டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி… கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகம் கொண்டவர். மருத்துவம், இலக்கியம் தொடர்பாக பல நூல்களை எழுதியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, இவர் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினின் ஒரே தம்பி. ஆனால், இந்த தன் அரசியல் பின்புலத்தை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அரசுப் பணி, ஆன்மிக சொற்பொழிவுகள் என இருக்கும் ஆச்சர்யக்காரர். டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பிரேத்யேக பேட்டியில் அக்கா துர்கா ஸ்டாலின், மச்சான் மு.க. ஸ்டாலின், மருமகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பம் குறித்து மனம் திறந்து பேசினார்.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பக்தி எல்லோரிடமும் இருக்கும்; ஆனால், துர்கா ஸ்டாலினிடம் பார்ப்பது தீவிர பக்தி. சிறு வயதிலேயே அவர்கள் இப்படித்தானா?
ஆமாம், ஸ்கூலில் படிக்கும் போதே அக்கா இப்படித்தான். வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை தவறாமல் மாரியம்மன் கோயிலுக்கு போவாங்க. எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே பிள்ளையார் கோயில் இருந்தது. அடிக்கடி அங்கே போவாங்க. தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடைந்திருக்கும் உயரம், அக்கா கடவுள் மேல் வைத்துள்ள நம்பிக்கையால் விளைந்ததுதான் என்றுகூட சிலர் சொல்றாங்க. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதலமைச்சர் பதவியேற்றபோது அக்கா கண்ணீர் விட்டதை நீங்களும் பார்த்திருப்பீங்க. இதற்காக எத்தனை கோயில் போயிருப்பாங்க, எத்தனை கடவுளிடம் வேண்டியிருப்பாங்க. அவரது கடின உழைப்பால் மக்கள் ஆதரவைப் பெற்று, அவர்கள் ஓட்டு போட்டுதான் மச்சான் முதலமைச்சரானார் என்றாலும், தெய்வ பலமும் தேவை என்பதை அந்த கண்ணீர் எனக்கு உணர்த்தியது.
கலைஞர் இறை மறுப்பாளர். உங்கள் குடும்பமோ தீவிர இறை நம்பிக்கை உள்ள குடும்பம். அந்தவகையில், அக்காவை கலைஞர் குடும்பத்தில் திருமணம் செய்துக் கொடுக்க உங்கள் குடும்பத்துக்கு தயக்கம் இருந்ததா?
அப்பாவுக்கும் சரி, எங்கள் வீட்டில் மற்ற யாருக்கும் சரி அந்த தயக்கம் இருந்ததே இல்லை. காரணம், கலைஞர் பற்றி அப்போதே எங்களுக்கு நன்றாக தெரியும். அவர் மற்றவர்கள் நம்பிக்கைகளில் எப்போதும் குறுக்கிடவே மாட்டார். கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை; ஆனால், அவர் மனைவி, தயாளு அம்மாள் அத்தைக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. அதை கலைஞர் என்றும் தடுத்ததே இல்லையே. அத்தை எல்லா கோயிலுக்கும் போவாங்க; போகக்கூடாது என்றும் கலைஞர் சொன்னது இல்லை. அது அவர்களின் தனிமனித உரிமை; அதை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர் கலைஞர்.
என்னைப் பொறுத்தவரைக்கும் கலைஞர் ஒரு பெரிய ஞானி; அவரையும் ஒரு ஆன்மிகவாதியாகத்தான் நான் பார்க்கிறேன். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அதை உணர்ந்தவர் கலைஞர். அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்கிறார் வள்ளலார். அதை தன் செயலில் உணர்த்தியவர் கலைஞர். தன் கடைசி காலத்தில் ராமானுஜர் பற்றி எழுதினாரே. அவர் வீட்டு வாசலில் இருந்து இறங்கினால் நேர் எதிரே கிருஷ்ணன் கோவில். தினமும் அவர் போகும்போதும் வரும்போது கிருஷ்ணனை பார்த்துவிட்டுதான் போக வேண்டும், திரும்ப வேண்டும். யாருக்கு இது கிடைக்கும்? கலைஞர் காலமானது ஏகாதசி அன்றுதான். ஏகாதசி அன்று உயிர் நீங்குவது இந்து மத நம்பிக்கைப்படி புனிதமானது. கலைஞருக்கு இயற்கையாகவே அது அமைந்தது .
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற நம்பிக்கையைவிட கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி நாம் வாழ்கிறோமா என்பது மிக முக்கியம். அந்தவகையில் கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி வாழ்ந்தவர் கலைஞர்.
துர்கா ஸ்டாலின் உட்பட உங்களுக்கு மூன்று சகோதரிகள், நீங்கள் ஒரே சகோதரர். சகோதரிகள் மூவரில் உங்கள் மேல் அதிக பாசம் கொண்டவர் யார்?