ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த விஷயங்களில் ஒன்று கோலியின் கையிலுள்ள டாட்டு.
கோலியின் கையில் உள்ள இந்த டாட்டூவை வரைந்திருப்பவர் சன்னி பவுஷாலி (Sunny Bhanushali). இவர் ஏலியன்ஸ் டாட்டூ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த டாட்டூ மட்டுமின்றி கோலியின் உடலில் மேலும் பல இடங்களில் அவர் டாட்டூக்களை வரைந்திருக்கிறார்.
கோலியுடனான தனது தொடர்பு பற்றி கூறும் அவர், “2 ஆண்டுகளுக்கு முன்பு கோலி ஒருநாள் எங்கள் ஸ்டுடியோவுக்கு வந்தார். எங்கள் நிறுவனத்தைப் பற்றி கேள்விப்பட்டதாக கூறிய அவர், தனது உடலில் சில டாட்டூக்களை வரைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது முதல் அவருக்கு நாங்கள் டாட்டூக்களை வரைந்து கொடுக்கிறோம்.
இந்த சூழலில் 2 மாதங்களுக்கு முன் என்னைத் தொடர்புகொண்ட கோலி, ‘என் வலது கையில் இப்போது உள்ள டாட்டூவை மாற்றியமைக்க வேண்டும். தனது ஆன்மிக நாட்டத்தை எடுத்துக் கூறும் வகையில் அந்த டாட்டூ இருக்கவேண்டும்’ என்று கூறினார்.
அப்போது அவர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப இந்த புதிய டாட்டூவை அவரது கையில் வரைந்து கொடுத்தேன். இந்த டாட்டூவை வரைந்துகொள்ள அவர் வந்த நாளில் எங்கள் ஸ்டுடியோவில் இருந்த மற்றவர்களை வெளியேற்றிவிட்டேன். நானும் பாதுகாப்பு ஊழியர்களும் மட்டும் உள்ளே இருந்தோம். பிசியான தனது வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியிலும் இந்த டாட்டூவை வரைய 12 மணிநேரம் ஒதுக்கித் தந்தார் கோலி. அவரது வாழ்க்கையில் இனிவரும் காலம் முழுக்க இந்த டாட்டூவும் இருக்கும் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் சன்னி பவுஷாலி.
தோனியின் கோபம்; டென்ஷனில் ரசிகர்கள்
பொதுவெளியில் பெரும்பாலும் கோபத்தைக் காட்டமாட்டார் தோனி. போட்டி நடக்கும்போது பந்துவீச்சாளர்களோ அல்லது பீல்டர்களோ தப்பு செய்தாலும் உடனடியாக திட்டமார். அது அவர்களின் ஈகோவைப் பாதிக்கும், சில சமயங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பது தோனியின் கருத்து.
உதாரணமாக ஒரு பந்துவீச்சாளர் தவறு செய்யும்போது அவரைத் திட்டினால், அடுத்த பந்தை அவர் பதற்றத்துடன் வீசுவார். இது அவரது பந்துவீச்சின் திறனை பாதிக்கும் என்பது தோனியின் கருத்து. அதனாலேயே தோனி மைதானத்தில் யாரிடமும் கோபப்பட மாட்டார்.
ஆனால் அப்படிப்பட்ட தோனியையே கோபப்பட வைத்துள்ளனர் இப்போதைய சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள். அவர்கள்மீது தோனியின் கோபப்பார்வை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே விழுந்துவிட்டது. இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹங்கர்கேகரும், இம்பாக்ட் பிளேயராய் வந்து எதிரணிக்கான இம்பாக்ட் பிளேயராய் மாறி 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த தேஷ்பாண்டேவும் வைட் மற்றும் நோபால்களை வீச டென்ஷனாகி இருக்கிறார் தோனி. இனியும் இப்படி நடக்கக்கூடாது என்ரு எச்சரித்திருக்கிறார்.
ஆனால் அவரது எச்சரிக்கையையும் மீறி நேற்று நடந்த போட்டியிலும் இருவரும் நோபால் மற்றும் வைடுகளை வீசியுள்ளனர். இந்த முறை அனுபவ வீரரான தீபக் சாஹரும் சேர்ந்துகொள்ள கொதித்துப் போயிருக்கிறார் தோனி. அதனால் வழக்கத்துக்கு மாறாக பந்துவீசி முடித்த உடனேயே அவர்களை நோக்கி கோபமாக வார்த்தைகளை வீசியுள்ளார்.
பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த எக்ஸ்டிராக்களைப் பற்றி கூறிய அவர், ‘இரண்டாவது முறையாக எச்சரிக்கிறேன். இனியும் இது தொடர்ந்தால் வேறு புதிய கேப்டனின் கீழ் ஆடவேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார். பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாடாக பந்துவீசாவிட்டால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவேன் என்பதைத்தான் இப்படி சொல்லியிருக்கிறார் மஹேந்திரசிங் தோனி.