கேரளாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் குண்டு வைத்ததாக சரணடைந்திருக்கும் மார்ட்டின் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் திகைக்க வைக்கிறது. மார்ட்டீன் யார்? ஏன் அவர் இதை செய்தார்? அவர் பின்பற்றும் ஜெகோவா சாட்சிகள் மத சித்தாந்தம் என்ன?
கேரளா குண்டு வெடிப்பு
கேரளாவில் கொச்சிக்கு அருகில் உள்ள களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (27-10-23) முதல் ஜெகோவாவின் சாட்சியம் என்ற மதப் பிரிவினரின் மாநாடு நடந்து வந்தது. அந்த மாநாட்டுக் கூடத்தில் சுமார் 2,500 பேர் கூடியிருந்தனர்.
மூன்றாவது நாள் மாநாடு ஞாயிறு (29-10-23) காலையில் 9.30 மணிக்கு தொடங்கியது. 9.40க்கு பிரார்த்தனை நடைபெற்றது. இதற்காக அனைவரும் அரங்கில் நின்று கொண்டிருந்த நிலையில் பிரார்த்தனை முடிந்ததும் மண்டபத்தின் மையப் பகுதியில் முதல் குண்டு வெடித்தது. தொடர்ந்து மண்டபத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் என அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டு வெடிப்பில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஒருவர் உடனடியாக உயிரிழந்தார். மண்டபத்தில் இருந்த பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சுமார் 50 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
முதலில் குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் வெளியானபோது கிறிஸ்தவ மத மாநாட்டில் குண்டு வெடிப்பு என்றே செய்திகள் வெளியாகின. பின்னர்தான், ஜெகோவா சாட்சிகள் என்ற பிரிவினர் மாநாட்டில் குண்டு வெடிப்பி நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகின.
யார் இந்த ஜெகோவா சாட்சிகள்?
ஜெகோவா சாட்சிகள், கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினர் என்ற நம்பிக்கையே பரவலாக இருந்தாலும், பிற கிறிஸ்தவப் பிரிவினர் இவர்களை கிறிஸ்தவர்களாக ஏற்பதில்லை; இவர்களும் மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக ஏற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கும் பைபிள் தான் வேத நூல். ஆனால், கிறிஸ்துவத்தின் பிற பிரிவினர் பைபிளை சரியாகப் படித்து விளங்கிக்கொள்ளவில்லை என்றும் தாங்களே அதனை முழுமையாகப் புரிந்து வைத்திருப்பதாகவும் ஜெகோவா சாட்சிகள் கூறுகின்றனர்.
இவர்களைப் பொறுத்தவரை ஜெகோவாவே முழுமுதல் கடவுள். ஜெகோவாவைத் தவிர வேறு யாரையும் இவர்கள் கடவுளாக ஏற்பதில்லை. ஜெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்பது இவர்களது நிலைப்பாடு. பொதுவாக, அலங்கரிக்கப்படாத அரங்குகளில் மொத்தமாகக் கூடி, பைபிளை வாசித்தும் பாடியும் ஜெகோவாவை வணங்குகிறார்கள். ஜெகோவா என்பது பழைய ஏற்பாட்டில் யூத மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல்.
ஜெகோவா சாட்சிகள், கிறிஸ்தவ மதத்தின் மிக முக்கிய அம்சமான அதிபுனித திரித்துவம் (Holy Trinity) எனப்படும் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவி’ என்பதை ஏற்பதில்லை. சிலுவையை வணங்குவதில்லை. கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடுவதில்லை. இயேசு கிறிஸ்துவை ஏற்கிறார்கள். ஆனால், அவரை வணங்குவதில்லை. இயற்கையையும் இவர்கள் வணங்கக்கூடாது.
முதலில், 1870களில் அமெரிக்காவில் வசித்த சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் என்பவரைப் பின்பற்றியவர்களால் பைபிள் மாணவர் இயக்கமாகத்தான் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது. 1881இல் இங்கிலாந்திற்கு இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சென்றதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வெளியே இந்த பிரிவு பரவ தொடங்கியது. 1900இல் லண்டனில் முதல் வெளிநாட்டுப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளிலும் இதன் பிரிவுகள் தொடங்கப்பட்டன.
சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் 1916இல் இறந்த பிறகு இந்தப் பிரிவில் பிளவுகள் தோன்றின. இதில் ஜோசப் ரூதர்போர்ட் என்பவர் தலைமையிலான பிரிவு, தலைமையகத்தைக் கைப்பற்றியது. இதற்குப் பிறகு, பல சித்தாந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. 1931இல் ஜெகோவாவின் சாட்சியங்கள் என்ற பெயர் இந்தப் பிரிவுக்கு சூட்டப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி, சோவியத் யூனியன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஜெகோவா சாட்சிகள் தடைசெய்யப்பட்டனர். இவர்கள் மீது பல தாக்குதல்களும் நடத்ததப்பட்டன. தொடர்ந்து நீதிமன்ற வழக்குகள் மூலம் தான் அந்தந்த நாடுகளில் தங்கள் உரிமையை பெற்றனர்.
கனடாவிலும் அமெரிக்காவிலும் வழக்குகள் மூலம் வீடு வீடாகச் சென்று தங்கள் புத்தகங்களை விநியோகிக்கும் உரிமையை உறுதி செய்தனர். கொடி வணக்கம் செய்யாமல் இருக்கவும் உரிமைகளைப் பெற்றனர். இவர்கள் எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை; வாக்களிப்பதும் இல்லை.
இப்போது உலகம் முழுவதும் 85 லட்சம் ஜெகோவா சாட்சிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரிவினருக்கான தலைமையகம் நியூயார்க்கில் இருக்கிறது.
இந்தியாவில் ஜெகோவா சாட்சிகள்?
ஜெகோவா சாட்சிகள் குறித்து இந்தியாவில் முதன் முதலில் பெரிய அளவில் தெரிய வந்தது 1985ல்தான். அதுவும் கேரளாவில் தான்.
கேரளாவில் கோட்டயத்தில் உள்ள ஒரு பள்ளியில், 1985ஆம் ஆண்டு, இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பினுமோல், பிந்து, பிஜோ இமானுவேல் ஆகிய மூன்று குழந்தைகள் தங்கள் மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, பள்ளியின் காலை கூட்டத்தில் தேசிய கீதம் பாட மறுத்தனர். இதற்காக அவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்டதும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. மாணவர்களைப் பள்ளியில் இருந்து நீக்கியது மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்று 1987இல் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அந்த மூன்று குழந்தைகளும் மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தர்மபுரியில் கடந்த ஆண்டு ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) கொடியேற்ற வரவில்லை என்று சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அவரும் ஜெகோவா சாட்சிகள் குழுவை சேர்ந்தவர் தான்.
இந்தப் பிரிவை நம்புபவர்களில் எல்லா மதத்தினரும் இருக்கிறார்கள். கேரளா குண்டுவெடிப்பில் உயிரிழந்த 54 வயதுப் பெண்மணியான, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த குமாரி புஷ்பன் ஒரு இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் குண்டு வெடிப்பு?
கேரளாவில் ஜெகோவா சாட்சிகள் மாநாட்டில் நடந்த குண்டுவெடிப்பை தானே நிகழ்த்தியதாகக் கொச்சியின் தம்மனம் பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சம்பவம் நடந்த ஞாயிறு மதியமே சரணடைந்துவிட்டார். ஜெகோவாவின் சாட்சியங்கள் குழுவில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தான் இணைந்ததாகவும், அக்குழுவின் மீது 6 ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் இதனைச் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
தம்மனத்தில் குறுகிய தெரு ஒன்றில், ஒரு மாடி வீட்டை வாடகைக்கு எடுத்து மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார் டொமினிக் மார்ட்டின். டொமினிக்கிற்கு இரண்டு குழந்தைகள். மகன் பிரிட்டனில் இருக்கிறார். மகள் கொச்சியிலேயே வேலை பார்த்து வருகிறார்.
தம்மனத்தில் டொமினிக் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அந்தப் பகுதியில் டொமினிக்கை தெரிந்தவர்கள் அனைவரும், இதுபோல் ஒரு செயலில் அவர் ஈடுபட்டார் என்பதை தங்களால் நம்ப முடியவில்லை என்றே தெரிவித்துள்ளனர். அந்தளவு அமைதியானவர் அவர் என்கிறார்கள்.
“டொமினிக் ஐந்தரை வருடங்களுக்கு முன்பாக இங்கே குடிவந்தார். ஆங்கிலம் பேச சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக வேலை பார்த்தார். கொரோனா காலகட்டத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். திரும்பிவந்து வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. இதுவரை அவரால் அக்கம்பக்கத்தினருடன் எந்தப் பிரச்சினையும் எந்த சண்டை சச்சரவும் வந்ததில்லை. தன் மகளின் மீது மிகவும் பாசமாக இருந்தார். யார் கூடவும் அதிகம் பேச மாட்டார். அவருடைய மனைவிதான் ஏதாவது கேட்பார். குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஞாயிறு அதிகாலை ஐந்து மணியளவில் தன்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்தேன்” என்று அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இப்போது டொமினிக் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடி மருந்துச் சட்டம், கொலை முயற்சி, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் இல்லாத நிலையில் அவர் எங்கே இருந்தார்? யாருடன் தொடர்பில் இருந்தார்? என்ன செய்துகொண்டிருந்தார் என்பதையெல்லாம் காவல்துறை விசாரித்து வருகிறது.
இன்னும் என்னன்ன ஆச்சரியங்கள் வெளிவரப் போகிறதோ?