No menu items!

புத்தர், அம்பேத்கர், இளையராஜா  –  அன்று நடந்தது என்ன?

புத்தர், அம்பேத்கர், இளையராஜா  –  அன்று நடந்தது என்ன?

இளையராஜாவுடனான தனது தனிப்பட்ட அனுபவங்களையும் அம்பேத்கர் சர்ச்சை குறித்தும் இலக்கிய எழுத்தாளர் பிரேம் எழுதுகிறார்.

இளையராஜா சர்ச்சையில் முகநூலில் ஒரு பொய்யும் வழுவும் என்னைப் பற்றியும் என் எழுத்து பற்றியும் பரவியுள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதன் காட்சித் துணுக்கைப் படித்த போது எனக்குள் பல நினைவுகள் பொங்கிப் பாயத் தொடங்கிவிட்டன. அவை அனைத்தையும் இங்கு எழுதப் போவதில்லை; தனி நூலாக எழுத வேண்டும். அது, ‘இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்’ நூலின் இரண்டாம் பகுதியாக அதைவிட விரிவாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

‘இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்’ நூல் 1998-இல் எழுதப்பட்டது, இரண்டு மூன்று நாள்களில் நான் கிறுக்கல் கையெழுத்தில் எழுதி முடிக்க ரமேஷ் அதை ஒரு வாரம் உட்கார்ந்து தெளிவான கையெழுத்துப் படியாக்க, தங்கர் பச்சான் அதனை நேரில் வந்து வாங்கிச் சென்றார். அதில் உள்ள ஒரு கட்டுரை மட்டும் நூலாகும் முன்பே, ‘கதைசொல்லி’ இதழில் வெளிவந்திருந்தது.  

அந்த நூல் ‘பேரிசைப் பெருமான்’ இளையராஜாவுக்கு மிகவும் பிடிக்கும்.  அது நூலாகும் முன்பே கையெழுத்துப் படியைப் படித்துவிட்டு அதில் உள்ள ஒரு பத்தியை மட்டும் எடுத்து விட முடியுமா, அல்லது மாற்ற முடியுமா என்று தங்கர் பச்சான் வழி கேட்டிருந்தார். “அவர் பேசியதாக வந்த பக்கங்களில் மட்டும் மாற்றங்கள் தேவையெனில் செய்யலாம், நான் எழுதிய பக்கங்களில் மாற்றம் செய்ய முடியாது. தகவல் பிழையெனில் திருத்திக் கொள்ளலாம்” எனத் தங்கர் பச்சானிடம் சொன்னேன். “நீங்களே போனுல சொல்லிடுங்க, நம்மால முடியாது” என்று சொல்லிவிட்டார்.

கி.ரா (கி.ராஜநாராயணன்) அய்யா வீட்டில் நான் இருந்த போது தொலைபேசி அழைப்பு, அது ஒரு மாலை நேரம். கி.ரா அய்யா, இளையராஜா அவர்களை அழைத்து சில பாசச் சொற்களைப் பரிமாறிக் கொண்டு, ஒரு நகைச்சுவைத் துணுக்கையும் ஏவிவிட்டு, “பிரேமுகிட்ட கொடுக்கிறேன்” என்று என் கையில் அளித்தார்.

“வணக்கம் அய்யா நலமா இருக்கிங்களா? தங்கர் சொன்னார். சொல்லுங்க எந்தப் பகுதி, எப்படி மாத்தனும், தகவல் பிழை ஏதாவது இருந்தால் மாத்தி எழுதலாம்.”

ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் சொன்னார்: “இந்திய வரலாற்றில் அதிசயம் அப்படின்னு புத்தரையும் அம்பேத்காரையும் சொல்லி அவர்களுடன் என்னையும் சேத்திருக்கீங்க, அது வேணுமா? நான் எதோ எனக்குத் தெரிந்த இசையை செஞ்சுக்கிட்டு இருக்கேன், அந்த அளவுக்குச் சொல்லனுமா, அதை எடுத்துடலாமே! அந்த ஒரு பத்தி மட்டும்.”

நான் கி.ரா அய்யாவைப் பார்த்தேன், அவர் தலையாட்டி, “சொல்லுங்கய்யா” என்றார்.

நான் சொன்னேன்: “இளையராஜா: இசையின் அழகியல்’ என்று மட்டும் எழுதியிருந்தால் அந்தப் பகுதி தேவையில்லாம போகலாம். ஆனால், ‘இசையின் தத்துவமும் அழகியலும்’ என்பது பற்றித்தான் அந்த நூல், அதனால் அது அவசியம். ஒரு வகையில் அந்தப் பத்தியை எழுதுவதற்காகத்தான் மற்ற கட்டுரைகள் எல்லாம். அதை நீக்கினால் அந்தப் புத்தகம் அர்த்தமற்றுப் போகுமே.”

சொல்லி முடித்து பதிலுக்குக் காத்திருந்தேன். ‘இளையராஜாவுடன் உரையாடல்’ பகுதி இல்லாமல் வெளிவர வேண்டுமென்றால் இன்னும் இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும். அதுதான் எனது அப்போதைய கவலை. எழுதுவதற்கான குறிப்புகள் என்னிடம் இருந்தன. ஆனாலும்!

அவர் பதில் இன்னும் என் காதில் அதே போல் கேட்கிறது. “நீங்க அப்படி சொல்லறீங்க நம்புறிங்க, அதுதானே அப்பன்னா உங்க இஷ்டம். எனக்கு இசை மட்டுந்தான் தெரியும். அதுவும் கொஞ்ச போல(!), உங்களுக்குத் தத்துவம் தெரியும் ஏராளமா(!) எழுதுங்க, வரட்டும், மத்தவங்க சொல்லட்டும் அது சரியா தவறா அப்படின்னு.”

அவர் நிறுத்த நான், “ரொம்ப நன்றிங்க” என்றேன்.

“நீங்க ஏன் நன்றி சொல்றீங்க, நான்தான் சொல்லனும். ஏதோ மெட்டு கட்டறவன், மியூசிக் போடறவன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்காங்க இதுவரைக்கும்; நீங்கதான பேரிசை, பெரும்படைப்பு, தத்துவம் அது இதுன்னு தமிழில் சொல்லி முதல்முதலா எங்கயோ எடுத்துப் போறீங்க, செய்யுங்க. பெரிய அளவில வெளியீட்டு விழா வைக்கணும், தங்கர் கிட்ட சொல்லுங்க. சிறு பத்திரிகை மாதிரி 100 பேரோட போகக்கூடாது, பெரிய அளவில செய்யனும்.”

இன்னும் எதோ சில பேசிய பின் கி.ரா அய்யாவிடம் கொடுக்கச் சொன்னார்.

கி.ரா அய்யா வாங்கி, “ராஜா ஒன்னும் தயங்காதீங்க, இசையில நீங்க எப்படி அதிசயமா ஏதோ செய்யிறீங்களோ அது போல எழுத்துல இவங்க செய்யறவங்க. கதை சொல்லில படிச்சிட்டு சொன்னீங்களே எடுத்த உடனே புரியல, கொஞ்சம் புரியுதுன்னு அந்த கதை, கட்டுரையெல்லாம் இவங்க எழுத்துதான். சொன்னா சரியாதான் இருக்கும், என்ன நான் சொல்லறது.” அவரும் ஏதோதோ பேசிவிட்டு, “என்னோட எழுத்தப் பத்தியும் இப்படித்தான் எனக்கே புரியாத அர்த்தங்கள சொல்லி விளக்கம் தராங்க, நான் அப்படியான்னு கேட்டுக்கிறேன்.”

பேசி முடித்துப் புன்னகையுடன் தொலைபேசியை வைத்து விட்டு, “நடக்கனும் கணவதி (கி.ரா. துணைவியார்), போகலாமா” என்று என் தோளில் கையை வைத்தார்.

படியிறங்கி வரும் போது அம்மா கேட்டார், “ராஜாவுக்கு அதில என்ன பிரச்சினையாம். போன தடவ வந்தப்போ மகிழ்ச்சியாதான சொன்னாரு.”

அய்யாவின் பதில்தான் இன்னும் காதில் இன்னும் ஒலிக்கிறது. “அது இல்ல கணவதி,

புத்தரும் அம்பேத்காரும் மகா ஞானிகள். அவங்களோட என்ன சொல்லுறிங்களே; அதுவும் இந்திய வரலாற்றுல, தமிழ்நாட்டு வரலாறுன்னாலும் பரவாயில்லை, ஒரு தயக்கம்தான். அதுவும் இவர் இசையில ஞானி, அவுங்க வேறு வகை ஞானிங்க, ஒரு கூச்சம்தான்.”

கணவதி அம்மா, “ஏதாவது எதிர் பார்த்து புகழறவங்க சொன்னா அது தப்பா இருக்கும். இவங்க சொல்லும் போது ஒப்புக்கத்தான வேணும்.”

நடையின் பொழுது அய்யா சொன்னார், “இப்ப தயங்கராரு ஆனா, பாருங்க வெளியீட்டு விழாவ அவர் எப்படி அமைக்கப் போராருன்னு.”

அது அப்படித்தான் அமைந்தது. சென்னை பிலிம் சாம்பர் அரங்கம், சங்கீத சாகரம் செம்மங்குடி சீனிவாச ஐயர், வயலின் இசைமேதை லால்குடி ஜெயராமன், இசைப் பேராசிரியர் டி.வி. கோபாலகிருஷ்ணன் என சங்கீத சாம்ராட்டுகளும் கி.ராஜநாராயணன், பிரம்மராஜன், பிரேம், ரமேஷ் போன்ற சோதனை எழுத்து முன்னோடிகளும் ஞான. ராஜசேகரன், தங்கர்பச்சான் போன்ற மாறுபட்ட திரை இயக்குநர்களும் மேடையில் இருந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் வேறு யாரும் மேடையில் தேவையில்லை என இசைஞானி சொல்லிவிட்டார் என்பதில் தங்கருக்கு வருத்தம்தான். அரங்கத்தில் இடமில்லை, வெளியேதான் பெருங்கூட்டம். ராஜா வரமாட்டார் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டார். முழு நிகழ்ச்சியையும் வீடியோவாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

*****

அதற்குப் பிறகு சில முறைகள் கி.ரா அய்யாவுடன் அந்த அதிசயரைச் சந்தித்து ஏதேதோ பேசியிருக்கிறேன். 2001-2002 காலகட்டம்.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கி.ரா அய்யா, “நாளை காலைல நீங்க மட்டும் இங்க வந்துடுங்க” என்பார். அப்படியென்றால் ராஜ தரிசனம் என்று பொருள். அன்பான ஓட்டுனர் கி.ரா அய்யா வீட்டின் மணியை ஒலித்தால் நாங்கள் புறப்படுவோம். கார் ஆரோவில் அல்லது அரவிந்தர் ஆசிரமத்தின் அமைதியான ஏதோ ஒரு விடுதியை அடையும். அறையில் ஒரு காப்பி, பிறகு காரில் புறப்பாடு

எங்கே செல்லும் இந்தப் பாதை, யாரோ யாரோ அறிவாரோ… எனச் சித்தன் போக்கு சிவன் போக்காய் 40 கி.மீ வேகத்தில் கார் நகரும். வெள்ளை நிறத்துணிகளால் பொதியப்பட்ட காருக்குள் பேச்சு பேச்சு… ஆளற்ற இடங்களில் நிறுத்தி நிழலிருந்தால் சற்று நேரம் உட்கார்ந்து பேச்சு, கி.ரா அய்யாவின் பேச்சு, ராஜாவின் பேச்சு, உலக இசைமேதைகள் பற்றிக் குறிப்பிடும் போது, “இல்லைங்க பிரேம்…” என்று என்னைக் கொஞ்சம் பேச வைப்பது, அது ஒரு காலம்…

அவர் தான் இசையமைத்த மணி நேரங்களைப் பற்றிப் பேசுவது அதிகம். ஒரு மணி நேரத்தில் எட்டு டியூன் அமைப்பது, முழுப் படத்துக்கும் ஒரு நாளில் இசையை இணைப்பது, பண்டிகைக் காலப் படங்கள் என்றால் ஒரு நாளில் அதிகபட்சம் ஐந்து படங்களுக்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு தியேட்டர்களில் ரீரெக்கார்டிங் செய்தது என மெலிதாக சொல்லிக்கொண்டே செல்வார்.

ஏதாவது ஒரு பாடலைக் குறிப்பிட்டு என்ன ஒரு காம்போசிஷசன், இன்ஸ்ட்ருமென்டேஷன், ஓவர் லாப்பிங்க், அந்தப் பாடலுக்கு எவ்வளவு நேரம் ஆச்சிங்க? என்று சில முறைகள் கேட்டிருக்கிறேன்.

அதுவா டியுன் ஓகே ஆக 5 நிமிடம், பிறகு நொட்டேஷன் எழுத ஒரு மணி நேரம், நொட்டேஷன் டிஸ்டிரிபியூஷன் முடிஞ்சி ரெக்காடிங்தான் ரொம்ப டேக் எடுத்துடுச்சி…

எப்படி இவ்வளவு வேகமா, இத்தனை ஆயிரம் பாடல்கள் என வியந்து கேட்டால் அவரது பதில்,

“தெரியல… எங்கிருந்தோ அது வந்துக்கிட்டே இருக்கு, என் மூலமா அதுவா தன்னை இசைச்சிக்கிது… போன பிறவியில இருந்தா அல்லது வேற கிரகத்துல இருந்தா… தெரியல… பரம்பொருள் அந்த காற்றில் அசைவா வெளிப்படுவது போல என் வழியா இசையா வெளிப்படற மாதிரி தோணுது. சில சமயம் எனக்கே, அது வரைக்கும் இந்த டியூன், இந்த நோட் எங்க இருந்ததுன்னு தெரியாது. எப்படி அது நடக்குது, தெரியல, தெரிஞ்சா அவ்வளவுதான்…’’

பின்னாட்களில் இதனை எத்தனையோ அரங்கங்களில் பெரும் மக்கள் வெள்ளத்தின் நடுவில் வெவ்வேறு வடிவில் அவர் பேசியிருக்கிறார்… இப்போது போல எல்லாம் ஒளி-ஒலியாய்க் கிடைக்காத காலம் அது. அவர் இப்போது பேசுவது போல மேடைகளில் அதிகம் பேசியதில்லை… அவர் உலகம் வேறு… அவருக்குள் உள்ள உலகம் வேறு… அதனை அவரே சொல்வதை விட அவரிடம் வேறு ஒருவர், இசையோ தத்துவமோ அறிந்தவர்கள் சொல்லக் கேட்பதில் அவருக்கு ஒரு விருப்பம்…

ஒரு கதையெழுதிவிட்டு, ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுவிட்டு, “நானும் எனது கவிதையும், எனது கவிதை உருவாகும் தருணங்கள்” என நாம் செய்யும் அட்டூழியங்களுக்கு நடுவில், மகாபாரதக் கதையைக் குழப்பிக் குழப்பிப் பல ஆயிரம் பக்கங்கள் மீண்டும் எழுதிவிட்டு உலகச் சாதனை என்று உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து ஒசையிடும் எழுத்துக்காரர்களுக்கு நடுவில், 6000க்கு மேல் காம்போசிஷன், அதில் 3000 நிச்சயம் முன்னில்லாத அமைப்பில் அமைந்த புதுப் படைப்புகள் இருக்கும். உலக இசை மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் இடம் பெறப்போகும் பெரும் தொகுப்பாக அவரது இசைக் கோர்வைகள் அதாவது இடையிசைகள், தொடக்க இசை போன்றவை மட்டும் அமையும்.

திரையில் ஒலிக்கும் பின்னணி இசைகள் தேர்ந்தெடுத்த தொகுப்புகள் மட்டும் எத்தனை மணி நேரம் ஒலிக்கும்! அவரது பாடல்களைக் குரல் இன்றி அதாவது சொல்லின்றி தனித்தனி இசைக் கருவியிசையாக மட்டும் இசைத்துப் புதுப்படைப்பாக வெளியிட்டால் உலக இசைமேதைகள் திகைத்துப் போவார்கள். அதையெல்லாம் கேட்டு முடிக்கவே பாதி ஆயுள் போய்விடும்.

இசை, அதாவது புது இசை உருவாக்கம் அத்தனை ஒன்றும் இலகுவானதல்ல, புதிய கதைவடிவம் அமைப்பு ஒன்றை உருவாக்குவது போல அசாத்திய நிலை அது. பிறகு யாரும் அது போலச் செய்யலாம், அதனைச் செப்பம் கூடச் செய்யலாம் ஆனால், , முதல் வலையமைப்பு முதல்தான்.

இருப்பதை மீண்டும் இசைக்க, ஒரு கதை வடிவம் உருவான பின் ஒன்பதாயிரம் பக்கங்களில் அதை எழுதத் திறமை, பயிற்சி போதும். ஆனால், புதிய கதை, புதிய இசை அப்படியல்ல… எந்தக் கலைப் படைப்பைவிடவும் கடினமானது இசை உருவாக்கம், அதனை இசைஞானி திரையிசையாக, திரையில் வரும் இசையாகத் தந்துவிட்டதால், அதுவும் தமிழ்த் திரையில் தந்து விட்டதால் இதன் அதிசயம் குறைந்து போவதுமில்லை. புதிய இசை உருவாக்கத்தின் பெரும்பாடு பற்றி, இயலா நிலை பற்றி அனுபவத்தில் உணர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் அதனால்தான், “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று ஒப்படைப்பதும், ஆன்மிகம், அனுபூதி என்று தஞ்சமடைவதும் நடக்கிறது. திரையிசையோ எழுதுவதோடு முடிவதல்ல; யார் யார் இசைப்பது, எவர் குரலில் இசைப்பது, எந்த வகை தொழில் நுட்பம் என ஏராளமான திட்டங்கள் செயல்பாடுகள்.

இது பல கலைஞர்களுக்கு நடக்கும்…

ராஜா தன் அனுபவங்களைப் பற்றிப் பேசும் பொழுது, “நான் இத கடவுள், பரமபொருள் வழியா வருவது அப்படின்னு சொல்கிறேன்; நீங்க இயற்கை, பிரபஞ்ச சக்தின்னு சொல்லுவீங்க. எப்படியானாலும் அறிய முடியாத ஒன்னுதானே அது” என்பார்.

நான் ஒரு முறை குறும்பாகச் சொன்னேன், “அறிய முடியாததை அறிமுடியாத ஒன்று என அதிசயத்துடன் குறிப்பிடுவதுதானே அதற்குச் செய்யும் மரியாதை, அதற்குப் பெயர் தருவது, உருவம் தருவது, அதனைச் சிறுமைப்படுத்துவது அல்லவா, அப்படியென்றால் நாங்கள்தான் உண்மையான ஆன்மீகம் உணர்பவர்கள்.”

அதே குறும்புடன்தான் அவரும் பதில் சொன்னார், “உங்களுக்கு பெயரிடாமல் உணரும் அந்த ஞானத்தை அந்தச் சக்தி தந்திருக்கிறது, எங்களைப் போன்ற சிறிய அறிவு உள்ளவர்களுக்குப் பெயர் இட்டால்தான் புரிந்துகொள்ளும் அளவுக்கு அளந்து வைத்திருக்கிறது என்ன செய்வது.” ஏறக்குறைய இந்த வாக்கியம்தான்.

இப்படி எழுதிக்கொண்டே செல்ல ஏராளமான நினைவுகள்… கி.ரா அய்யாவுடன் நடந்த நாட்கள் பற்றி எழுதும் போது இவற்றை எழுதுவேன். இப்போதைக்கு ஒரு நிகழ்வு மட்டும்.

*****

இசையின் தத்துவமும் அழகியலும் நூல் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்த பின் புதுவைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்க வேண்டும் என கி.ரா அய்யாவிடம் கூறித் தொலைபேசியில் ஒப்புதல் வாங்கச் சொன்னேன். ராஜா கேட்டார், “பல்கலைக் கழகத்தில் எதற்கு?”

கி.ரா அய்யா, “பல்கலைக் கழக நாடகத்துறையில்தான் பிரேம் வாத்தியாரா இருக்கார் அதனாலதான்” என்றார். என்னைப் பேசச் சொன்னார் ராஜா. நான் தொலைபேசியைக் காதருகில் வைத்தவுடன் அவர் சொன்னது, “நீங்களே கேட்டிருக்கலாமே, பரவாயில்லை வருகிறேன். இது வரைக்கும் பல்கலைக்கழகம் பக்கம் போனதில்லை, உங்க புண்ணியத்தில் அதை பாக்கலாம்.”

அவர் வந்தார், பல்கலைக்கழகம் எதிர்பாராத பெரும் நிகழ்வு அது. அன்று காலையிலேயே வந்துவிட்டார், கி.ராவும் நானும் அன்று முழுக்க அவருடன் இருக்க வேண்டியிருந்தது. புதுவையின் உட்பகுதிகளுக்குள் கார் புகுந்து வெளிவந்தது. என்ன ஒரு நினைவாற்றல் அந்த மனிதருக்கு! தன்னைச் சந்திக்க வந்த இசைக்குழு நண்பர்களுடன் புகைப்படங்கள், இப்படி வந்து நில்லுங்கப்பா, இசை பின்னணியா இருந்தாலும் நாம முன்னணில இருக்கணும் என்று கேலியும் கிண்டலும். பிற்பகலில் பேச ஒரு மாணவன் போலக் குறிப்பெடுத்து வைத்துப் பேசத் தொடங்கி பின் தாளை மடித்து வைத்து விட்டு பேசத் தொடங்கிய பெரும் பேச்சு. அதற்கு முன் மிலாஸ் ஃபோர்மன் இயக்கிய ‘அமாடியஸ்’ படத்தில் மொஸாரட் “ரெக்கியம்” எழுதி எழுதி உயிர் விடும் காட்சியைத் திரையிட்டு அளித்த விளக்கம். “இது சாகித்திய அகாடமி விழா, பல்கலைக் கழக விழா, எனக்குச் சாகித்தியமும் தெரியாது, அகாடமி பக்கமும் போனது கிடையாது, யூனிவர்சிட்டி ஒன்றின் உட்பக்கம் நான் வருவது இதுதான் முத தடவ… நான் ஊர விட்டு வெளிய வந்த போது சாதிக்கனும்னுதான் வந்தேன், சும்மா மெட்டுப் போடற ஆளா இருக்கனும்னு வரல, மலையைக் கட்டித்தான் இழுத்தேன், வந்தா மலை… போன…” என்று நிறுத்தி சிறு புன்னகை. வழி அனுப்பும் போது கையைப் பற்றிய நெகிழ்ச்சி…

அவர் போன பின் கி.ரா அய்யா சொன்னார்… “குழந்தைய்யா இந்த மகான்… பல மகான்கள் இப்படித்தான்…”

*****

அந்த ஆண்டு முடிவில் நான் பணி இழப்பு ஏற்பட்டு, புதுவை விட்டு வெளியேறும் நிலை உருவான போது கி.ரா அய்யா சொன்னார், “வேலை தேடி வெளியே போகணுமா, ராஜாவிடம் பேசுவோம், நீங்க நூறு பேருக்கு வேலை தருவீங்க.” எனது பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதை என்னை வாசிப்பவர்கள் அறிவார்கள்.  இனி… இப்போது என்னைப் பற்றிப் பரப்பப்பட்டுள்ள பொய் மற்றும் பெயர்க்கேடு பற்றிப் பார்ப்போம்.

“…ராஜாவுக்கு தன் படைப்புகளை எந்த அரசியல் சித்தாந்தத்திலும் அடைப்பதில் உடன்பாடில்லை. அவர் தன் இசையை அரசியலுக்கு, தர்க்கத்துக்கு அப்பாலானதாகப் பார்க்கிறார். அதனாலே பிரேம், ரமேஷ் முன்பு அவரைப் பேட்டி கண்டு ஒரு சிறந்த நூலை (‘இளையராஜா: இசையின் தத்துவமும் அரசியலும்’) எழுதி அதில் அவரது இசையை ஒரு பின்நவீன கலக அரசியல் இசையாகக் கண்டு விவாதித்திட ராஜா கோபமடைந்து, “நான் சொல்லாததை சொன்னதாக எழுதிவிட்டார்கள்” என்று வழக்குத் தொடுத்தார்.” [இது Abilash Chandran (ஆர். அபிலாஷ்) என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.]

இதில் உள்ள பொய்கள் இவை:

1. ‘அவரது இசையை ஒரு பின்நவீன கலக அரசியல் இசையாகக் கண்டு’ என்று என் நூலில் ஒரு வரியும் இல்லை. அப்படி ஒரு வரியை இன்றும்கூட நான் எழுத மாட்டேன். அது என் பார்வை இல்லை. (நூலை வாசிக்க)

2. ‘ராஜா கோபமடைந்து’ என்ற வரி ஒரு பேய்ப்படக் கதைதான். ஏன் என்றால் கலக இசை எனவோ, பின்நவீன இசை எனவோ நான் குறிப்பிடாத போது ராஜா யாரைப் பார்த்துக் கோபமடைய முடியும்?

3. ‘நான் சொல்லாத சொன்னதாக எழுதிவிட்டார்கள்’ என்ற இந்த வரி நச்சு வரி. அந்த நூலில், ‘இயைராஜாவுடன் உரையாடல்’ என்பது ஒரு பகுதிதானே தவிர அதுவே முழுமையல்ல. அவர் சொன்னதை மட்டும் எழுதி அமைக்கப்பட்ட நூல் அல்ல அது.

4. ‘என்று வழக்குத் தொடுத்தார்’ – இது ஒரு இல்லாத பொய்க் கதை. அவர் வழக்குத் தொடுத்தது என் மீது அல்ல. என் நூலுக்கு மறுப்பாக மக்கள் இசைக் கலைஞர். கே.ஏ. குணசேகரன் எழுதிய, ‘இசை மொழியும் இளையராஜாவும்’ என்ற நூலை முன் வைத்து, ‘பொய்த்தகவல் பரப்புதல்’ என்ற வகையிலான வழக்கு. அது வழக்கும்கூட அல்ல கே.ஏ.ஜி. மீது ஏன் வழக்குத் தொடுக்கக் கூடாது என்று இசைஞானியின் வழக்கறிஞர் அனுப்பிய ‘லீகல் நோட்டிஸ்’. அந்த சட்ட நடவடிக்கையும்கூட ராஜாவின் மூன்று பிள்ளைகளும் மனம் புண்பட்டு முறையிட்டதன் பேரில் குடும்ப வழக்கறிஞர் அனுப்பிய நோட்டிஸ். அந்த நூலில் உள்ள தவறான செய்தி மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில், விளக்கம் கேட்டு நீதிமன்றம் வழி அனுப்பப்பட்ட நோட்டிஸ்தான் அது. அப்போது பல பத்திரிகைகளில் செய்தியாகவும் அது வந்தது.

இயக்குநர் மகேந்திரன், திரைப்படக் கலைஞர் சாருஹாசன் இருவரையும் கே.ஏ.ஜி அணுக அவர்கள் மேஸ்ட்ரோவிடம் பேசி அந்தச் சூழலை தளர்த்தித் தந்தார்கள். இசைஞானி அப்போது சொன்ன பதில் பற்றி வாய்மொழியாக வந்த தகவல் “ஒரு கோடியெல்லாம் அவரால தரமுடியாதுன்னு தெரியாதா, தான் தப்பு செய்திருக்கிறோம்ணு தெரிஞ்சிக்கணும். யாரோ சொன்னா பரவாயில்லை, அவர் ஒரு பாடகர், என்னிடம் ஒரே ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று பலர் வழியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர். அவரது தப்பைச் சுட்டிக் காட்ட ஒரு நடவடிக்கை.” இதனை தங்கர் பச்சான் சொல்லிக் கேட்க வேண்டும், அது ஒரு நகைச்சுவை நாடகமாக இருக்கும்.

5. ‘இசை மொழியும் இளையராஜாவும்’ நூலுக்கு ஆதரவாகவும் என் நூலுக்கு எதிராகவும் அறிஞர். அ. மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். (தீராநதி என்ற ஞாபகம்) இளையராஜா ஒரு சாமியார், அவர் இசை வெறும் சனாதன இசை என்றெல்லாம் பின்நவீன விளக்கம் தந்து எழுதப்பட்ட அக்கட்டுரை சுற்றில் விடப்பட்டது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களும், “இளையராஜா ஒரு சாமியார், சாமி கும்பிடும் சனாதனி, இந்தியப் புரட்சியைத் தன் இசையால் இல்லாமலாக்கிய எதிர்ப்புரட்சியாளர், ஆன்மீகம்… அது இது… என்று பம்பாத்து அவர், கலக இசையென்றால் எஸ்துவேனியக் கலைஞன் 21 வயதில் இறந்து போன துவாயன் ஷினாய் செய்ததுதான்” என்றெல்லாம் எழுதிக் கடைசியில் தேவாதான் உண்மையான புரட்சியாளர், ரஹ்மான்தான் பின்நவீனக் கலைஞர் என்பது போல எதோ எழுதியிருப்பார். (இது நினைவில் இருந்து எழுதியது பின்னால் திருத்தப்படலாம்) அ. மார்க்ஸ், ஏ.ஆர். ரஹ்மான்தான் உலக இசை நாயகன், கலக இசைவேந்தன், ராஜா வெறும் சனாதன சங்கீத சப்தம், அதில் கொண்டாட்டம் இல்லை, திடம் மணம் சுவை இல்லை, அது கோயில் இசைதான் நான் கேட்ட உலக இசைகளில் உள்ள எதுவும் அவரிடம் இல்லை என்பது போலப் பலவற்றைத் தன் ஆய்வின் வழி கண்டுபிடித்து அறிவிப்பார்.

எது எப்படியோ பின்னாளில் நித்யானந்த பக்த கோடியாய் மாறிய சாய் நிவேதிதா (எழுத்துப் பிழையல்ல) தொடங்கி தமிழின் சிறு பத்திரிகைச் சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் அனைவரும் (உயர்வு நவிர்ச்சியல்ல) இளையராஜா வந்துதான் இந்தியப் புரட்சியை அழித்தார் என்றும் பக்தி, ஆன்மீகம் என்றெல்லாம் பேசி பெரியார் மண்ணில் பிற்போக்குக் குழி பறித்தவர் அவர் என்றும், பேச்சு மரபிலும் எழுத்து மரபிலும் தம் முற்போக்கு முழக்கங்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

அ. மார்க்ஸ் எழுதியிருந்த அக்கப்போர் கட்டுரையில் என் நூலைப் பற்றிக் குறிபிடப்பட்டிருந்ததால் அதற்கு நான் மறுப்பு எழுதி ‘பன்முகம்’ ஜனவரி-மார்ச் 2003 வெளிவந்த போது புதுவைப் பல்கலைக் கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத் துறையிலிருந்து என் பெயர் நீக்கப்படுகிறது. அந்தப் பெயர் நீக்கம் என்னை 2003-இல் மைசூருக்குப் புலம் பெயர வைத்து தில்லி வரை கொண்டு வருகிறது, மற்றவை வரலாறு.

அதைவிடச் சுவையான ஒரு வதந்தி, “ராஜாவைப் பற்றி இல்லாததையெல்லாம் எழுதிச் சினிமாவில் நுழைவதற்காக எழுதப்பட்ட நூல் அது” என நண்பர்கள் என்று அப்போது இருந்த பலர் சொல்லவும் நம்பவும் செய்தார்கள். இது பற்றி நாவல் (?) வெளிவரும் போது விரிவாக வாசிக்கலாம். அதைவிடத் தமிழின் அறிவுஜீவிகள்,

“இளையராஜா அப்படியெல்லாம் ஆழமாகப் பேசக்கூடியவர் இல்லை, பிரேம்தான் ஏதோ எழுதி இளையராஜா சம்மதத்துடன் புத்தகத்தில் இணைத்திருக்கிறார்” என்று கலந்துரையாடல்களில் பேசியிருக்கிறார்கள். சாதித் திமிரும் சனாதனத் தெனாவெட்டுமான இந்தப் பேச்சுகளைப் பேசியவர்கள் பலர் தமிழின் எழுத்தாளப் பெருமக்கள்.

“ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கோடி ரூபாய் கொடுத்தவர்தானே இவர், இவரைப் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார் பிரேம்” என்று பேசிய கலகக் கவிஞர்களும் இருக்கிறார்கள்.

*****

இப்போது உள்ள வழக்குதான் என்ன?

இசைஞானி ஆங்கில நூல் ஒன்றிற்கு எழுதப்பட்ட முன்னுரையில் கையெழுத்திட்டதின் மூலம் பாரதப் பிரதமரைப் பெருமைப்படுத்துகிறார். பிரதமரை ‘அம்பேத்காருடன்’ ஒப்பிடுகிறார். அதனால் காவி அரசியலுக்கு காவியப் பெருமை செய்கிறார்.

அதனால் அவரை வசை பாடி, இழித்துரைத்து இல்லாமலாக்குவோம் எனத் தமிழகப் புரட்சியாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போர் முழக்கமிடுகிறார்கள். சிலர் அப்போதே தெரியும் இவர் இங்கு போய்ச் சேருவார் என்று தங்கள் ஞானஒளியை தாங்களே நயந்து மகிழ்கிறார்கள். இவர்களில் பலர் பாரதியை மகாகவி என்று பக்தி செய்கிறவர்கள் என்பதுதான் இதில் உள்ள இனி நற்செய்தி.

இந்தச் சமயத்தில் எனது நூலின் பெயரைத் (‘இளையராஜா: இசையின் தத்துவமும் அரசியலும்’ என) தவறாகக் குறிப்பிட்டு அந்தப் படை நெரிசலில் என்னைச் சிக்க வைத்தால் நான் சின்னா பின்னமாகி விடுவேன் இல்லையா.

40-க்கு மேல் நூல்கள், கவிதைகள், கதைகள், நாவல்கள், கோட்பாடுகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ள என்னைப் பற்றி எங்கும் குறிப்பிடாத ஒருவர், இளையராஜாவைப் பற்றி ‘பிரேம்’ எப்படி புகழ்ந்து எழுதியிருக்கிறார் பாருங்கள் எனப் படை செல்லும் பாதையில் பதாகை எழுதிக் காட்டுவதன் உள்ளுறை என்ன என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதுதான் உண்மையைத் தேடும் எழுத்தாளர் ஒருவரின் உள்மெய் வடிவம். எந்த ஆசானிடம் இந்த இலக்கியச் செய்முறையைக் கற்றாரோ தெரியவில்லை.

முடிவாக நான் ஒன்றுதான் சொல்வேன்…

தன்னை அம்பேத்காருடன் ஒப்பிட வேண்டாமே என்று ஒரு முறை சொன்ன இசைஞானி பாரதப் பிரதமரின் புகழ் பரபரப்பும் குழுவினர் கொண்டு வந்த பக்கத்தில் கையெழுத்திட்டிருக்கத் தேவையில்லைதான். அது உண்மையிலேயே தப்புதான், ரொம்ப வருத்தமாதான் இருக்கு. வருத்தம் தீர ராஜாவின் ‘திருவாசகம்’ கேட்டு தற்போது ஆறுதல் அடைவதைத் தவிர வேறு வழியில்லை. தாமரை இவரது கையெழுத்து கண்டு மலரும் என்று நான் நினைக்க வில்லை.

ராஜாவிடம் சொல்லலாம் “இனி அப்படியெல்லாம் செய்யாதீர்கள். இசை இருக்கிறது உங்களுக்கு, சும்மா விரலால் தாளம் போட்டாலே உலக இசைகளில் ஒன்றை உருவாக்கி விடுவீர்கள், ஓடும் காரில் இருந்தபடி நீங்கள் எழுதும் இசைக் குறிப்புகளை வியக்க ஹங்கேரியக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.”

அதற்கும் அப்பால், உங்களைப் பற்றி முன்பு எழுதிய நூலை ஒரு முன்னுரையாக வைத்து பெரும் நூலை எழுத நானும் இருக்கிறேன், எழுதுவேன். வேண்டாம் ராஜா நீங்கள் யார், உங்கள் இடம் என்ன? உங்களை யார் என்ன செய்துவிட முடியும்? தமிழ் சினிமாகூட உங்கள் இசையை ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியே விட்டுவிட்டதே.

இசை மட்டுமே நீங்கள், நீங்கள்தான் இசை, இதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டா. எழுதுங்கள் உங்கள் இசைகளை, மறந்து விடுங்கள் இவர்கள் வசைகளை.

இந்திய அரசியல் அச்சுறுத்துகிறது, நீங்கள் சொன்னதையே நினைவூட்டுகிறேன். ‘கட்சி வளர்க்க, புரட்சி செய்ய பல கோடிபேர் இருக்கிறார்கள்; என் இசையைச் செய்ய? இது போலச் செய்ய???’ என நிறுத்தி உங்கள் இரு கைகளும் உயர்ந்து கேள்வியாய் நின்றதை நினைவில் கொண்டு சொல்கிறேன். பாரதப் பிரதமரைப் புகழ பல கோடிப் பேர் இருக்கிறார்கள், உங்கள் இசை போலத் தர யார் இருக்கிறார்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...