No menu items!

Chocolate Day – ஒரு இனிப்பான கதை

Chocolate Day – ஒரு இனிப்பான கதை

குழந்தைகள் முதல் தாத்தா பாட்டிகள் வரை அனைவருக்கும் பிடித்த விஷயம் சாக்லேட். இந்த உலகில் சாக்லேட்டை ஒருவர் தவிர்க்கிறார் என்றால் அவர் சர்க்கரை வியாதிக்காரராகத்தான் இருப்பார். சின்னச் சின்ன விஷயங்களுக்குகூட ஆண்டில் ஒரு நாளை ஒதுக்கும்போது எல்லோரும் விரும்பும் சாக்லேட்டுக்காக ஒரு நாளை ஒதுக்க வேண்டாமா? அந்த வகையில் 2009-ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-ம் தேதி சர்வதேச சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது.

வருடத்தில் 365 நாட்கள் இருக்கும்போது குறிப்பாக ஜூலை மாதம் 7-ம் தேதியை எதற்காக சர்வதேச சாக்லேட் தினமாக கொண்டாட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்த கேள்விக்கான சரியான பதில் வரலாற்றில் இல்லை. இருப்பினும் 1500-களில் இந்த நாளில்தான் ஐரோப்பிய நாடுகளில் சாக்லேட் அறிமுகமானது. அதை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 7-ம் தேதி சர்வதேச சாக்லேட் தினமாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு சாக்லேட்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்வோம்..

சாக்லேட்டின் தோற்றம்:

சாக்லேட்கள் எப்போது தோன்றின என்பதைப் பற்றிய துல்லியமான குறிப்புகள் ஏதும் வரலாற்றில் இல்லை. இருப்பினும் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோ நாட்டில் சாக்லேட்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் முதலில் கோகோ மரங்கள் கண்டறியப்பட்டன. இங்கிருந்த மக்களுக்கு கோகோவின் சுவை வித்தியாசமாக தெரிந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோகோவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து பானமாக குடிக்கத் தொடங்கினர். இப்படி சாக்லேட்கள் முதலில் ஒரு பானமாகத்தான் பருகப்பட்டு வந்தது. 15-ம் நூற்றாண்டில் சிலர் இதை பணமாகக்கூட பயன்படுத்தி உள்ளனர்.

ஐரோப்பாவில் சாக்லேட்:

ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஸ்பெயின் நாட்டுக்குத்தான் சாக்லேட் வந்துள்ளது. ஹெமன் கார்டெஸ் (Hernán Cortés) என்பவர்தான் அமெரிக்க நாடுகளில் இருந்து முதன்முதலாக கோகோவை ஸ்பெயின் நாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். அதை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதிய ஸ்பெயின் நாட்டு அரசும் மக்களும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கு காட்டாமல் பல ஆண்டுகள் ஒளித்து வைத்துள்ளனர். 1615-ம் ஆண்டில் பிரான்ஸ் மன்னரான 13-ம் லூயிஸ் ஸ்பெயின் நாட்டு மன்னரான 3-ம் பிலிப்பின் மகளை மணந்தார். இந்த திருமணத்துக்கு பின் கணவரின் நாடான பிரான்சுக்கு வந்த ஸ்பெயின் இளவரசி, தன்னுடன் சாக்லேட்டின் சாம்பிள்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் சாக்லேட் சுவையாக பயணித்தது.

இந்தியாவில் சாக்லேட்:

இனி இந்தியாவுக்குள் சாக்லேட் எப்படி வந்தது என்பதைத் தெரிந்துகொள்வோம்…

1798-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் கோகோவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கோகோ உற்பத்தியை அதிகரித்து, அவற்றை வெளிநாடுகளில் விற்றால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் 8 இடங்களில் கோகோ எஸ்டேட்களை அமைத்துள்ளனர். ஆனால் இந்தியாவில் கோகோ சரியாக விளையவில்லை. இதனால் தன் முயற்சியில் இருந்து வெள்ளையர்கள் பின்வாங்கினர்.

இந்தியாவில் கோகோ உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து கிடைக்கும் சாக்லேட்டின் சுவை இந்தியர்களை கொள்ளை கொண்டது. வெள்ளையர்களின் ஆட்சி பரவிய இடங்களில் எல்லாம் சாக்லேட்டும் வேகமாக பரவியது. 2020-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுக்கின்படி இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 200 கிராம் சாக்லேட் வரை சாப்பிடுகிறார்கள் (ஜப்பானியர்கள் தலா 2 கிலோ சாக்லேட்களை சாப்பிடுகிறார்களாம்). 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் சாக்லேட் சந்தையின் மதிப்பு 330 கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கணகிடப்பட்டுள்ளது.

சாக்லேட் – சில தகவல்கள்

ஜோசப் ஃப்ரை என்பவர் 1847-ம் ஆண்டில் சாக்லேட் பாரை கண்டுபிடித்தார்.

ஆண்டுதோறும் 110 பில்லியன் டாலர் மதிப்புக்கு சாக்லேட்கள் விற்கப்படுகின்றன.

உலகில் உற்பத்தியாகும் சாக்லேட்களில் சுமார் 50 சதவீதத்தை அமெரிக்கர்கள்தான் சாப்பிடுகிறார்கள்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் எடை 5,792 கிலோ.

உலகில் அதிகம் சாக்லேட் விற்பனையாகும் இடம் பிரஸல்ஸ் விமான நிலையம். இங்கு ஆண்டுதோறும் 800 டன் சாக்லேட்கள் விற்கப்படுகின்றன.

சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோகோ, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக விளைகிறது.

கோகோ மரங்கள் 200 ஆண்டுகள் வரை இருக்கும்.

காதலர் தினத்தில் ஜப்பானிய பெண்கள், இதய வடிவத்தில் செய்யப்பட்ட சாக்லேட்களை தங்கள் காதலர்களுக்கு கொடுப்பார்கள்.

மாவீரன் நெப்போலியன் சாக்லேட்களை அதிகம் விரும்பியதாகவும், மனதளவில் தளரும்போதெல்லாம் சாக்லேட்களை சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...