நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பாஜக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் கருத்துக் கணிப்பை ஏபிபி – சி வோட்டர் வெளியிட்டுள்ளது. இந்த 2 நிறுவனங்களும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், நாடாளுமன்ற தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் பாஜக கூட்டணி 336 இடங்கள் வரை வெல்லும் என்று தெரியவந்துள்ளது. தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சில முன்னேற்றங்கள் இருக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
வடக்கு மண்டலம்:
மண்டல வாரியாக நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைக் கொண்ட வடக்கு மண்டலத்தில் பாரதிய ஜனதாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மொத்தமுள்ள 180 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 150 முதல் 160 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு 20 முதல் 30 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரையும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மண்டலம்:
பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைக் கொண்ட கிழக்கு மண்டலத்தில் மொத்தம் 153 தொகுதிகள் உள்ளன. இதில் பாரதிய ஜனதா கூட்டணி 80 முதல் 90 இடங்களையும், இந்தியா கூட்டணி 50 முதல் 60 இடங்களையும், இதர கட்சிகள் 10 முதல் 20 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலம்:
குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைக் கொண்ட மேற்கு மண்டலத்தில் மொத்தம் 78 தொகுதிகள் உள்ளன. இதில் பாரதியா ஜனதா கூட்டணிக்கு 45 முதல் 55 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 25 முதல் 35 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தெற்கு மண்டலம்:
மற்ற 3 மண்டலங்களிலும் முன்னணியில் இருக்கும் பாரதிய ஜனதாவின் என்டிஏ கூட்டணி, தெற்கு மண்டலத்தில் மட்டும் பின்தங்கி இருக்கிறது. இந்த மண்டலத்தில் உள்ள 132 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 20 முதல் 30 தொகுதிகள் வரைதான் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மற்ற மண்டலங்களில் பாஜக கூட்டணியைவிட பின்தங்கி இருக்கும் இந்தியா கூட்டணி, தெற்கு மண்டலத்தில் 70 முதல் 80 இடங்கள் வரை வெல்லும் என்றும், இதர கட்சிகள் 25 முதல் 35 இடங்கள் வரை வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
336 தொகுதிகள்:
ஆக மொத்தத்தில் இப்போதைய சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால், தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு 295 முதல் 335 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு 165 முதல் 205 இடங்கள் வரையும், இதர கட்சிகளுக்கு 35 முதல் 65 இடங்கள் வரையும் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிறந்த பிரதமர் யார்?
சிறந்த பிரதமராக யார் இருப்பார்கள் என்ற கேள்விக்கு, 59 சதவீதம் பேர் மோடியின் பெயரை பதிலாக கூறியுள்ளனர். ராகுல் காந்தி சிறந்த பிரதமராக இருப்பார் என்று 32 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு 5 சதவீதம் பேர் கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில் 4 சதவீதம் பேர் இருவருமே சிறந்த பிரதமராக இருக்க மாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.