எழுத்தாளர் இந்துமதி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மறைந்த அரசியல் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜானகி அம்மையார், ஜெயலலிதா ஆகியோருடனான தனது நட்புகள் பற்றி பகிர்ந்துகொண்டார். அது இங்கே…
முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
எம்.ஜி.ஆருடனும் உங்களுக்கு நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதைப் பற்றி சொல்ல முடியுமா?
எனக்கு தெரிந்த எம்.ஜி.ஆர். மிக கன்னியமானவர்.
ஜெயலலிதா வழியாகத்தான் எம்.ஜி.ஆர். உடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே, எம்.ஜி.ஆருடனான சந்திப்புகள், பேச்சுகள் எல்லாவற்றையுமே நான் ஜெயலலிதாவிடம் சொல்லிவிடுவேன். இன்று கூப்பிட்டார், ஆபிஸுக்கு வரச் சொல்லியிருக்காங்க, இதைப் பற்றி கேட்டார் என எல்லாவற்றையும் பகிர்ந்துவிடுவேன். ஆனால் ஜெயலலிதா, “நீ எம்.ஜி.ஆரைப் பார்க்க போய் வருவதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது, இந்துமதி. உன்னை எனக்கு நல்லா தெரியும். எனவே, உன்னைப் பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது” என்பார். ஆனாலும் நான், “இல்லைங்க, உங்களிடம் சொல்லாமல் நான் போகவும் மாட்டேன், அவருடன் பேசவும் மாட்டேன்” என்று எல்லாவற்றையுமே சொல்லிவிடுவேன்.
யாருடன் நான் பழகினாலும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுடனும் நான் பழகிவிடுவேன். எந்த ஆணாக இருந்தாலும் அவரது மனைவி, சகோதரி, அம்மா என அந்த வீட்டில் உள்ள பெண்கள் அனைவருடனும் நான் பழக்கம் ஏற்படுத்திக்கொள்வேன். அது எனக்கும் பாதுகாப்பு, என் பெயருக்கும் பாதுகாப்பு.
அப்படி எம்.ஜி.ஆருடன் பழகும்போது அவரது மனைவி ஜானகி அம்மாவுடனும் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.
கருணாநிதியுடனான நட்பு பற்றி…
கலைஞர் மிக பிரியமானவர். எங்கள் வீட்டுக்கு வருவார். படித்த புத்தகங்கள் பற்றி பேசுவார், நான் படித்த புத்தகங்கள் பற்றி கேட்பார். ‘முரசொலி படி’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ‘எனக்கு முரசொலி பிடிக்காதுங்க’ என்று அவரிடமே சொன்னேன். அவருடைய ‘நெஞ்சுக்கு நீதி’ நூல் கொடுத்தார். அவருடைய பேனாவை கேட்டேன். ‘என் பேனாவை யாருக்கும் தரமாட்டேன்’ என்று முதலில் மறுத்தார். ஒவ்வொரு முறையும் கேட்பேன், ‘கொடுக்க மாட்டேன், கொடுக்க மாட்டேன்’ என்று மறுத்துக்கொண்டே இருந்தார். ‘உங்கள் பேனாவை வாங்கிவிட்டால் உங்கள் அறிவை வாங்கிவிட்டதாக அர்த்தம் இல்லை. உங்கள் மீதான பிரியத்தால் கேட்கிறேன். உங்களிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. பேனா மட்டும்தான் கேட்கிறேன்’ என்று சண்டை போட்டேன். அப்புறம் கொடுத்தார்.
கருணாநிதியுடன் அரசியல் பேசுவீர்களா?
ஐய்யய்யோ… அந்தளவு எனக்கு அரசியல் நிபுணத்துவம் கிடையாது. அவருடைய சாணக்கியத்துவத்துக்கு முன்னால் நான் என்ன பேசிவிட முடியும். இலக்கியம் மட்டும்தான் பேசுவோம். ஜெயலலிதாவுடனும் அப்படித்தான். அரசியல் கிடையாது, புத்தகங்கள் பற்றி மட்டுமே பேசுவோம்.
நான் பேசியது வரைக்கும், கலைஞருக்கு தற்கால இலக்கியம் அவ்வளவாக பிடித்தம் இல்லை. ஆனால், எல்லாம் படிப்பார். இன்றைய சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் அவருக்கு விருப்பம் இல்லை; ஜெயகாந்தன் பிடிக்கும். வாலி பற்றி, கண்ணதாசன் பற்றி, குமுதம் பற்றி, குங்குமம் பற்றி, அவருடைய எழுத்துகள், பேச்சுகள் பற்றி எல்லாம் நாங்கள் பேசியிருக்கிறோம்.
உங்கள் எழுத்துகள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?
என்னுடைய புத்தகம் ஒன்றுக்கு கலைஞர் முன்னுரை கொடுத்துள்ளார். என் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ படித்துவிட்டு, ‘நல்ல பாப்பார நடையில் எழுதியிருக்கே’ என்றார். ‘பாப்பாத்தி பாப்பார நடையில்தானே எழுதுவேன்’ என்றேன். ’ஆனால், கருத்துகள் பிரமாதம், ரொம்ப நல்லாயிருக்கு’ என்றார்.
ஜெயலலிதாவுடனான உங்கள் நட்பு பற்றி கருணாநிதிக்கு தெரியும். அது பற்றி எதாவது சொல்லியிருக்கிறாரா?
ஒன்றுமே சொன்னதில்லை.