No menu items!

ரஷ்ய போரில் இந்திய இளைஞர்கள்: ஏமாற்றிய ஏஜெண்டுகள்!

ரஷ்ய போரில் இந்திய இளைஞர்கள்: ஏமாற்றிய ஏஜெண்டுகள்!

ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர் பணி, மாதம் 3 லட்சம் சம்பளம் என ஆசை காட்டி ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர் உக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், போர்க்களத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் இந்திய இளைஞர்கள்

ரஷ்யாவைச் சேர்ந்த வக்னர் என்ற தனியார் ராணுவ அமைப்பு அண்மையில் பிரபலமானது. அதன் பின்னர்தான் அரசுகள் மட்டுமல்ல தனியார்களும் ராணுவம் வைத்துள்ளார்கள் என்பதே பலருக்கும் தெரிய வந்தது. அது மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கு இடையேயான யுத்தத்தில், தனியார் ராணுவ வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் போரில் ஈடுபடுவதும் வெளியானது. இது தொடர்பாக நமது தளத்தில் முன்னரே விரிவான கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், இப்படி தனியார் ராணுவ அமைப்புகளில் சேர்ந்து, உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியர்கள் சிலர் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி தகவலும் அண்மையில் வெளியானது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் வீரர்களின் உயிரிழப்பு மிக அதிகம். இதனால் ராணுவத்தில் சேர உள்நாட்டினர் யாரும் முன்வரவில்லை. தங்கள் கைவசம் உள்ள ராணுவ வீரர்களை உக்ரைன் போரில் இழக்க ரஷ்யா ராணுவமும் தயார் இல்லை. இதனால் உக்ரைன் போரில் ஈடுபடுத்த வெளிநாடுகளில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களை ரஷ்யா ஈடுபடுத்தி வருவதாக தெரிகிறது. நேபாளத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ரஷ்யா சென்று உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை. அவர்கள் நிலை என்ன என்பதும் தெரியவில்லை. சிலர் போரில் ஊனமுற்று திரும்பியுள்ளனர்.

இதேபோல் இந்தியாவில் இருந்தும் வேலையில்லாத இளைஞர்கள் பலர் ஏமாற்றி, அழைத்து செல்லப்பட்டு, ரஷ்யா – உக்ரைன் போரில் சிக்கித்தவிக்கும் தகவல்கள் அண்மையில் வைரல் வீடியோக்கள் மூலம் தெரியவந்தது. இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த ஹெமில் மங்குகியா என்ற இளைஞர் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

குஜராத்தில் சூரத் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான ஹெமில் மங்குகியா, ரஷ்ய ராணுவத்தில் உதவியாளராக பணி, மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் என ஆசை காட்டி ஏஜெண்டுகள் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் ரஷ்யா சென்ற பின்னர், அவர் என்ன பணிபுரிகிறார், யாருக்கு பணி புரிகிறார் போன்ற தகவல்கள் அவரது குடும்பத்துக்கு தெரியவில்லை. ரஷ்யாவில் பணிபுரிந்து வருகிறார் என்பது மட்டுமே அவரது குடும்பத்திற்கு தெரியும். இந்நிலையில், அவர் உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார் என அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஹெமில் போலவே ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர் பணிக்கு அழைத்து செல்லப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபரின் குடும்பம் மூலமாகவே இந்த தகவல் கிடைத்ததாக ஹெமில் மங்குகியாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஹெமில் மங்குகியா உடலை மீட்டு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்த பின்னர்தான் இந்த விவகாரம் இந்திய வெளியுறவுத் துறைக்கு தெரியவந்துள்ளது.

ஹெமில் மங்குகியா போலவே தெலங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து 16 பேர் ரஷ்யா சென்றுள்ளனர். ராணுவ உதவியாளர் பணிக்கு அழைத்து சென்று, ஏமாற்றி ராணுவத்தில் சேர்த்ததாகவும், தற்போது உக்ரேனுடனான போரில் ரஷ்யாவின் முன்கள வீரர்களாக ஆபத்தான நிலையில் போரிட்டுக் கொண்டிருப்பவதாகவும் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

ஏமாற்றிய ஏஜெண்டுகள்

ரஷ்ய போருக்காக இந்திய இளைஞர்கள் அழைத்து சென்ற, ரஷ்யாவில் இருக்கும் இரண்டு ஏஜெண்டுகள், இந்தியாவில் இருக்கும் இரண்டு ஏஜெண்டுகள், மற்றும் இந்த நான்கு பேரையும் துபாயில் இருந்து ஒருங்கிணைத்த பைசல் கான் ஆகியோர் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. இதில் ரஷ்யாவில் இருந்து செயல்படும் ஏஜெண்டுகளில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனிசாமி ரமேஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொருவர் ராஜஸ்தானைச் சேர்ந்த மொயின்.

பைசல் கான், பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ரஷ்யாவில் ஹெல்பர் வேலைகள் குறித்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் இவர் போட்டுள்ளார். “ராணுவ உதவியாளர் பணி குறித்து ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்கள் எங்களிடம் உள்ளன. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்த வேலையில் இருக்கிறேன். இதுவரை, பல்வேறு இடங்களில், இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளேன்,” என அவர் அந்த வீடியோவில் பேசுகிறார்.

யூடியூப்பில் பைசல் கான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரைத் தொடர்புகொண்டு இந்திய இளைஞர்கள் சென்றுள்ளனர். இதற்காக இளைஞர்களிடமிருந்து ரூ. 3 லட்சத்தை பைசல் கான் வசூலித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து, நவம்பர் 9, 2023 அன்று சென்னை வழியாக ஷார்ஜா சென்ற இளைஞர்கள், 12ஆம் தேதி மாஸ்கோவுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, டிசம்பர் 24ஆம் தேதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இருந்து வெளியான இளைஞர்கள் வெளியிட்ட விடியோகள் மூலமே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“நாங்கள் பாதுகாப்பு உதவியாளர்களாக கொண்டு வரப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டோம். ரஷ்ய எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, காட்டில் போர்க்களத்தில் இங்கே வைக்கப்பட்டுள்ளோம். ஏஜெண்டால் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்,” என அந்த வீடியோவில் ஒரு இளைஞர் கூறுகிறார்.

மற்றொரு வீடியோவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அர்பாஸ் ஹுசைன் என்பவர் பேசுகிறார். கையில் காயம் இருப்பதைக் அவர் காட்டுகிறார். அதில், போர்க்களத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும், மிகவும் சிரமப்பட்டு அங்கிருந்து தப்பியுள்ளதாகவும், எப்படியாவது எங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கெஞ்சுகிறார்.

ரஷ்யா சென்றதும் அங்குள்ள அதிகாரிகள் பயிற்சிக்கு முன் இளைஞர்களை ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்துள்ளனர். அந்த பத்திரம் ரஷ்ய மொழியில் இருந்ததாகவும், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெரியாத நிலையில், ஏஜென்டுகளை நம்பி அனைவரும் கையெழுத்திட்டதாகவும் நம்பப்பள்ளியைச் சேர்ந்த முகமது இம்ரான் என்பவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா சென்ற இளைஞர்களின் நிலை, இருப்பிடம் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

வெளியுறவுத் துறை எச்சரிக்கை

ரஷ்யாவில் யுத்த களத்தில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றவர்களை மீண்டு வர ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பு கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை பிரதிநிதி ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், “ரஷ்யாவுக்கு ராணுவ உதவியாளர்களாக பணிக்குச் சென்ற இந்தியர்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் இந்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை என்பதால் வெளியுறவுத் துறையிடம் இது தொடர்பான முழு விவரங்கள் இல்லை. வெளிநாடுகளில் பணிபுரிய செல்லும் இந்தியர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், பலரும் இந்த அறிவுரையை பின்பற்றுவதில்லை. இடைத்தரகர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, முறைகேடுகள் நடைபெறுவதால், இடைத்தகர்கள் யாருக்கும் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என ஒட்டுமொத்த நடவடிக்கையும் ரகசியமாக வைத்திருக்க கட்டாயப்படுத்துகிறார்கள். அதிக அளவு பணம் விரைவாக ஈட்ட வேண்டும் என்ற ஆசையில், வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்பவர்கள் பலரும் இடைத்தரகர்களுக்கு பல லட்சங்கள் ரொக்கம் அளிப்பதுடன், முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பதையும் தவிர்க்கிறார்கள். பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இடைத்தரகர்கள் தலைமறைவாகி விடுவதால், அப்போது மட்டுமே விவரங்கள் வெளிவருகின்றன.

இத்தகைய சூழலை தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்பவர்கள் முறைப்படி அனைத்து அனுமதிகளையும் பெற வேண்டும். கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க முடியும்” என்றும்  ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...