பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் ஹார்ட் அட்டாக்கால் காலமாகியுள்ளார். ஏன் இப்படி திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது? இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? பிரபல டாக்டர் விஜயலஷ்மி இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தரும் ஆலோசனைகள் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“Heart Attack, Heart Failure, Cardiac Arrest – மூன்றுக்கும் வித்தியாசங்கள் உள்ளது என்று சொன்னேன். Heart Attack (மாரடைப்பு), Cardiac Arrest (இதய நிறுத்தம்) பற்றி பார்த்தோம். இப்போது Heart Failure (இதயம் செயலிழப்பு) பற்றி பார்ப்போம்.
உடலில் மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதனால் இதயம் பாதிப்புக்குள்ளாவது Heart Failure (இதயம் செயலிழப்பு). மாரடைப்பு இதயத்துக்கு ரத்தம் வருவதைத் தடுக்கும் ப்ளாக்கேஜைக் குறிக்கிறது என்றால், இதயம் செயலிழப்பு என்பது உடலுக்கு தேவையான ரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்ய முடியாத நிலையை குறிக்கிறது.
மூளை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் உட்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை பம்ப் செய்வதுதான் இதயத்தின் வேலை. இந்த உறுப்புகளுக்கு போதுமான இரத்த விநியோகத்தை இதயம் வழங்கத் தவறினால், அது இதய செயலிழப்பு.
நடைபயிற்சி அல்லது பிற செயல்பாடுகளின் போது மூச்சு விடுவதில் சிரமம், கால்கள் அல்லது அடிவயிற்றில் வீக்கம், சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை ஆகியவை இதயம் செயலிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். மாரடைப்பு, ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற ஏற்கெனவே பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கும் நீண்ட காலமாக கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு விளைவாகவும் இதய செயலிழப்பு ஏற்படலாம்.
ஆனால், ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் போலல்லாமல் இதில் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போது நமக்கு எதாவது பிரச்சினைகள் இருப்பதாக தெரிந்தால் உடனே அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நம் வாழ்நாளை அதிகரிக்க முடியும். முன்பு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனையை பரிந்துரை செய்வோம். இப்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் செய்துகொள்ளலாம். ஐடி துறையில் இருப்பவர்கள் 30 வயதுக்கு மேலேயே செய்துகொள்ளலாம். வருடம்தோறும் இந்த பரிசோதனையை செய்ய வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட பரிசோதனை செய்துகொள்ளலாம்.
தினசரி உடற்பயிற்சி, சமச்சீரான உணவு பழக்கவழக்கம், தினமும் எட்டு மணி நேர தூக்கம் என நமது வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டால் இதுவரை குறிப்பிட்ட அபாயங்கள் வராமலே தடுக்கலாம்.
முற்றும்