No menu items!

100 கோடி வசூலித்த மஞ்சுமல் பாய்ஸ்

100 கோடி வசூலித்த மஞ்சுமல் பாய்ஸ்

கடந்த பிப்ரவரியில் மலையாளத்தில் வெளியான படம் ‘மஞ்மமேல் பாய்ஸ்’. இந்தப் படத்திற்கு அங்கே நல்ல வரவேற்பு.

வழக்கமாக மலையாளப் படங்களுக்கு வரவேற்பு கிடைத்தால், தமிழ்நாட்டில் மலையாளப் படங்களைப் பார்த்து ரசிக்கும் மக்கள், ஒடிடி-யில் பார்ப்பதுதான் வழக்கம். இதற்கு உதாரணமாக ஒரு பெரும் பட்டியலைச் சொல்லலாம்.

ஆனால் இந்த முறை ‘மஞ்சுமேல்பாய்ஸ்’ பட விஷயத்தில் நடந்தது வேறு. இந்தப் படத்தைப் பார்த்த உதயநிதி சமூக ஊடகம் ஒன்றில் படம் நன்றாக இருக்கிறது என்கிற ரீதியில் பதிவிட்டார். விஷயம் இப்படியே முடிந்து போயிருந்தால் அது ஒரு வழக்கமான ஒரு நல்ல மலையாளப் படத்திற்கு கிடைத்திருக்கும் பாராட்டாக முடிந்திருக்கும்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, அந்தப் படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் பட த்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கேரளாவில் இருந்து கிளம்பி, உதயநிதியைப் பார்க்க நேரடியாக வந்துவிட்டனர். இங்குள்ள மலையாள நடிகர் அவர்களது சந்திப்பிற்கு உதவ, இந்த சமாச்சாரம் வைரலாகி விட்டது.

அதோடு விடாமல், இந்த பாய்ஸ் குழு கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களை அவர்களது வீட்டிற்கே போய் சந்திக்க, பல கோடி செலவிட்டால் கிடைக்கும் விளம்பரம் வெகு சுலபமாகவே கிடைத்துவிட்டது.

இதனால், தமிழ்நாட்டில் ஒரே நாளில் 850 காட்சிகள் வரை ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம் திரையிடப்பட்டு இருக்கிறது. திரையரங்குகளுக்கும் கூட்டம் வர ஆரம்பித்திருக்கிறது. கேரளாவிலும் இப்படம் வசூலில் திளைத்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 15 கோடி வசூல் செய்திருக்கும் மலையாளப் படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

அதேபோல் இந்திய பாக்ஸ் ஆபீஸில் ஒரே நாளில் இரட்டை இலக்க வசூலைப் பெற்ற மலையாளப்படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. வெளியான இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை 11.25 கோடி வசூல் செய்திருக்கிறது.

இந்தியாவில் இதுவரையில் சுமார் 60 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில், வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி 40 கோடி வசூலாகி இருக்கிறதாம். ஆக மொத்தம் 100 கோடி வசூலை எட்டியிருக்கிறது மஞ்சுமல் பாய்ஸ். இதன்மூலம் ‘புலி முருகன்’, ‘லூசிஃபர்’, ‘2018’ ஆகிய மூன்றுப் படங்களுக்குப் பிறகு 100 கோடி வசூலை எட்டியிருக்கும் நான்காவது படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

இதே நிலவரம் தொடருமானால் இப்படம் 150 கோடி வசூலைப் பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் சினிமா வட்டார வியாபார புள்ளிகள்.

சரியான கதையும், பொருத்தமான ப்ரமோஷனும் இருந்தால் இதெல்லாம் சாத்தியம்தான் என நிரூபித்திருக்கிறது ‘மஞ்சுமல் பாய்ஸ்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...