எல்.சிவராமகிருஷ்ணன். கிரிகெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத பெயர். அவர் இந்தியாவுக்கு ஆடிய சொற்ப போட்டிகளிலும் அவர் வீசிய லெக் ஸ்பின் கூக்ளி பந்துகளை மறக்க முடியாது. அப்போதும் அவர் சர்ச்சைகளில் சிக்கி கிரிக்கெட் வாய்ப்புகளை இழந்தார். இப்போது கிரிக்கெட் ஆடுவதில்லை என்றாலும் சர்ச்சைகளை இன்னும் விடவில்லை.
நேற்று ட்விட்டரில் கமல்ஹாசனை வம்புக்கிழுத்திருக்கிறார்.
’தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருக்கும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இருக்கின்றன. மக்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும்’ என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை கமல்ஹாசன் வாழ்த்தியது செய்தியாக வந்திருந்தது.
அந்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்ட சிவாராமகிருஷ்ணன், கூடவே தனது கமெண்ட்டையும் பதிந்திருக்கிறார்.
‘சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசனை சந்தித்தேன். என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்கள். அப்போது அவர், ‘நான் விளையாட்டுக்களை பார்ப்பதில்லை’ என்று குறிப்பிட்டார். அப்படி பேசி ஒரு வாரத்துக்குள் இந்த செய்தி வந்திருக்கிறது. தான் மிகச் சிறந்த நடிகர் என்பதை நிருபித்திருக்கிறார்’ என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் சிவா.
இதனைப் பார்த்ததும் கமல் ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள். உன்னை அடையாளம் தெரியவில்லை என்பதால் கமலைக் கிண்டல் செய்கிறீர்களா, நீங்கள் கிரிக்கெட் விளையாடிய போது என்னென்ன மோசமான காரியங்களை செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்…இப்படி பல கமெண்டுகள். ஆனால் இந்த கமெண்டுகள் எதற்கும் சிவா பதில் சொல்லவில்லை.
முன்னாள் கிரிக்கெட் வீரர் டபுள்யுவி ராமன், சிவாவின் பதிவுக்கு ‘சினிமா நடிகர் சிவராமகிருஷ்ணனை அவருக்கு தெரிந்திருக்க வேண்டுமே’ என்று கேட்டிருந்தார். அதற்கு சிரிப்பு எமோஜியை பதிலாக தந்திருக்கிறார் சிவா. சிவராமகிருஷ்ணன் தமிழ்த் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் பதிவுகள் மூலம் சர்ச்சைகளில் சிக்குவது சிவராமகிருஷ்ணனுக்கு புதிதல்ல.
சமீபத்தில் வெளியான சல்மான் கான் படத்தில் வேட்டியைக் கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடியிருப்பார்கள். அந்த டான்ஸை பார்த்ததும் சிவராமகிருஷ்ணனுக்கு டென்ஷன்.
’இது லுங்கி இல்லை. வேட்டி. தென்னிந்திய கலாச்சாரத்தை அசிங்கப்படுத்துகிறீர்கள். கேவலமாக காட்டியிருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். வேட்டி, லுங்கி படங்களையும் வெளியிட்டார்.
அதற்கு சல்மான் கான் ரசிகர்கள் சிவராமகிருஷ்ணனை கடுமையாக விமர்சித்தார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் லுங்கி ரசிகர்களும் அவரை விமர்சித்தார்கள். லுங்கி என்றால் கேவலாமா? வேட்டி உயர்வானதா என்று வறுத்தெடுத்தார்கள்.