மனித வாழ்க்கையை மாற்றியமைத்த அறிவியல் கண்டுபிடிப்புகள் வரலாற்றில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது, சார்பியல் கோட்பாடு. அப்படின்னா என்று குழம்புபவர்களுக்கு E = MC2 என்று சொன்னால் தெரிந்துவிடும். அனைவரும் பள்ளி பாடப் புத்தகங்களில் பார்த்திருப்போம். இன்றைய அறிவியல் வளர்ச்சி மற்றும் சாதனைகள் எல்லாவற்றுக்கும் அடித்தளம் அமைத்தது இந்த சார்பியல் (Theory of Relativity) கோட்பாடுதான். இந்த சார்பியல் கோட்பாட்டை பற்றி ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழில் தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அந்தக் குறையை கொஞ்சம் போக்குகிறது ‘சார்பியல் கோட்பாடு – ஓர் அரிச்சுவடி’ என்னும் சிறு நூல்; எழுதியவர் பேராசிரியர் க. மணி.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905ஆம் ஆண்டு தனது 26ஆவது வயதில் சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். அதற்கு முன்பும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தனதான் என்றாலும், சார்பியல் கோட்பாடுதான் விஞ்ஞானிகள் உலகில் அதற்கு முன்பு எப்போதும் இல்லாத அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அன்று பிரபலமாக இருந்த விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள், படித்த மக்களிடையே பலவிதமான அபிப்ராயங்கள் உருவாகின. ஆழமாக புரிந்துகொண்டவர்களோ “அற்புதம்” என மெய்சிலிர்த்தனர். பலர், “இது பொது அறிவுக்கு ஒவ்வாதது; கிறுக்குத்தனமானது” என்றனர்.
ஆனால், இந்த சலசலப்புகள் எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். விரைவிலேயே, அதுவரை நம்பப்பட்டு வந்த, அதற்கு முந்தைய அறிவியல் கோட்பாடுகளில் பெரும்பான்மையையும் குப்பைக்கூடைக்கு தள்ளியது சார்பியல் கோட்பாடு. அதன்பிறகு உலகம் இதனைப் பிடித்துக்கொண்டு வேகமாக முன்னேற ஆரம்பித்தது. இன்றுவரை அது தொடர்கிறது. சார்பியல் கோட்பாடு வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன; சரியாக 118 ஆண்டுகள்.
இடது – வலது, மேலே – கீழே, சிறியது – பெரியது, அதிக தூரம் – குறைந்த தூரம் ஆகியவை உண்மையில் சார்பானவை. ஒளியின் வேகம் மாறுவதேயில்லை. அது சார்பற்றது. காலம் – இடம் சார்புடையவை. திசை சார்புடையது. இவை உட்பட பேரண்டப் பிறப்பு – முடிவு, நட்சத்திரங்களின் பிறப்பு – இறப்பு போன்றவற்றை எல்லாம் இன்றும் சார்பியல் கோட்பாடு இல்லாமல் விளக்க முடிவதில்லை. இன்று அறிவியல் உலகில் அதிகம் பேசப்படும் பல்சார், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரம் போன்ற சம்பவங்கள் சார்பியல் கோட்பாட்டின் மூலமே தெரிய வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் தொடர்ச்சியாக பொது சார்பியல் கோட்பாடு, ஒருங்கிணைந்த வெளிக் கோட்பாடு ஆகியவற்றையும் வெளியிட்டு, சின்னச்சிறிய பூமியில், அதுவும் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, பூமி, சூரியன், எண்ணற்ற கோள்கள் என பிரமாண்டமான இந்த பிரபஞ்சத்தின் இயக்கங்களை எல்லாம் தெளிவுபடுத்தினார் ஐன்ஸ்டைன். அதேநேரம், ஐன்ஸ்டீனின் E=mc2 என்ற இந்த கோட்பாடே அணுகுண்டை உருவாக்கத் துணை நின்றது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்ட போது ஐன்ஸ்டீன் அதற்காக மிகவும் வருந்தினார்.
சுலபமாக சொல்லிவிட்டோம். ஆனால், சார்பியல் கோட்பாடு என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ளவதும் அதனை புரிந்துகொள்வதும் அவ்வளவு சுலபமில்லை. சார்பியல் கோட்பாடுகளைக் குறித்து, யாரோ ஒரு விஞ்ஞானி கூறியதாக, வேடிக்கையாகச் சொல்வதுண்டு: “ஐன்ஸ்டைனின் தத்துவத்தை உலகில் அறிந்துகொண்டவர்கள் மூன்று பேர். ஒருவன் நான், இன்னொருவர் அதனைப் படைத்த ஐன்ஸ்டைன், மூன்றாமவர் கடவுள்.” காரணம் இந்த கோட்பாட்டை விளக்குவதும் புரிந்துகொள்ள வைப்பதும் மிகக் கடுமையான செயல். அந்தளவு அறிவியல் மாணவர்களுக்கே மண்டை காயும் இந்தக் கோட்பாட்டை, எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எளிமையாக இந்த நூலில் விளக்குகிறார் பேராசிரியர் க. மணி.
பேராசிரியர் க. மணி, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியராகவும், ‘கலைக்கதிர்’ அறிவியல் மாத இதழில் ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது முழு நேர அறிவியல் எழுத்தாளராக உள்ளார். பேராசிரியர் க. மணி சார்பியல் கோட்பாட்டை நீரைப் போல் எளிதாகச் சொல்லும் முயற்சியை இந்த நூலில் மேற்கொண்டிருக்கிறார்.
மார்ட்டீன் கார்ட்னர் என்பவர் சார்பியல் கோட்பாட்டை விளக்கி ஆங்கிலத்தில் எழுதிய ‘ரிலேட்டிவிட்டி சிம்ப்ளி எக்ஸ்ப்ளெய்ண்ட்’ உலகளவில் பிரபலமானது. 1962ஆம் ஆண்டு வெளியான இந்த நூல், பல மறுபதிப்புகள் கண்டு. லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளது. இந்த நூலை தழுவி ‘சார்பியல் கோட்பாடு – ஓர் அரிச்சுவடி’ என்னும் இந்த நூலை எழுதியுள்ளார் க. மணி. விளக்கப்படங்கள், குட்டிக் குட்டி கதைகள் மூலம் குழந்தைக்கு சொல்வதுபோல் எளிமையாக சொல்லிச் செல்கிறார்.
தூரம், காலம், அளவு ஆகியவை ஒன்றுக்கொன்று சார்புடையவை என்பதை விளக்கும் ஒரு குட்டிக் கதையுடன் எளிய முறையில் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். சார்பியல் கோட்பாட்டை விளக்குவதுடன் ஐன்ஸ்டைன் தனக்கு முன்பிருந்த ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகளை எப்படி மறுவரையறை செய்தார் என்பதையும் புரியும்படி கூறுகிறது.
நம்மையும் நம்மைச் சுற்றிய உலகையும் புரிந்துகொள்ள உதவக்கூடிய சிறிய புத்தகம். கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டியது.
சார்பியல் கோட்பாடு – ஓர் அரிச்சுவடி; ஆசிரியர்: பேராசிரியர் க. மணி; விலை ரூ. 100; வெளியீடு: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி – 642 003; தொலைபேசி: +91 99761 44451; மின்னஞ்சல்: [email protected]