No menu items!

ஜெய்ஸ்வால் – இந்திய கிரிக்கெட்டின் இரண்டாம் ஷேவாக்

ஜெய்ஸ்வால் – இந்திய கிரிக்கெட்டின் இரண்டாம் ஷேவாக்

கிரிக்கெட் உலகில் இது ஜெய்ஸ்வால் காலம். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த ஜெய்ஸ்வால், இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.  இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளில் மட்டும் ஜெய்ஸ்வால் எடுத்துள்ள மொத்த ரன்கள் 545.

3 போட்டிகளில் 2 இரட்டை சதங்கள், ஒரே டெஸ்ட் போட்டியில் 12 சிக்சர்கள், இங்கிலாந்து தொடரின் 6 இன்னிங்ஸ்களில் மட்டும் சராசரியாக 109 ரன்கள் என்று சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார் ஜெய்ஸ்வால். இத்தனை சாதனைகளை படைத்துள்ள ஜெய்ஸ்வாலின் வயது வெறும் 22-தான். அதிரடியான பேட்டிங் ஸ்டைலைக் கொண்டுள்ள ஜெய்ஸ்வாலை, இந்திய கிரிக்கெட்டின் இரண்டாம் ஷேவாக் என்று செல்லமாக அழைக்கிறார்கள் ரசிகர்கள்.

கிரிக்கெட் உலகில் இப்போது ரசிகர்களின் கனவு நாயகனாக இருக்கும் ஜெய்ஸ்வால், கிரிக்கெட் பற்றி கனவு கண்டது  12 வயதில். உத்தரப் பிரதேசத்தில் உள்ள படோஹி எனும் கிராமத்தில் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய ஜெய்ஸ்வால்,   அந்த ஊரில் இருந்தால், தன் கிரிக்கெட் கனவுகளை நனவாக்க முடியாது என்று நினைத்தார்.  இந்திய கிரிக்கெட்டின் தொட்டிலான மும்பைக்கு புறப்பட்டார்.

ஜெய்ஸ்வால் மும்பைக்கு குடிபெயர்ந்தார் என்றதும், அவர் வசதியான வீட்டுப் பையன் என்றும், அவரது பெற்றோர் மும்பையில் அவருக்கு ஒரு பிளாட் பார்த்து கொடுத்தார்கள் என்றும் நினைத்துவிடாதீர்கள். ஜெய்ஸ்வால் மும்பைக்கு போக அவரது பெற்றோரால் அனுமதி மட்டுமே கொடுக்க முடிந்தது. பணமெல்லாம் கொடுக்க முடியவில்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஜெய்ஸ்வால் கவலைப்படவில்லை.

மும்பையில் வந்திறங்கிய ஜெய்ஸ்வால், அங்கு புகழ்பெற்ற பயிற்சியாளராக இருந்த ஜ்வாலா சிங்கிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் நுட்பத்தைப் பார்த்து அவருக்கு பயிற்சி கொடுக்க சம்மதித்த ஜ்வாலா சிங், சாப்பாட்டுக்கோ, தங்குவதற்கோ என்ன செய்வாய் என்று ஜெய்ஸ்வாலை கேட்கவில்லை. தனது மற்ற சிஷ்யர்களைப் போலவே ஜெய்ஸ்வாலும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று  நினைத்தார். ஜெய்ஸ்வாலும் தனது வறுமையைப் பற்றி பயிற்சியாளரிடம் சொல்லவில்லை.

பயிற்சி பெற்றுவரும் மைதானத்தின் கிரவுண்ட்ஸ்மேனின் டெண்டில் தங்கிக்கொண்ட ஜெய்ஸ்வால், அங்கு பானி பூரி விற்கும் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் வேலை பார்த்து கிடைக்கும் வருமானத்தை வைத்து சாப்பிட்டார்.  இந்த சமயத்தில் யாராவது நண்பர்கள் வந்தால், அவர்களுக்கு தான் பானி பூரி கடையில் வேலை பார்ப்பது தெரியக் கூடாது என்பதற்காக ஒளிந்துகொள்வாராம்.

இந்த சூழலில்தான் ஒருநாள் ஜெய்ஸ்வால் பானி பூரி கடையில் வேலை பார்ப்பது ஜ்வாலா சிங்குக்கு  தெரியவந்துள்ளது. ஏழ்மையால் ஜெய்ஸ்வாலின் பயிற்சி பாதிக்க்க் கூடாது என்று நினைத்த ஜ்வாலா  சிங், அவரை தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டு பயிற்சி கொடுத்தார்.

ஜ்வாலா சிங்கின் பயிற்சியும், ஜெய்ஸ்வாலின் விடாமுயற்சியும் 2020-ம் ஆண்டு அவரை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து 5 அரைசதங்களை குவித்தார் ஜெய்ஸ்வால். 2020  உலகக் கோப்பையில் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் ஜெய்ஸ்வாலின் புகழ் ஐபிஎல்லை எட்டியது.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்த்=து.

202-ம் ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டாலும் 2023-ம் ஆண்டு ஐபிஎல்தான் அவரை உச்சத்துக்கு கொண்டுபோனது. 14 போட்டிகளில் 625 ரன்களை குவித்தார். அதேவேகத்தில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஸ்வால், இப்போது இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளரும்கூட. இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான கும்ப்ளே, அடுத்த போட்டியில் ரோஹித்திடம் கேட்டு பந்து வீசுமாறு ஜெய்ஸ்வாலிடம் கேட்டிருக்கிறார். பேட்டிங்கிலேயே இப்படி மிரட்டும் ஜெய்ஸ்வால், பந்துவீச்சில் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...