நேற்று கமல்ஹாசனின் 69வது பிறந்த நாள். தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வாயுஜல் இயந்திரத்தை கொடுத்தார் கமல்.
“இங்கே வாயு ஜல் என்ற இயந்திரத்தை வழங்கியிருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக, ராஜ்கமல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் நீரை நான் பருகி வருகிறேன். ஆரோக்கியமாகவும் இருந்து வருகிறேன். இந்த இயந்திரம் இங்கே குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு பயன்பட வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது இதை பயன்படுத்தலாம்” என்று செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
இது என்ன வாயுஜல். இது எப்படி தண்ணீர் கொடுக்கிறது?
இந்த வாயு ஜல் இயந்திரத்தை கண்டுபிடித்தது சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள். 2019ஆம் ஆண்டு இது குறித்து செய்திகள் வந்தன.
காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை இந்த இயந்திரம் எடுத்து தண்ணீராக மாற்றுகிறது. இதை atmospheric water generator என்கிறார்கள். அந்தத் தண்ணீரை சுத்தப்படுத்தி தாதுக்கள் சேர்த்து குடிநீராக வழங்குகிறது. இது சூரிய சக்தியில் இயங்கும். காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை தண்ணீராக்குவது என்பது எளிமையான அறிவியல் கோட்பாடுதான். ஆனால் இந்த இயந்திரத்தில் உள்ள சிறப்பு இது குறைந்த செலவில் நீரை உருவாக்குவதுதான். இந்த இயந்திரம் சூரியசக்தியில் இயங்குகிறது. நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும் மக்கள் பயன்பாட்டுக்காக வியாபார ரீதியாக இயந்திரங்கள் தயாரிப்பு தொடங்கியது.
வாயு ஜல் இயந்திரத்தை சென்னையில் வாங்கிய முதல் சிலரில் கமல்ஹாசனும் ஒருவர். தனது ராஜ்கமல் அலுவலகத்தில் இதை வைத்திருக்கிறார். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் மூலம் இந்த வாயுஜல் இயந்திரம் பள்ளி ஒன்றுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.