டத்தை விறுவிறுப்பாக்கிறார்.
சங்கீதா சிருங்கேரி, விலங்குகள் நல அதிகாரி, கதையின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறார்.
இந்த படத்தின் கதை செல்லப்பிராணி வளர்ப்பு பற்றி கவனிக்க வேண்டிய செய்திகளை தருகிறது. கைவிடப்பட்ட விலங்குகளின் பரிதாப நிலையையும் அவை ஏன் மீட்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக கூறுகிறது.
படம் தரும் மற்றொரு முக்கியமான செய்தி விலங்குகளுடனான நட்பு நம் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் சோர்வுகளை நீக்கும் என்பது.
சிக்கலான கதையை திறம்பட இயக்கியிருக்கிறார் கிரண்ராஜ். கிளைமாக்ஸ் காட்சியை பனி கொட்டிக்கிடக்கும் இமாலய மலையில் விறுவிறுப்பாக காட்சி படுத்தியுள்ளனர். ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்.
777 சார்லி – மனிதநேயமிக்க படைப்பு