தன் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு சமீப காலமாக பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, ரஜினி நடித்து வெளியாக உள்ள கூலி படத்தில் தனது இசையை தன்னைக் கேட்காமல் பயன்படுத்தி உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவங்களால் இளையராஜா காப்புரிமை விவகாரம் பற்றிய பேச்சுகள் தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இதுகுறித்த விளக்கத்தை அறிய தயாரிப்பாளர் முக்தா ரவியை தொடர்புகொண்டு பேசினோம். காப்புரிமை விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள சில விளக்கங்கள்…
இளையராஜா வருவதற்கு முன் பாடல்களின் உரிமை எப்படி வழங்கப்பட்டது? அவர் வந்த பிறகு அது எப்படி மாறியது?
ஆரம்ப காலகட்டங்களில் இசையமைப்பாளர்கள் தங்கள் பணிக்காக முழு பணத்தையும் பெற்றுக்கொள்வதால், தயாரிப்பாளர்களிடம் அந்த பாடல்களுக்கான உரிமை இருந்த்து. அவர்கள் எச்எம்வி போன்ற நிறுவனங்களுக்கு அந்த உரிமையை விற்றனர். அதன் ராயல்டியை இன்றும் தயாரிப்பாளர்கள் அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் முக்தா பிலிம்ஸ் தயாரித்த படங்களுக்கான ராயல்டி இன்றும் எங்களுக்கு வந்துகொண்டு இருக்கிறது.
1980-களில் இந்த விஷயத்தில் இளையராஜா புது முறையை கொண்டுவந்தார். அதன்படி அவர் படங்களில் இசையமைப்பதற்காக வாங்கும் சம்பளத்தைக் குறைத்தார். அதற்கு பதிலாக அதன் காப்புரிமையை தன்னிடம் வைத்துக்கொண்டார். அந்த பாடல்களின் தெலுங்கு உரிமையையும் அவர் வைத்துக்கொண்டார். அந்த வகையில் பார்த்தால் தனது பாடல்களின் காப்புரிமைக்காக குரல் கொடுக்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது.
கூலி படம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியா?
இளையராஜாவின் பாடல்களின் காப்புரிமை அவரிடம்தான் இருக்கிறது. அதனால் அதில் வரும் ஒரு சிறு பகுதியை பயன்படுத்துவதாக இருந்தாலும் அவரிடம் முறைப்படி அனுமதி பெற்றாக வேண்டும். எனவே தன்னிடம் அனுமதி பெறாமல் கூலி படத்தில் தன் இசையை பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்ப இளையராஜாவுக்கு முழு உரிமை இருக்கிறது.
இளையராஜா பணத்தாசை பிடித்தவர். அதனால்தான் அவர் காப்புரிமை விவகாரத்தில் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று சிலர் அவரை விமர்சிக்கின்றனர். இது உண்மையா?
இளையராஜா எங்களின் நாயகன் உள்ளிட்ட 4 படங்களுக்கு இசையமைத்துள்ளார். எங்கள் அனுபவத்தில் அவர் பணத்தாசை பிடித்தவர் அல்ல. தனது உரிமைக்காகத்தான் அவர் போராடுகிறார்.
பாடல்களின் காப்புரிமையில் வைரமுத்து போன்ற கவிஞர்களுக்கு பங்கு இருக்கிறதா?
இளையராஜாவைப் பொறுத்தவரை, அவர் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு, தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல்களுக்கான உரிமையை வாங்கினார். அதனால் அவருக்கு அதில் உரிமை உண்டு. ஆனால் வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் யாரும் அப்படி செய்யவில்லை. தங்கள் பணத்தை அவர்கள் முழுமையாக தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். அதனால் அவர்களுக்கு அதில் உரிமையோ, பங்கோ இல்லை.
ஒரு பாடலின் வெற்றிக்கு காரணம் இசையா இல்லை அதன் வரிகளா?
ஒரு பாடல் வெற்றி பெற தயாரிப்பாளர், கதாசிரியர், கவிஞர், இசையமைப்பாளர், இயக்குநர் ஆகிய அனைவரின் கூட்டு முயற்சிதான் காரணம். உதாரணமாக சிந்து பைரவி படத்தில் வரும் ‘பாடறியேன் படிப்பறிவேன்’ பாடலை எடுத்துக்கொள்வோம். அந்த பாடலுக்கான சிச்சுவேஷனைச் சொல்லி நல்ல பாடல் கிடைக்கும்வரை இளையராஜாவை விடாமல் மெட்டு போட வைத்தவர் கே.பாலச்சந்தர். அந்த பாடலில் வரும் முதல் வரியையும் அவர்தான் சொன்னார். பின்னர் இதே முறையில் அவர் வைரமுத்துவிடம் சிச்சுவேஷனைச் சொல்லி, அவரிடம் இருந்து சிறந்த பாடல் வரிகளையும் அவர்தான் வாங்கியிருக்கிறார். இசையமைப்பாளர், இயக்குநர், கவிஞர் ஆகிய 3 பேரையும் பயன்படுத்தி அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்பவர் தயாரிப்பாளர். அதனால் இவர்கள் அனைவரின் கூட்டு முயற்சிதான் ஒரு பாடலின் வெற்றிக்கு காரணம். இதில் ஒவ்வொருவரின் பங்கையும் பிரித்துப் பார்க்க முடியாது. அப்படி பார்ப்பது சாம்பாரில் இருந்து புளி, காரம், மஞ்சள் போன்ற விஷயங்களை பிரித்து எடுப்பதைப் போன்றது.