கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரராகத்தான் ரோஹித் சர்மாவை நமக்குத் தெரியும். ஆனால் இந்த உயரத்தை எட்ட அவர் எத்தனை கஷ்டங்களை பட்டிருக்கிறார் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா.
“சிறுவயதில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் நானும் ரோஹித் சர்மாவும் ஒன்றாக இருந்தோம். ரோஹித் சர்மாவுடையது மிடில் கிளாஸ் குடும்பம். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயிற்சிக்காகவும், கிரிக்கெட் உபகரணங்களை வாங்கவும் ஓரளவுக்கு மேல் அவரது பெற்றோரால் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் தனக்கு வேண்டிய உபகரணங்களை வாங்க, வீடுகளில் பால் பாக்கெட் போடும் வேலையை செய்திருக்கிறார் ரோஹித் சர்மா. அதில் கிடைக்கும் வருவாயை வைத்து கிரிக்கெட்டுக்கான உபகரணங்களை ரோஹித் சர்மா வாங்கியிருக்கிறார். அந்த உழைப்புதான் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவரை உயர்த்தியுள்ளது” என்று இந்த பேட்டியில் கூறியிருக்கிறார் பிரக்யான் ஓஜா.
பந்த்துக்கு பதில் யார்?
ஐபிஎல் தொடரில் இருந்து காயத்தால் ரிஷப் பந்த் வெளியேறியதால் சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தத்தளிக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. ரிஷப் பந்த் ஆடாத நிலையில் தற்போது அவர்களின் கைவசம் சர்வதேச அளவில் சிறப்பாக ஆடிய விக்கெட் கீப்பர்கள் யாரும் இல்லை. சர்பிராஸ் கான், பில் ஷாட் ஆகிய இருவர் மட்டுமே விக்கெட் கீப்பர்களாக உள்ளனர். இதில் பில் சால்ட் கடந்த சில போட்டிகளாக அவுட் ஆஃப் பார்மில் உள்ளார். அதனால் அவரைப் பயன்படுத்த டெல்லி டேர்டெவில்ஸ் யோசிக்கிறது. மீதமிருக்கும் ஒரே விக்கெட் கீப்பர் சர்பிராஸ் கான். ஆனால் அவருக்கும் காயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மேற்குவங்கத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான அபிஷேக் போரெல்-லை வாங்க டெல்லி டேர்டெவில்ஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடியவர் போரல். அத்துடம் இந்த ஆண்டு நடந்த தேசிய அளவிலான டி20 போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளார். 16 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 695 ரன்களை எடுத்துள்ளார். அதனால் அவரை இந்த ஐபிஎல்லுக்கான தங்கள் அணியில் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் திட்டமிட்டுள்ளது.
தோனி துரத்தும் சாதனைகள்
இந்த ஐபிஎல் தொடரில் 3 புதிய சாதனைகளை துரத்திக்கொண்டு இருக்கிறார் கேப்டன் தோனி.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமை தோனிக்கு உள்ளது. மொத்தம் 234 போட்டிகளில் தோனி ஆடியுள்ளார். தோனிக்கு அடுத்ததாக தினேஷ் கார்த்திக்தான் அதிகபட்சம் 229 போட்டிகளில் ஆடியுள்ளார். மொத்தம் 14 லீக் போட்டிகள் இருப்பதால், சென்னை அணி இறுதிப் போட்டிவரை ஆடினால் 250 என்ற இலக்கை அவரால் அடைய முடியும்.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 206 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள தோனி, மொத்தம் 4,978 ரன்களைக் குவித்திருக்கிறார். அதனால் ஐபிஎல்லில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைக்க அவருக்கு இன்னும் 22 ரன்கள் மட்டுமே தேவை.