கடந்த வாரம் வரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த விஜயகாந்தை தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு அழைத்து வந்து மேடையில் உட்கார வைத்திருந்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவரை மேடையில் ஏற்றியது குறித்து கடுமையான கண்டனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளார் சாவித்திரி கண்ணன் பேசினார்.
விஜயகாந்தை உடல் நலமில்லாத நிலையில் இருவர் பிடித்துக்கொண்டே மேடையில் உட்கார வைத்தது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. மிகவும் பலவீனமாக, பார்க்கவே பரிதாபமாக இருந்தார், விஜயகாந்த். அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் கேப்டனை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கூறியிருக்கிறார். நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தேமுதிக புதிய பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொள்ள பிரேமலதாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். விஜயகாந்த் இல்லாமல் இதை செய்திருந்தால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜயகாந்துக்கு விருப்பம் இல்லை என்றுகூட அவர்கள் நினைக்கலாம். எனவேதான் பிரேமலதா இதை செய்துள்ளார். அவருக்கு வேறு வழி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
விஜயகாந்த் இப்படி மேடைக்கு வந்து தொண்டர்களைப் பார்த்தால் அவர் மனம் உற்சாகமடையும், உடல்நிலை சீராகும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தா?
உண்மையிலேயே அப்படி நடந்தால் நல்லதுதான். ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.
பிரேமலதா தலைமையில் தேமுதிகவின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
2016 சட்டசபை தேர்தலோடே அந்த கட்சியின் எதிர்காலம் முடிந்துவிட்டது. இனி அதற்கு எதிர்காலம் இல்லை.
2005ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட போதே மூட நம்பிக்கைகளின் முழு வடிவம், குடும்ப ஆதிக்கம், குழப்பம், கோமாளித்தனம் ஆகியவற்றின் மொத்தக் கலவையாக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நான் எழுதினேன். ஒன்றுக்கொன்று முரண்பாடான தேசியம், திராவிடம் இரண்டையுமே கட்சிப் பெயராக்கிய கோமாளித்தனம் போதாது என்று அதில் முற்போக்கு என்று தனக்கு முற்றிலும் பொருந்தாத வார்த்தையையும் கட்சிப் பெயரில் இணைத்தார், விஜயகாந்த். ஆனாலும், ஆரம்ப காலத்தில் அவரது வளர்ச்சி அபரிமிதமாகத் தான் இருந்தது. சினிமா தந்த பிரபலம், அவர் செய்த தான தர்மங்கள், அவருக்கேயுரிய அசாத்தியமான தைரிய குணம், உற்ற நண்பர்களின் சேர்க்கை ஆகியவை அவரது அரசியல் வெற்றிகளுக்கு அடித்தளமாகின. இரு திராவிட இயக்கத்தையும் ஏற்க முடியாத மனநிலை கொண்டவர்கள் இதை ஒரு மாற்றாகக் கருதி ஆதரித்தார்கள்.
கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய துணிச்சலும், கடும் பிரச்சாரங்களும் அவருக்கு 2006 தேர்தலில் 8% சதவிகித வாக்குகளை பெற்றுத் தந்தன. அடுத்து வந்த 2009 நாடாளுமன்ற தேர்தலோ 10.4% வாக்குகளை தந்தன. 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி. கட்சி தொடங்கப்பட்ட ஆறே ஆண்டில் 29 எம்.எல்.ஏக்கள், எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து என்பது உடனடி ஆதாயமானது. ஆனால், அதன்பின்னர் இவர் தான் திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற வளர்ச்சி தடைபட்டதோடு, அவரது வாக்குவங்கியும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. தனக்கு யார் எதிரி? யார் நண்பன் என்பதை திட்டவட்டமாக வரையறுக்க முடியாமல் அவர் பயணம் தொடர்ந்தது.
இன்னொரு பக்கம்… அரசியல் அனுபவமின்மை, அதீத கோப உணர்ச்சி ஆகியவற்றொடு குடும்ப உறவுகள் தலையீடும் சேர்ந்ததால் தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எட்டு பேரை அதிமுகவிடம் பறி கொடுத்தார். மூத்த தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரனும் அவரிடமிருந்து விலகினார்.
2016இல் தேமுதிகவானது திமுக அணிக்கு வந்திருந்தால் தேர்தல் முடிவுகளே மாறியிருக்கும். 2011இல் அதிமுக – தேதிமுக கூட்டணிக்கு சோ போன்ற ஒரு இணக்கமான இடைநிலை தரகர் அமைந்தது போல, 2016இல் அமையாமல் போனது. ஸ்டாலினுக்கும் விஜயகாந்தை ஏற்க முடியவில்லை. இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி என்ற வலையில் விஜயகாந்த் விழுந்த போது கட்சிக்குள் கொஞ்ச நஞ்சம் இருந்த வலுவான நிர்வாகிகளான சந்திரக்குமார், பார்த்தீபன் உள்ளிட்ட பலரை இழந்தார். அவரது வாக்கு வங்கி 2.4% சதவிகிதமானது. மக்கள் நலக் கூட்டணி என்று அத்தனை கட்சிகளை சேர்த்துக் கொண்டு நின்ற போதே நின்ற 104 தொகுதிகளில் 103இல் டெபாசிட் பறிகொடுத்த கட்சி தேமுதிக.
2019இலும் அது தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை கணிக்கும் திராணியில்லாத அளவுக்கு பாஜகவின் பாசவலையில் சிக்கியது. அது மேலும் வாக்கு வங்கியை சரித்துவிட்டது. இப்போது தேமுதிகவின் வாக்கு வங்கி 0.5%க்கும் குறைவாகத்தான் இருக்க முடியும்.
ஒன்னும் இல்லாமலே எப்படி கெத்துகாட்டுவது என்பதற்கு இன்று தேமுதிகவை மிஞ்ச நாட்டில் வேறு கட்சி இல்லை. காலி பெருங்காய டப்பா எப்படியும் கொஞ்ச நாளைக்கு வாசனை வீசிக்கிட்டுத் தான் இருக்கும். ஆனால், சமையலுக்கு பயன்படாது. அது போலத்தான் தேமுதிக. அந்த கட்சியை மக்கள் எப்போதோ அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டனர். தேர்தல் என்பதையே பணவசூலுக்கான ஒரு அரசியல் சூதாட்டமாக அர்த்தப்படுத்திக் கொண்டு அலம்பல் செய்யும் பிரேமலதாவின் அரசியல், அஸ்த்தமனத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.
1984இல் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது அங்கே அவர் மருத்துவமனையில் இருந்த வீடியோவை அதிமுக இங்கே வெளியிட்டது. தேர்தலில் அதிமுக மக்களின் அனுதாபத்தைப் பெற, வெற்றி பெற அந்த வீடியோ உதவியது. அதுபோல் தற்போது விஜயகாந்த் இருக்கும் நிலையைப் பார்த்து மக்களின், தொண்டர்களின் அனுதாபத்தைப் பெற வாய்ப்புள்ளதா?
எம்.ஜி.ஆர். மீண்டு வந்தார். அதற்கு அவரிடம் இருந்த உறுதி காரணம். அதுபோல் விஜயகாந்த் மீண்டு வருவதற்கு வாய்ப்பில்லை.
எந்த ஒரு கொள்கை இல்லாவிட்டாலும் கூட, அந்தக் கட்சியின் ஒரே ஈர்ப்பு விஜயகாந்த் தான். அவரது படங்கள், அவர் செய்த தான தர்மங்கள், அவரை நேசிக்க கூடிய ஒரு மக்கள் திரள். இது மட்டுமே தேமுதிகவின் பலம். விஜயகாந்த் தற்போது செயல்படமுடியாத நிலையில் உள்ளார். அவருக்கு தேவைப்படுவது பூரண ஓய்வு. அது தான் அவருக்கு நல்ல உடல் நலத்தை கொடுக்கும். இனி ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்வது அவரது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதுவே மக்கள் பார்வையாக உள்ளது. ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேச முடியாமல் குளறி பேசியதைக் கண்டு தாய்மார்கள் கண்ணீர் வடித்தனர். இந்நிலையில், பிரேமலதா தன் அரசியல் ஆதாயத்திற்காக விஜயகாந்தை வருத்தி, அரசியல் பிரச்சாரத்திற்கு அழைத்து வருவார் எனில் அது மக்கள் மத்தியில் எதிர்மறை விளைவுகளையே அக் கட்சிக்கு ஏற்படுத்தும்.
ஒவ்வொரு கட்சி உயிர்த்திருக்கவும் ஒரு சமூக, அரசியல் வரலாற்றுத் தேவை இருக்கிறது. ஒரு சித்தாந்தம், கொள்கை கொண்ட குறிப்பிட்ட மக்கள் திரளின் ஆசை, அபிலாசைகள் உள்ளது. அப்படி ஏதாவது இந்தக் கட்சி உயிர் வாழ்வதற்கான சமூக., அரசியல் காரணிகள் ஏதாவது உள்ளதா என்று பார்த்தாலும்கூட விடை ஒன்றும் கிடைக்கவில்லை.
0.5%க்கும் குறைவான வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு என்ன நம்பிக்கையில் பிரேமலதா கட்சியை தொடர்ந்து நடத்துகிறார்?
பாஜகதான். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாததால் இதுபோன்ற துக்கடா கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால்தான் நடிகர் விஜயை அரசியலுக்கு கொண்டு வரும் வேலைகளையும் அவர்கள் செய்கிறார்கல். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அவருக்கு வாழ்த்து சொன்ன ஒரே கட்சி பாஜக தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2014இல் அவர் பாஜக அணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த காலத்தில் இருந்து பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பிரேமலதா மாறிப்போனார். தேர்தல் என்றால், பெரிய தொகை கிடைக்கும் என்ற ஆசை வந்துவிட்டது. இப்போதும் அந்த ஆசையில்தான் கட்சியை தொடர்ந்து நடத்த திட்டமிடுகிறார்.