No menu items!

அச்சத்தில் அமர் பிரசாத் புலம்பலில் செந்தில் பாலாஜி – மிஸ் ரகசியா

அச்சத்தில் அமர் பிரசாத் புலம்பலில் செந்தில் பாலாஜி – மிஸ் ரகசியா

“அமர்பிரசாத் ரெட்டி எப்ப வெளிய வருவார்? தீபாவளிக்கு முன்னாடி வந்துடுவாரா?”

உள்ளே நுழைந்த ரகசியாவிடம் கேட்டோம்.

”பாஜககாரங்களே இவ்வளவு ஆர்வமா கேக்கல …நீங்க இவ்வளவு ஆர்வமா கேக்குறிங்களே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் ரகசியா.

“தொட்டுப் பார், தூக்கிப் பாருனுலாம் சவால் விட்டாரே? அதான் எவ்வளவு நாள் உள்ள வச்சிருக்காங்கனு ஒரு சின்ன ஆர்வம். அமர் விடுதலைல பாஜககாரங்களுக்கு ஆர்வம் இல்லையா”

“உங்க அளவு ஆர்வம் இல்லைனு சொன்னேன். அவரை அண்ணாமலை ஆளுனு கட்சியில பார்க்கிறாங்க. இப்போ கூட நீதிமன்றத்துலருந்து வெளில வரும்போது இந்த அமரை தடுக்கப் பார்க்கிறாங்கனு அமர் பிரசாத் ரெட்டி பிரஸ் ஆளுங்க கிட்ட சொன்னார். இது பாஜககாரங்களுக்கு பிடிக்கல. பாஜக வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறாங்கனு சொல்லாம அமரை தடுக்கப் பார்க்கிறாங்கனு சொல்லி சுய புராணம் பாடுறார்னு கமலாலயத்துல முணுமுணுக்கிறாங்க”

”ஆனா ஜெயில்ல அமர்பிரசாத் ரெட்டி ரொம்ப கஷ்டப்படுறார்னுல நியூஸ் வருது”

“ஆமாம். சொகுசா வாழ்ந்தவர். ஜெயில்ல சாப்பிடுறது, தூங்குறது, டாய்லெட் போறது எல்லாமே அவருக்கு கஷ்டமா இருக்குப் போல. எப்படியாது சீக்கிரம் வெளில எடுத்துருங்கனு வழக்கறிஞர்கள்கிட்ட சொல்லியிருக்காரு. அவர் மேல குண்டாஸ் போட்டுருவாங்களோனு பயப்படுறார். அதனாலதான் அவர் மனைவி நீதிமன்றத்துல அவசரமா மனு கொடுத்திருக்காங்க”

“அண்ணாமலையும் அவர் பத்தி பேசலையே?”

“அவருக்கு இருக்கிற பிரச்சினைல அவர் அமர் பிரசாத் ரெட்டி பத்திலாம் யோசிக்கிற அளவுக்கு இல்லை”

“அவருக்கு என்ன பிரச்சினை? இப்ப கூட அவர் வீட்டுக்கு பாஜக குழு போயிருக்கே…”

“அதுதான் பிரச்சினை. பாஜகவினர் மீது பொய் வழக்கு போடுறதா சொல்லி அதை விசாரிக்க சதானந்தா கவுடா தலைமையில் ஒரு குழு சென்னைக்கு வந்தது. அவங்க அண்ணாமலை வீட்டுக்குப் போயிருக்காங்க. ஆனா அவங்க போன போது அண்ணாமலை வீட்டுல இல்லை. நடை பயணத்துல இருக்கிறார்னு சொல்லியிருக்காங்க. டெல்லி மேலிடம் ஒரு குழு அனுப்பியிருக்கு. மாநிலத் தலைவரா அவர்தான் அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லணும். ஆனா, அவர் ஊர்லேயே இல்லனா எப்படி வந்தவங்க டென்ஷனாகியிருக்காங்க”

“இதுக்கு அண்ணாமலை பதில் என்ன?”

“நான் தனிப்பட்ட பயணமா போனேன்? கட்சியை வளர்க்கறதுக்குதானே நடையா நடந்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லியிருக்கார். ஏற்கனவே அண்ணாமலை மேல பாஜகவினர் ஏகப்பட்ட புகார் சொல்லியிருக்காங்க. அந்த லிஸ்ட்ல இதுவும் சேர்ந்துருக்கு”

“அந்தக் குழு விசாரிச்சு என்ன நடவடிக்கை எடுத்துருக்கு?”

”நிறைய பேரை கூப்ட்டு பேசியிருக்காங்க. தகவல்களை கலெக்ட் பண்ணியிருக்காங்க. பாஜகவினர் மேல தமிழ்நாடு அரசு 409 பொய் வழக்குகளை போட்டிருக்கறதா ஆளுநர்கிட்ட மனு கொடுத்திருக்காங்க. அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிட்டயும் இந்த ரிப்போர்ட்டை கொடுக்கப் போறாங்களாம்”

“அவங்ககிட்ட ஆளுநர் என்ன பேசினாராம்?”

“ஐடி ரெய்டு, அமலாக்கத் துறை சோதனையெல்லாம் திமுகவோட நிதி நிலையை கட்டுப்படுத்தல. வேற எதையாவது செஞ்சாதான் நாடாளுமன்ற தேர்தல்ல அவங்களை கட்டுப்படுத்த முடியும்னு தன்னை சந்திக்க வந்த சதானந்த கவுடா தலைமையிலான குழுகிட்ட ஆளுநர் சொன்னதா பாஜக வட்டாரத்துல பேச்சு இருக்கு. கவர்னர் சொன்னதை டெல்லியில் பேசுவதாக சொல்லி இருக்கிறார்கள்.”

”திமுக சைட்ல இதுக்கு என்ன ரியாக்‌ஷன்?”

“அவங்க இதைப் பத்திலாம் கவலைப்படல. நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க, ஆள் தேடிட்டு இருக்கு”

“பிரசாந்த் கிஷோர் மாதிரியா? யாராவது கிடைச்சாங்களா?”

“கடந்த சட்டமன்ற தேர்தல்ல பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். ஆனா இப்ப அவர் அரசியல்வாதியா மாறி பீஹார்ல நிதீஷ் குமாருக்கு குடைச்சல் கொடுத்துட்டு இருக்கார். அவர் இல்லாததனால நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூக அமைப்பாளரா யாரை நியமிக்கலாம்னு திமுக தீவிரமா யோசிச்சு சுனிலை செலக்ட் பண்ணியிருக்கு”

“சுனிலா? 2021 தேர்தல்ல அதிமுகவுக்காக பணியாற்றினவரா?”

“ஆமாம். அவரேதான். போன சட்டமன்ற தேர்தல்ல, அதிமுக படுதோல்வி அடையும்னு எல்லாரும் சொன்னப்ப, அந்தக் கட்சி 60 இடங்களுக்கு மேல ஜெயிக்கறதுக்கு காரணமா இருந்தவர் சுனில். அவர்தான் அதுக்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்திருக்கார். அதுக்குப் பிறகு ராகுல் காந்தி நடைப்பயணம் செய்தப்ப, அது வெற்றிகரமா முடிய சுனில்தான் யோசனைகளைச் சொல்லி இருக்கார். இந்த சூழல்ல நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கிற பொறுப்பை அவர்கிட்ட ஒப்படைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. இதுபத்தி சுனில்கிட்ட திமுக தலைமை பேசிட்டு இருக்குனு அறிவாலயத்துல சொல்றாங்க”

“தேர்தல் வேலையில திமுக தீவிரமாயிடுச்சுன்னு சொல்லு.”

“ஆமாம். எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகளைக் கொடுக்கறதுன்னுகூட முடிவு எடுத்துட்டாங்களாம். 5 மாநில தேர்தல் முடிஞ்சதும் அதை முறைப்படி அறிவிக்கலாம்னு அவங்க காத்துட்டு இருக்காங்க. இந்த தேர்தல்ல காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்கள்லயாவது ஜெயிச்சா, திமுக அவங்களுக்கு மரியாதையான அளவுல தொகுதிகளை ஒதுக்கும். அப்படி இல்லைன்னா காங்கிரஸ் கட்சியோட நிலை கொஞ்சம் கஷ்டம்தான்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க.”

“ஒருவேளை 5 மாநில தேர்தல்ல காங்கிரஸ் கட்சி தோத்தா, அவங்களுக்கு குறைவா கொடுத்துட்டு புதுக் கட்சி எதையாவது உள்ள கொண்டு வருவாங்களோ?”

“அப்படித்தான் இருக்கும்னு நானும் நினைக்கறேன்”

“தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப் போன எடப்பாடிக்கு எதிரா கோஷம் எழுப்பி, கார் மேல செருப்பெல்லாம் வீசி இருக்காங்களே?”

“தேவர் குருபூஜைக்கு போனா இப்படியெல்லாம் நடக்கும்னு எடப்பாடிக்கு ரெண்டு நாள் முன்னாடியே தெரிஞ்சிருக்கு. அவரும் முன்னாள் அமைச்சர்களைக் கூப்பிட்டு, ‘தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நான் வரும்போது ஓபிஎஸ் ஆட்களும், தினகரன் ஆட்களும் ஏதோ பிரச்சினை செய்யப் போறதா எனக்கு தகவல் வந்திருக்கு. அவங்க என்ன வேணும்னாலும் செய்யட்டும். அந்த இடத்தில் பதில் நடவடிக்கையா நம்ம தொண்டர்கள் எதுவும் செய்யக்கூடாது. எதிர்ப்பு குரல்கூட ஒலிக்க கூடாது. அமைதியா இருக்கணும். நீங்கதான் பொறுப்பா இருந்து இதைப் பார்த்துக்கணும்’னு சொல்லி இருக்கார். எடப்பாடி கணிச்சபடி அவருக்கு எதிரா சிலர் கோஷம் போட்டிருக்காங்க. அவர் கார் மீதும் செருப்பு, கற்கள் வீசப்பட்டிருக்கு. இதுபத்தி செய்தியாளர்கள் கேட்டதுக்கு, ‘நான் இங்க அரசியல் பேச விரும்பவில்லை’ன்னு சொல்லி எடப்பாடி நகர்ந்திருக்கார்.”

”யார் இந்த கலாட்டாவை செஞ்சது? ஏதாவது தகவல் உண்டா?”

“ஓபிஎஸ்ஸும் தினகரனு சேர்ந்து பண்ணியிருக்காங்கனு அதிமுக முக்கிய தலைவர்கள் சொல்றாங்க. சசிகலா ஆட்கள் இதுல தலையிடலையாம்”

“எல்லாம் ஒண்ணுதானே….சரி, செந்தில்பாலாஜி பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா?”

“அவர் ரொம்பவே நொடிஞ்சு போய் இருக்கறதா சில சிறைத் துறை அதிகாரிங்க சொல்றாங்க. சரியா சாப்பிடாம, தூங்காம அவர் நிலை ரொம்ப மோசமா இருக்காம். தன்னோட நிலைபத்தி சிறைத்துறை அதிகாரிங்ககிட்ட பேசின செந்தில்பாலாஜி, ‘மதுக்கடையில ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வசூல் செஞ்ச விவகாரம் எனக்கு கட்சியில கெட்டபெயரை ஏற்படுத்திச்சு. அதோட மத்த தலைவர்களை விட அதிகமா அண்ணாமலையை விமர்சிச்சதும் எனக்கு இந்த நிலை வர காரணமாயிடுச்சு. ஜெயலலிதா ஆட்சிக்காலத்துல நான் செல்வாக்கா இருந்தேன். அப்படியே ஒதுங்கி இருந்தா நிம்மதியா இருந்திருக்கும். இப்ப நிம்மதி இல்லாம தவிக்கறேன்’ன்னு சொல்லி புலம்பினாராம்”

”அவரை எப்போ வெளில விடப் போறாங்க”

“வந்ததும் அமர்பிரசாத் ரெட்டியை எப்போ வெளில விடுவாங்கனு கேட்டிங்க. இப்போ செந்தில் பாலாஜியை எப்போ வெளில விடுவாங்கனு கேக்குறிங்க. கோர்ட்ல தீர்மானிக்கிற விஷயத்தை என்கிட்ட கேட்டா எப்படி?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...