ரன், ரசிகர்கள், புகழ் என எல்லா விஷயங்களிலும் சச்சினுக்கு நிகராக உச்சம் தொட்டவர் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்து சதங்களை விளாசிக்கொண்டிருந்த விராட் கோலி, ஒரு காலத்தில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக பார்க்கப்பட்டார். ஆனால் இப்போது இந்திய அணிக்கு அவர் தலைவலியாகிவிட்டதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. பேட்டிங்கில் அவர் தொடர்ந்து சொதப்பி வருவதே இதற்கு காரணம்.
2019-ம் ஆண்டுவரை கிரிக்கெட் உலகின் முடிசூடாத மன்னராக இருந்தவர் விராட் கோலி. டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 47 சதங்களையும் விளாசிய விராட் கோலி, 100 சதங்கள் என்ற சச்சினின் சாதனையை முறியடிக்க சரசரவென முன்னேறிக்கொண்டு இருந்தார். இன்னும் ஒரு சதம் அடித்தால் அதிக சதங்களை குவித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடிக்கலாம் என்ற நிலையில்தான் கோலியை கிரிக்கெட் பரமபதத்தில் பாம்பு விழுங்கியது.
2019-ம் வருடம் நவம்பர் 22-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடித்த சதம்தான் விராட் கோலிக்கு கடைசி சதம். அதன்பிறகான காலகட்டத்தில் ஜடேஜா போன்ற பந்துவீச்சாளர்கள்கூட சதம் அடித்துவிட்டார்கள்.
கத்துக்குட்டியான ரிஷப் பந்த்கூட 5 சதங்களுக்கு மேல் அடித்துவிட்டார். ஆனால் விராட் கோலியால்தான் ஒரு சதத்தைக்கூட அடிக்க முடியவில்லை.
சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்கூட விராட் கோலி ப்ளாப்தான். இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆடிய 16 போட்டிகளிலும் பங்கேற்ற விராட் கோலி மொத்தமாக அடித்ததே 341 ரன்கள்தான். இத்தொடரில் வெறும் 2 அரை சதங்களை மட்டுமே எடுத்த இவரது சராசரி ரன்கள் 22.73. ஆனால் அதேநேரத்தில் தினேஷ் கார்த்திக், ஹூடா, திரிபாதி, ஜெய்ஷ்வால் உள்ளிட்ட பல வீரர்கள் அவரைவிட அதிக ரன்களை குவித்தனர்.
இதனால் விராட் கோலிக்கு சில மாதங்களாவது ஓய்வு கொடுக்க வேண்டும் (அதாவது அணிக்கு தேர்வு செய்யக்கூடாது) என்று குரல்கள் எழுந்தன.
இளம் வீரர்கள் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் அவர்களை ஆடவைக்கலாம், கோலி போன்ற வீரர்களை தவிர்க்கலாம் என்றுகூட பேசப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் ஏற்கெனவே ஆடி அனுபவம் உள்ள வீரர் என்பதால் அணியில் கோலி சேர்க்கப்பட்டார்.
கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக விளம்பரங்களில் நடிப்பதில் கோலி அதிக ஆர்வம் காட்டுகிறார். அவரது விளம்பரங்களுக்கு மக்களிடம் நல்ல மதிப்புள்ளதால், பல நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளன. அப்படி அவர் நடித்துள்ள விளம்பரப் படங்களை இன்னும் சில ஆண்டுகளுக்கு ஒளிபரப்ப ஒப்பந்தமாகி உள்ளது.
இந்த நேரத்தில் கோலியை அணியில் இருந்து நீக்கினால், அது அவர் விளம்பரத்தில் நடித்துள்ள நிறுவனங்களை பாதிக்கும். அதே நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனும் ஒப்பந்தத்தில் உள்ளன. எனவே கோலியை அணியில் இருந்து நீக்கக்கூடாது என்று கிரிக்கெட் வாரியத்துக்கு அவை அழுத்தம் கொடுத்ததாகவும் அதனாலேயே அவர் அணியில் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி, பிர்மிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியில் வழக்கம்போல் சொதப்பினார். முதல் இன்னிங்ஸில் 11 ரன்களை மட்டுமே சேர்த்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதோடு மட்டுமின்றி முதல் இன்னிங்ஸில் பேர்ஸ்டோவை அவர் ஸ்லெட்ஜிங் செய்ய, அவருக்குள் இருந்த சிங்கம் ஆக்ரோஷம் கொண்டு எழுந்தது. 2 இன்னிங்ஸ்களிலும் பேர்ஸ்டோவ் சதம் அடித்ததற்கு கோலியின் ஸ்லெட்ஜிங்கால் ஏற்பட்ட கோபம் காரணமானது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதற்கு இதுவும் ஒரு காரணம்.
பேர்ஸ்டோ மட்டுமல்ல பென் ஸ்டோக் அவுட் ஆனபோதும் கோலி அதைக் கொண்டாடிய விதம் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அவரது கொண்டாட்ட பானி இந்திய அணி மீதே ஒருவிதமான வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி பேட்டிங்கிலும், தனிப்பட்ட குணத்தாலும் அணிக்கு அவர் தலைவலியாகி இருப்பதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘கார்டியன்’ நாளிதழ்கூட கட்டுரை எழுதியுள்ளது.