இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 12-ம் தேதி தொடங்குகிறது. மேலோட்டமாக பார்த்தால் இந்தியாவுக்கு அதிக சிக்கல் இல்லாத தொடராக தெரியும். முன்பெல்லாம் வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் தொடர் என்றாலே இந்தியாவுக்கு கதி கலங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அப்போது இருந்த பலம் அப்படி. ஆனால் இப்போது டெஸ்ட் ஆடும் அணிகளிலேயே வலு குறைந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி இருந்தாலும் சில வீர்ர்கள் விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வீர்ர்கள் யாரெல்லாம் என்று பார்ப்போம்…
கெமர் ரோஜ்
ஒரு காலத்தில் மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், வால்ஷ், ஆம்புரோஸ் போன்ற துடிப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்தார்கள். அதனால் வேகப்பந்து வீச்சு என்றாலே வெஸ்ட் இண்டீஸ்தான் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்நிலை இப்போது மாறிவிட்டது. ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்து பாய்ச்சல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இப்போதைய முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார் கெமர் ரோஜ். கடந்த 4 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி எடுத்த மொத்த விக்கெட்கள் 180. இதில் 47 விக்கெட்களை கெமர் ரோஜ் வீழ்த்தியுள்ளார். இதிலிருந்தே வேகப்பந்தில் அவரது முக்கியத்துவத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். 35 வயதான கெமர் ரோஜின் பந்துகளை கவனமாக ஆடாவிட்டால் இந்தியாவின் பேட்டிங் வரிசை சரிவை சந்திக்கும்.
ஜேசன் ஹோல்டர்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மிச்சமிருக்கும் ஆல்ரவுண்டர் என்று ஜேசன் ஹோல்டரைச் சொல்லலாம். பேட்டிங்கில் மிக முக்கியமான நேரத்தில் கைகொடுக்கும் ஜேசன் ஹோல்டர், இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் 2,744 ரன்களைக் குவித்துள்ளார். பந்துவீச்சில் 155 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கொஞ்சம் அசந்தாலும் இவர் இந்தியாவுக்கு எமனாக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பந்து பழசாகிப் போகும் நேரத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை சிறப்பாக வீசக்கூடிய ஜேசன் ஹோல்டரிடம் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிரேக் பிராத்வெயிட்
கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், லாரா வரிசையில் பெரிய நாயகர்கள் யாரும் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணியின் இப்போதைய பேட்டிங் பெருஞ்சுவர் கிரேக் பிராத்வெயிட். 85 டெஸ்ட் போட்டிகளில் 5,439 ரன்களைக் குவித்திருக்கிறார் பிராத்வெயிட். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் மவுசு உண்டு என்றால் அது பிராத்வெயிட்டால்தான். அந்த அளவுக்கு அணியின் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறார் பிராத்வெயிட்.
விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், கிறிஸ் கெயில் ஆகியோருக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட 4-வது வீர்ர் என்பது இவரது சாதனை. இதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,133 பந்துகளை எதிர்கொண்டுள்ளார் பிராத்வெயிட். அவரை அவுட் ஆக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும்.
ஜெர்மைன் பிளாக்வுட்
கிரேக் பிராத்வெயிட்டுக்கு துணையாக செயல்படக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் ஜெர்மைன் பிளாக்வுட். 54 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பிளாக்வுட், மொத்தம் 2,839 ரன்களைக் குவித்துள்ளார். 40 ரன்களுக்கு மேல் சராசரியை வைத்திருக்கும் இவரது விக்கெட் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய தேவையாக இருக்கும்.
அல்சாரி ஜோசப்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான இவரைப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற நிலை இல்லை. ஐபிஎல் கிரிக்கெட் மூலம் ஏற்கெனவே நம் ரசிகர்களுக்கும், வீர்ர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். ஐபிஎல் தொடர் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களின் பிளஸ் மற்றும் மைனஸ்களை தெரிந்துவைத்திருப்பவர் என்பதால் இந்த தொடரில் இந்தியாவுக்கு இவரும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.