எம்ஜிஆருக்கும், எம்எஸ்விக்கும் இடையிலான நட்பைப் பற்றி கூறுகிறார் எம்எஸ்வியின் மகன் பிரகாஷ்
எம்.ஜி.ஆர் நடித்த ஜெனோவா படத்துக்கு என் அப்பா இசையமைத்தார். இதுபற்றி அதன் தயாரிப்பாளர் எம்ஜிஆரிடம் சொன்னபோது. “இந்த படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை எம்எஸ்விக்கு கொடுக்க வேண்டாம். யாராவது மூத்த இசையமைப்பாளருக்கு கொடுக்கலாம்” என்று எம்ஜிஆர் கூறி இருக்கிறார்.
ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்கவில்லை. ”நான் அந்த பையனுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் அவன்தான் இநத படத்துக்கு இசை அமைப்பான். நீங்கள் வேண்டுமென்றால் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். அடுத்த படத்தை உங்களை வைத்து எடுக்கிறேன்’ என்று தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார். இதன் பிறகு கொஞ்சம் இறங்கிவந்த எம்ஜிஆர்., “நான் பாடல்களை கேட்டு பிறகு சொல்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். எம்எஸ்வி இசையமைத்த பிறகு அந்த பாடல்களைக் கேட்டதும் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. எம்.எஸ்.வியை அழைத்த அவர், “இனி என் படங்களுக்கு நீதான் இசையமைப்பாளர்” என்று சொல்லி இருக்கிறார். இருவரின் இணைந்த பயணம் அப்போதுதான் ஆரம்பம் ஆனது.
இருவருக்கும் அடிக்கடி மோதல்களும் ஏற்படுவதுண்டு. ரெக்கார்டிங்கின்போது எம்எஸ்வி சில சமயம் கோபித்துக்கொண்டு வீட்டுக்கு போய்விடுவார். அதுபோன்ற சமயங்களில் எங்கள் பாட்டியிடம் எம்ஜிஆர் பேசுவார். “என்ன விசு இப்படி கோபக்காரனா இருக்கான். நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க” என்று சொல்வார்.
நாளை நமதே படத்தை எடுக்கும்போது அந்தப் படத்துக்கு இசையமைக்கச் சொல்லி எங்கள் அப்பாவை இயக்குநர் சேதுமாதவன் தொடர்புகொண்டு கேட்டார். ஆனால் அப்பா அதை ஏற்க முதலில் மறுத்தார். அதற்கு காரணம் கேட்டபோது, “இதன் இந்தி பதிப்பான ‘யாதோங் கி பாரத்’ படத்தின் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை அதனால் அதைப்போல் இந்த படத்தின் பாடல்களும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இது எனக்கு கூடுதல் பிரஷரகாக இருக்கும். அத்துடன் சின்னவரின் (எம்ஜிஆர்) தலையீடும் அதிகமாக இருக்கும். அதனால் நான் இந்த படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.
பின்னர் எம்.ஜி.ஆர் அவரைச் சந்தித்து தான் இந்த படத்தின் இசையமைப்பில் தலையிட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த பிறகுதான் இசை அமைத்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு முதலில் குன்னக்குடி வைத்யநாதன்தான் இசை அமைப்பதாக இருந்த்து. அதன் பிறகுதான் இந்த படத்துக்கு அப்பா இசையமைத்தார்.
ஒவ்வொரு பாடலை ட்யூன் செய்த பிறகும் எம்ஜிஆரைப் பார்ப்பார் எம்எஸ்வி. அவர் ட்யூன் நன்றாக இருந்தாலும் பாராட்ட மாட்டார். பாட்டு சுமாராக இருக்கிறது என்று மட்டும் சொல்வார். இது என் அப்பாவை வருத்தமடைய செய்தது. இதனால் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக சம்பளம் வாங்க மறுத்தார்.
ஒரு நாள் அப்பாவை வலுக்கட்டாயமாக தனது ஸ்டுடியோவுக்கு வரவழைத்தார் எம்ஜிஆர். அங்கு படத்தில் விநியோகஸ்தர்கள் இருந்தனர். அப்பாவுக்கு பெரிய மாலை போட்ட எம்ஜிஆர், “இவங்க எல்லாரும் பாட்டு ரொம்ப பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்க” என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு எம்.எஸ்.வி, “இப்பகூட மத்தவங்க பாராட்டராங்கன்னுதான் சொல்றீங்க. ஆனா நீங்க ஒரு தடவை கூட பாராட்டலியே” என்று வருத்தப்பட்டு இருக்கிறார். அதற்கு எம்ஜிஆர், “உன்னை உசுப்பேத்த்த்தான் அப்படி சொன்னேன்” என்றார்.
அதற்கு பதிலளித்த எம்.எஸ்.வி, “நீங்கள் என்னை பாராட்டியிருந்தால் அதைவிட சிறப்பான பாடல்களை போட்டிருப்பேன்” என்று பதில் அளித்தார்.
எம்ஜிஆரை தன் காட்ஃபாதராகத்தான் எம்.எஸ்.வி கருதினார்.. தான் எதைச் செய்வதாக இருந்தாலும், எம்ஜிஆரைச் சந்தித்து அவர் அனுமதியை கேட்டுத்தான் செய்வார். எம்.ஜி.ஆரின் மறைவு எம்.எஸ்.வியை பெரிய அளவில் பாத்த்து. அவர் அதிலிருந்து மீண்டுவர பல நாட்கள் ஆயிற்று.