No menu items!

4 நாள் வேலை – 3 நாள் லீவு – மாறி வரும் உலகம்!

4 நாள் வேலை – 3 நாள் லீவு – மாறி வரும் உலகம்!

நீங்கள் வாரத்துக்கு ஆறு நாள் வேலைக்கு போக வேண்டுமா? ஒரு நாள்தான் லீவா?

ரொம்ப அலுப்பாதான் இருக்கும்.

அந்த அலுப்புக்கு மாற்றாக உலகம் முழுவதும் ஒரு புது யோசனை பரவிக் கொண்டு வருகிறது.

வாரத்துக்கு நாலு நாள் ஆஃபிஸ். இதுதான் அந்த புது கான்சப்ட்.

இந்தியாவில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவவங்கள் ஐந்து நாள் வேலை திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் ஆறு நாள் வேலை திட்டத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

ஆறு நாள் வேலைத் திட்டம் என்பது திங்கள் முதல் சனி வரை வேலை செய்ய வேண்டும். ஞாயிறு மட்டுமே விடுமுறை தினம்.

சில நிறுவனங்கள் சனிக் கிழமையை அரை நாள் வேலை தினமாக வைத்திருக்கும். பெரும்பாலான தனியார் ஐடி நிறுவனங்கள் ஐந்து நாள் வேலை நடைமுறையை பின்பற்றுகின்றன.  

மேற்கத்திய நாடுகளில் எல்லாமே ஐந்து நாள் வேலைதான். சனி, ஞாயிறில் ‘கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவு’னு ஜாலியா பாட்டுப் பாடி வீக்கெண்ட் கொண்டாடுவார்கள்.  

இப்ப இந்த இரண்டு நாள் விடுமுறை போதாது நான்கு நாள் வேலை மூன்று நாள் வேலை என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதற்கான செயல்திட்டங்களும் முன் வைக்கப்படுகின்றன.

நான்கு நாட்கள் வேலைக்கும் மீதி மூன்று நாட்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காகவும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் சிறந்த வாழ்வியல் முறை சொல்லப்படுகிறது.

சில ஐரோப்பிய நாடுகளில் சில நிறுவனங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டும் இருக்கின்றன.

இப்போது இங்கிலாந்தில் நான்கு நாள் வேலை முறை  61 நிறுவனங்களில்  2022 ஜூன் முதல் 2022 டிசம்பர் வரை பரிசோதிக்கப்பட்டது. அதாவது 6 மாதங்கள்.

இந்த சோதனை முயற்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நான்கு நாள் வேலை திட்டத்துக்காக உலகில் நடந்த மிகப் பெரிய பரிசோதனை முயற்சி இதுதான்.

அந்த முடிவுகளைப் பார்க்கும்போது நான்கு நாள் வேலைத் திட்டம் வெற்றிகரமாகவே இருக்கும் என்று தெரிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பங்கு பெற்ற 61 நிறுவனங்களில் 56 நிறுவனங்கள், இந்த முறை நன்றாகவும் நிறுவனத்துக்கு லாபகரமாகவும் இருப்பதால் தொடர்ந்து 4 நாள் வேலை முறையை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறியுள்ளன.

இந்த முறையில் பணிபுரிந்தவர்களில் 71 சதவீதத்தினருக்கு வார இறுதி களைப்பு குறைந்திருக்கிறது. பணி அழுத்தமும் வெகுவாக குறைந்திருக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

குடும்பம், உறவுகள், சமூகம் என அனைத்து கடமைகளையும் இந்த நான்கு நாள் முறையில் சரியாக கவனிக்க முடிகிறது என்று 54 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

குடும்பப் பணிகளும் அலுவலகப் பணிகளும் இப்போது எளிதாக இருக்கிறது என்று 62 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கியமாய் இந்த நிறுவனங்களின் வருவாய் சராசரியாக 1.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சில நிறுவனங்களில் 32 சதவீதம் வரை வருவாய் அதிகரித்திருக்கிறது.

உடல்நிலை சரியில்லை என்று லீவ் போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி நிறுவனங்களிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் பல நிறுவனங்களை யோசிக்க வைத்திருக்கின்றன. முழுமையாகவே நான்கு நாள் வேலை முறைக்கு மாறிவிடலாமா என்று சிந்திக்கின்றன.

கொரோனா பொது முடக்கங்களுக்குப் பிறகு நாம் வேலை பார்க்கும் முறைகள் மாறிவருகின்றன.

வீட்டிலிருந்து வேலை என்ற முறை இப்போது சர்வ சாதரணமாக எல்லா இடங்களிலும் இருக்கிறது. பல ஐடி நிறுவனங்கள் இன்று வரை பொதுமுடக்கத்தின்போது இருந்த வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையில் மாற்றம் செய்யவில்லை.

இந்த முறையில் சில எதிர்மறை சங்கதிகளும் இருக்கின்றன.

ஐந்து நாள் செய்ய வேண்டிய வேலைகளை நான்கு நாளில் முடிப்பது என்பது கூடுதல் அழுத்தம் என்ற கருத்து வைக்கப்படுகிறது.

ஆனால் நேரத்தை வீணாக்காமல் வேலை செய்தால் ஐந்து நாள் வேலையை நான்கு நாட்களில் முடிக்க முடியும். நமது வேலை திறன் அதிகரிக்குமே தவிர அழுத்தம் அதிகரிக்காது என்று எதிர்வாதம் வைக்கப்படுகிறது.

பல நிறுவனங்களில் நாள் கணக்குக்குப் பதில் நேரக் கணக்கு வைத்திருக்கிறார்கள். அதன்படி ஒரு ஊழியர் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் உழைத்தால் போதுமானது. அந்த 48 மணி நேரத்தை அவர் விருப்பப்படி பிரித்துக் கொள்ளலாம் என்றும் சில நிறுவனங்கள் சலுகை கொடுக்கிறது. இந்த சலுகை எல்லா நிறுவனத்துக்கும் சரியாக வராது என்பதே நிஜம். நான்கு நாட்களில் 48 மணி நேர வேலையை முடித்துவிடுவது அந்த ஊழியரின் சாமர்த்தியம்.

இந்த நான்கு நாள் வேலை முறையை எல்லா நிறுவனங்களாலும் செயல்படுத்த முடியுமா என்றால் முடியாது என்பதே பதில்.

தொடர் உற்பத்தியில் இருக்கும் தொழிற்சாலைகளில் நான்கு நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தால் கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் அல்லது தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்படும்  என்று கூறப்படுகிறது.

நான்கு நாள் வேலை மூன்று நாள் விடுமுறை என்பது ஊழியர்களிடம் விடுமுறை மனப்பான்மையை அதிகரிக்கும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

இப்படி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

அமெரிக்கா, கனடா சில ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நான்கு நாள் வேலை முறை தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில வருடங்களில் இந்த நடைமுறை அங்கெல்லாம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நான்கு நாள் வேலை முறை இந்தியாவுக்கு வருமா?

மேற்கத்திய நாடுகளில் மக்கள் தொகை குறைவு. அவை வளர்ந்த நாடுகள். பணக்கார நாடுகள். அவர்களால் செய்ய முடிகிற அனைத்து காரியங்களையும் இந்தியாவில் உடனடியாக செய்ய இயலாது. அதற்கான சூழல் இந்தியாவுக்கு வருவதற்கு இன்னும் சில காலங்கள் பிடிக்கும்.

அதுவரை ஐந்து மற்று ஆறு நாள் வேலையில் மகிழ்ந்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...