No menu items!

சென்னையின் ஜூலேலால் உலகம்

சென்னையின் ஜூலேலால் உலகம்

சந்தியா நடராஜன்

2023 அக்டோபர் 18…

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அரங்கத்தில் வழக்கறிஞர் சிகரம் செந்தில் நாதனின் ‘குடியரசுத் தலைவர் – ஆளுநர் அதிகாரங்கள்’ நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்குச் சென்றிருந்த நான் உயர் நீதிமன்றத்துக்கு எதிரே என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள தேநீர்க் கடை ஒன்றில் டீ குடிக்கப் போனேன். அங்கே நின்று கொண்டிருந்த ஒருவர் என்னை அணுகி, “சார், எப்படியிருக்கீங்க – நான் உலாஸ் நகர் மோட்வானி… ஞாபகமிருக்கா சார்” என்றார்.

அவரை என்னால் நினைவுகூர முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் ஆங்கிலம் என்று கலந்துகட்டிப் பேசலானார். அவர் பேசப் பேச, யாரென அடையாளம் கண்டுகொண்டேன்.

அப்போது நான் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணியர் பட்டியல்களை ஆய்வு செய்து கொண்டிருந்த போது இந்தோனேஷியாவிலிருந்து மோட்வானி என்ற நபர் அடிக்கடி சென்னைக்கு வந்துபோவது தெரிந்தது. அது குறித்த விசாரணையில், மோட்வானி ஒவ்வொரு முறையும் முதல் வகுப்பில் பயணம் செய்வதும் புலனாகியது. ‘மோட்வானி’ எனது இலக்கானார். ஒவ்வொரு நாளும் சென்னை வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணியர் பட்டியலில் ‘மோட்வானி’ என்ற பெயர் உள்ளதா என்று கண்காணித்து வந்தேன்.

ஓர் இரவில் மோட்வானி சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் முதல் வகுப்புப் பயணி என்பதால் அவரது சூட்கேஸ்கள் சீக்கிரமே வந்துவிட்டன. அவற்றை எடுத்துக்கொண்டு கிரின் சேனல் வழியாக வெளியேற முயன்ற மோட்வானியைத் தடுத்து நிறுத்தி விசாரித்தேன். தன்னை இந்தோனேஷியாவில் ஒரு தொழிலதிபராகக் காட்டிக்கொண்டார். அவரது சூட்கேஸ்களைத் திறக்கச் சொன்னபோது அவரது பேச்சும் உடல்மொழியும் மாறி, அவரைப் பம்பாயிலுள்ள ‘உலாஸ் நகர்’ பேர்வழியாகக் காட்டிக் கொடுத்தன.

அவர் கொண்டுவந்த இரண்டு சூட்கேஸ்களிலும் ‘குடாங் கரம்’ (KUDANG GRAM) என்ற இந்தோனேஷிய சிகரெட் கார்ட்டன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குடாங் கரம் உயர் ரகப் புகையிலையுடன் கிராம்பைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் சிகரெட். பொதுவாக இந்த சிகரெட்டைப் பெண்கள் விரும்பிப் புகைப்பார்கள். இது பம்பாயில் அதிகம் விற்பனையாகும் ரகம். சிகரெட்டுக்குச் சுங்க வரி கட்டி மாளாது. எல்லா சிகரெட்டுகளும் சுங்க சட்டத்தின் கீழ்க் கைப்பற்றப்பட்டன. விதி மீறலுக்காக அவர் மீது அபராதமும் விதிக்கப்பட்டது. மோட்வானி வெறுங்கையுடன் விமான நிலையைத்தைவிட்டு வெளியேறினார். குறைந்த பட்சம் லட்சம் ரூபாய் நட்டமாகியிருக்கும்.

அந்த மோட்வானிதான் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸ் கார்னர் டீ கடையில் என்னைச் சந்தித்தவர். மோட்வானி ஒரு ‘சிந்தி’.

சிந்திக்காரர்கள் அடிப்படையில் வியாபாரிகள்; மென்மையானவர்கள்; பகைமை அறியாதவர்கள்; நட்புறவு பேணுபவர்கள்.

சென்னையில் மட்டும் குறைந்தபட்சம் 15,000 சிந்திக்காரர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் இந்திய விடுதலையின்போது பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள். இந்திய -பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த மதக் கலவரத்தால் புலம்பெயர்ந்து வந்து ஜோத்பூரில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்கி, சென்னைக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தவர்கள். அப்போது இந்திய சர்க்கார் இப்படி வந்தவர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறது.

இந்த சிந்திக்காரர்கள் பாகிஸ்தானின் ஷிகார்புர், ஹைதராபாத் ஆகிய இரண்டு இடங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த இடங்களால், இரு பிரிவாகப் பகுக்கப்படுகிறார்கள். இரு பிரிவினரும் இந்துக்கள்; இரு பிரிவினரும் பேசும் மொழி சிந்து.

ஷிகார்புர் என்றால் சௌகார்புர் என்று பொருள். அதாவது செல்வபுரி. ஷிகார்புர் சிந்திகள், ஹைதராபாத் சிந்திகளைவிட, சமூகத்திலும் பொருளாதாரத்திலும் உயர்ந்தவர்களா என்றால் அதற்கு உறுதியான பதில் சொல்ல முடியாது.

‘சிந்திகள்’ இந்து கடவுள்களையே வழிபடுகிறார்கள். ஒரு சிலர் சீக்கியக் கோயிலான குருத்வாராவுக்கும் செல்வதுண்டு. ஹோலி, தீபாவளி, சிவராத்ரி ஆகிய மூன்று பண்டிகைகளும் இவர்களது மதம் சார்ந்த கொண்டாட்ட தினங்கள். சிவராத்ரி அன்று ‘பாங்கு’ என்றழைக்கப்படும் அபின் சௌகார்பேட்டை வட்டாரத்தில் ரகசியமாக விற்பனையாகும். யோகத்தில் இருக்கும் சிவனை வழிபடும் பக்தர்கள் ‘பாங்கு’ மூலம் யோக நிலை அடையலாம் என்று நினைத்திருக்கலாம். கொட்டைப் பாக்கு அளவுக்கு இரண்டு பாங்கு உருண்டைகளைப் பாதாம் பாலில் கலந்து அருந்துகிறவர் ‘நிலமிசை நீடு வாழ்வோரோ’ இல்லையோ ‘விண் ஏகி எண் திசை’யிலும் பறந்து மகிழ்ந்து திரிவர். மண்ணிறங்க நெடு நேரம் பிடிக்கும்.

சிந்திக்காரர்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு தெய்வம் உண்டு. அத்தெய்வத்தின் பெயர் ஜூலேலால். சிந்தி இன மக்களைக் காப்பதற்கென்றே கடலிலிருந்து மீன் மீது ஏறி வந்தவர் ஜூலேலால் என்று சொல்கிறார்கள். ஜூலேலாலின் தீவிர பக்தர்களில் ஒருவரான ஷ்யாம் நாராயணன் சென்னையில் வசித்து வருகிறார். சென்னை எழும்பூர் தமிழ்ச் சாலையில் அமைந்துள்ள ‘சிந்து சதான்’ சென்னை வாழ் சிந்திக்காரர்களின் சமூகக் கூடம். இதே வளாகத்தில் ஜூலேலாலுக்கான வழிபாட்டு இடமும் உண்டு.

கிரிதாரிலால் தியோமல் பிரகாஷ், சிந்தி சதானின் மேனாள் தலைவர்; செயலர். தொடர்ந்து இந்த அமைப்பின் தீவிர செயல்பாட்டாளராக இருந்து வருகிறார். இணைய காலத் தலைமுறையைச் சார்ந்த சிந்திக்காரர்களிடையே சிந்தி கலாசார பண்பாட்டு எழுச்சி தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்துக்கள் ஒருவருக்கொருவர், “ஜெய் ராம்’, ‘ஜெய் பஜ்ரங்பலி’ என்று சொல்லிக்கொள்வதுபோல சிந்தி இளைஞர்கள், ‘ஜெய் ஜூலேலால்’ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஜூலேலாலின் பிறந்த நாள் ஏப்ரல் 9. இந்த நாளை ‘செட்டி சந்’ என்று விமர்சையாகக் கொண்டாடுகிறது சிந்தி சமூகம். ஐந்து வகையான பழங்கள் மாவு பிசைந்து அதில் ஏற்றிய தீபம் அரிசி, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு ஜூலேலாலுக்கு வழிபாடு நடைபெறும். பஜனை பாடல்களும் வழிபாட்டின் ஒரு பகுதி. எல்லாம் முடிந்தபின் ஏற்றிய தீபமும் படைக்கப்பெற்ற பழங்களும் அரிசி சர்க்கரை எல்லாமும் எந்தக் கடலிலிருந்து ஜூலேலால் வந்தாரோ அந்தக் கடலுக்கே அர்ப்பணிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும். இதை, ‘தைரி’ என்கிறார்கள் ‘சிந்தி’கள்.

சிந்திகள் கொண்டாடும் இன்னொரு விழா, “லால் லோஹி’ (Lal Lohi) அல்லது ‘திரா மூரி’ (Tira moori). லால் லோஹி ஒரு அறுவடைத் திருவிழா. நமது போகிப் பண்டிகை போலப் பொங்கலுக்கு (வட இந்தியாவில் மகர சங்கராந்தி) முதல் நாள் நடைபெறும். இவ்விழாவில் சிந்திக்காரர்கள் தீ வளர்த்து ஆடிப்பாடிக் களிப்பர்; சுவையான உணவு உண்டு மகிழ்வர்.

சென்னையில் சிந்தி கல்வி அறக்கட்டளை கெல்லிஸ் பகுதியில் சிந்தி மாடல் ஸ்கூல் என்று ஒரு பள்ளியையும் நூம்பலில் சிந்திக் கல்லூரி என்று ஒரு கல்லூரியையும் நடத்தி வருகிறது.

மிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு சிந்திகளுக்கும் மார்வாடிகளுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால், சுங்க அதிகாரிகள் ‘சிந்திக்காரர்’களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள். 80களின் இறுதியில் பம்பாய் உல்லாஸ் நகரைச் சேர்ந்த சிந்திக்காரர்கள் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வெளிநாட்டுப் பொருள்களை வாங்கி வருவார்கள். ‘சிந்தி’ பெண்களும் இந்த ‘பறக்கும் தொழிலில்’ ஈடுபடுவார்கள். இவர்களின் பெயர்கள் எல்லாம் நிச்சானி, லால்வானி, சந்தானி, ஜூமானி என்றிருக்கும். இந்த ‘னி’ என்று முடியும் பெயர் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானின் ஹைதரபாத்திலிருந்து வந்தவர்கள் என்றொரு ‘னி’ சொன்னார்.

இவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். சிங்கப்பூரிலிருந்து வரும் உலாஸ் நகர் சிந்திகளின் சூட்கேஸைத் திறந்தால் அதில் நூறு வகையான பொருட்கள் இருக்கும். மஞ்சள் கயிற்றிலிருந்து மாஞ்சா கயிறு வரையிலும் உள்ளாடையிலிருந்து கொண்டை ஊசி வரையிலும் ரிப்பன் முதல் மேக்கப் கிட் வரையிலும் இல்லாத பொருள் ஏதுமில்லை என்ற வகையில் இருக்கும். பட்டியலிட்டால் அநுமார் வால் தோற்றுப்போகும். சுங்கத் தீர்வையைக் கணக்கிட ஒவ்வொரு பொருளின் விலையைத் தீர்மானிப்பதற்குள் சுங்க அதிகாரிக்குத் தலை சுற்றும். ‘பையா பையா’ என்று உலாஸ் நகர்க்காரர்களும் / காரிகளும் குழைந்து குழைந்து கருணை காட்டும்படி ஆயிரம் முகபாவம் காட்டுவார்கள். உலாஸ் நகர்க்காரர்கள் விற்கும் பொருள்களில் ‘made by USA’ என்று பொறிக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் ஏதோ அமெரிக்காவிலிருந்து வந்ததென நம்பிவிடுவார்கள். சுங்க அதிகாரிகளையோ போலீஸையோ எதிர்கொள்ளும்போது, “இவை வெளி நாட்டுப் பொருட்கள் இல்லை. அமெரிகாவில் தயாரானவையும் இல்லை. நாங்கள் தயாரித்தவை. அதாவது USA என்றால் Ulasnagar Sindhi Association” என்று விளக்கமளிப்பார்கள்.

உலாஸ் நகரில் இருந்து வரும் பெண் ஒருத்தி எப்போதும் ஒரு பாடலை முணுமுணுத்தபடியும், சில வேளைகளில் வாய்விட்டுப் பாடியபடியும் இருப்பாள். கேட்க இனிமையாக இருக்கும். அந்தப் பாடல் சிந்திக்காரர்களின் திருமண நிகழ்வுகளில் பாடும் பாடல் என்றாள். மரபார்ந்த அந்தப் பாடலுக்கு ‘லாடா’ என்று பெயராம்.

எனது வாழ்வில் சிந்திக்காரர்களை அறிந்ததும் அறிமுகமானதும் இப்படித்தான்.

ருமமிகு சென்னை பர்மாவிலிருந்து அகதிகளாய் வந்தவர்களுக்குக் கடற்கரைச் சாலையில் அபயமளித்து வளர்த்து எடுத்தது எனில், பாகிஸ்தானிலிருந்து வீடு வாசல் இழந்து காயங்களுடன் வந்த இந்த சிந்திக்காரர்களுக்கு சௌகார்பேட்டையில் கிடங்குத் தெருவிலும் மின்ட் தெருவிலும் வாழ்வாதாரம் தந்து அவர்களை வளமிக்கவர்களாக்கி, கெல்லிஸ் பகுதியிலும் புரசையிலும் குடி அமர்த்தியது.

சிந்திக்காரர்கள் முதன்மையாகத் துணி வியாபாரத்திலும் பைனான்ஸ் தொழிலிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் உங்கள் வீட்டு பூஜை அறை வரையில் தங்கள் தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்றால் அது பொய் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையில் விதவிதமான சாமி படங்கள் இடம் பெற்றிருக்கும் அல்லவா? அந்தச் சாமி படங்களை வெகு காலமாக அச்சிட்டு விற்பனை செய்து வரும் குடும்பம் ஒரு சிந்திக்காரரின் குடும்பமே. ‘J.B.கண்ணா அன்ட் கம்பெனி’ என்பது அவர்கள் நிறுவனத்தின் பெயர். இன்றைய தலைமுறை வரை இத்தொழிலில் இடையறாது ஈடுபட்டிருக்கிறார்கள் கண்ணா குடும்பத்தினர். இவர்களுக்கு தேவராஜ் முதலியார் தெருவில் கடை இருந்தது.

தமிழக அரசின் மின்சார வாரியத் தலைவராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் லக்கானியும் இச்சமூகத்தைச் சேர்ந்தவர். சிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டு தமிழ் நாட்டில் நிலைத்துவிட்ட இச்சமூகம் தமிழ்மொழியிலும் ஆர்வம் காட்டி வருகிறது என்பதற்கு எனது நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் இருக்கிறார். ‘செந்தூரம்’ இவர் நடத்திய இலக்கிய இதழ். இவர் எழுதிய, ‘கிடங்கு தெரு’ என்ற தமிழ் நாவல் சிந்தி சமூகத்தின் வாழ்வியல் கூறுகள் நிறைந்த படைப்பு. ஓஷோவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஜெகதீஷின் வாழ்க்கை ஊடக உலகத்திலேயே பயணம் செய்கிறது.

இவர்கள் சிந்தி சமூகத்தின் அரிய விளைவு. ஆனால், சிந்திக்காரர்களின் ரத்தத்தில் கலந்து ஓடுவது வணிகம்; வணிகம்; வணிகம்.

நீண்ட இடைவெளிக்குப்பின் நான் சந்தித்த இன்னொரு சிந்திக்காரர் பிரேம். சென்னையின் பத்துப் பணக்காரர்களில் ஒருவராகப் பிரேம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது உடல் எடையில் சென்னைவாசிகள் அவரோடு போட்டியிட இயலாது. அதே அளவுக்கு அவர் தரும் அன்பும் குறைபடாது. எப்போதும் சிரித்த முகத்துடன் வரும் பிரேம் பிறந்து வளர்ந்தது சௌகார்பேட்டை தங்க சாலையில்தான். அவரது தாத்தா தீப்சந் கேரெஜ்மல் பாகிஸ்தானிலிருந்து, நமது சர்க்கார் கொடுத்த 5000 ரூபாய் நிவாரணத் தொகையுடன் சென்னை வந்தவர். தங்க சாலையில் ஒண்டுக்குடித்தனம். கிடங்கு தெருவில் துணி வியாபாரம். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். வேலூர், ஆம்பூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்குப் பேருந்தில் சென்று அங்கிருக்கும் துணிக்கடைகளில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்வது அவரது தொழில். இன்று அவரது பேரன் பிரேம் பன்னாட்டு கூரியர் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். ABC என்ற அவரது கூரியர் நிறுவனம் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களிலிருந்து புகழ்பெற்ற பத்திரிகைகளையும் புத்தகங்களையும் இந்தியாவில் உரியவர்களுக்குக் கொண்டு சேர்த்துவருகிறது. அவரது அலுவலகம் சிறியது. அலுவலகத்தில் அவரது அறையும் சிறியது. எவ்வித ஆடம்பரமும் இன்றி அமைதியகாச் செய்யல்படும் ABC கூரியரின் செயல்திறம் பிரமிக்க வைக்கும்.

1980களின் இறுதியில்தான் வெளி நாடுகளுக்கு விமானம் மூலம் கூரியர் சேவை தொடங்கியது. இந்தத் தூதஞ்சல் சேவை முதலில் சிங்கப்பூர், மலேசியா போன்ற அண்டை நாடுகள் அளவிலேயே இருந்தது. கூரியர்கள் அடங்கிய ஜம்போ பைகளை கார்கோவாக அனுப்ப முடியாது. சாதாரண விமானப் பயணியைப்போல கூரியர் கம்பெனியின் ஊழியர் ஒருவர் தினமும் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும். கூரியர் ஜம்போ பைகளை ஏர்லைன்ஸ் கவுண்டரில் Chekked – in Baggage-களாக அளிக்க வேண்டும். முதன் முதலாக ‘எஸ்கொயர் ஆன் போர்டு சர்வீஸஸ்’ என்ற கம்பெனிதான் இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தது. 1990களில் கூரியர் வணிகம் வளர்ச்சி பெற்று 2000க்குப் பிறகு அசுர வேகத்தில் இயங்கத் தொடங்கியது. ஏறக்குறைய 15 ஆண்டுகளாகிறது கூரியர் கம்பெனிகளுக்கு என்று பன்னாட்டு விமான நிலையத்தில் தனித்தளம் உருவாக்கப்பட்டு. மீனம்பாக்கத்தில் உள்ள பழைய விமான நிலையம் கூரியர் டெர்மினலாக இன்று இயங்கி வருகிறது. பிரேமின் ABC கூரியர் நிறுவனம் இன்று கூரியர் வர்த்தகத்தில் முத்திரை பதித்து வருகிறது.

மிழ்த் திரைப்பட உலகத்திலும் சிந்திக்காரர்களுக்கு ஓர் இடமுண்டு. சஞ்சய் என்ற சிந்திக்காரரைத் தெரியாத திரைப்படத் தயரிப்பாளர்களோ இயக்குநர்களோ இருப்பதற்குச் சாத்தியமில்லை. சினிமா ஃபைனான்சியர்களில் ஒரு மந்திரச் சொல் சஞ்சய். எந்த டாம்பீகமும் இல்லாத மனிதர். ஏதாவது பொது நிகழ்ச்சிகளில் எப்போதாவது சந்திப்பதுண்டு. ஒரு சாதாரண மனிதரைப் போலவே பழகுவார். கூடவே அழைத்துச் சென்று அருகமர்ந்து உண்பார். சிந்திக்காரர்களின் இயல்பான எளிமையான வாழ்வுக்கு சஞ்சய் ஒரு நேரடி சாட்சி.

1989இல் நடிகர் அஜித் நடிகராகவில்லை. ஈக்காட்டுத்தாங்கலில் ‘வெஸ்சர்ஸ்’ என்றொரு 100% ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வந்தது. அதில்தான் அஜித் பணிபுரிந்து வந்தார். எனது நண்பர் குணாளன் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் சுங்க அதிகாரியாக அந்நிறுவனத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் ‘எதிர்கால நடிகர் அஜித்’ இன்று நாம் திரையில் காணும் அதே உடல் மொழியுடன் கனிந்த முகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். அஜித்தின் அன்னை சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்.

அண்ணா சாலையிலும் ரிச் தெருவிலும் பல சிந்திக்காரர்கள் எலெக்ட்ரானிக் கடைகளை நடத்தி வருகிறார்கள். ஸ்டீரியோவிஷன் ஹரிஷ் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்.

சௌகார்பேட்டையிலும் ஹரிஷ் ட்ரேடர்ஸ், சோனா டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல துணிக்கடைகளின் உரிமையாளர்கள் சிந்திகாரர்கள்தான்.

ராம் சந்தானி என்று ஒரு ‘சிந்தி’ எஸ்,ஐ,சி ஏஜென்ட் ஒருவர் இருந்தார். நான் சுங்க இல்லத்தில் சேர்ந்த புதிது. ஒரு சின்ன சூட்கேஸுடன் அநேகமாக தினமும் சுங்க இல்லம் வந்துபோவார். எல்லோராலும் நேசிக்கப்படுகிற மனிதராக இருந்தார். பார்ப்பவரிடத்தில் எல்லாம், ‘pay me hundred; I will make it double’ என்று சொல்லித்தான் உரையாடத் தொடங்குவார். முதுமையிலும் தளராது உழைக்கும் சிந்திக்காரர்களின் குணத்தை அவரிடம் கண்டிருக்கிறேன். காசைப் பெருக்கும் வழி தெரிந்த சிந்தி சமூகத்தின் வார்ப்பு ராம் சந்தானி.

சிந்திகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம்: வீழ்ந்தாலும் எழலாம்; சக மனிதர்களிடம் நல்லுறவு; நகைமுகம்; இன்சொல்; இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது.

Strangers are my lovers.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...