இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6-2 என்ற கோல்கணக்கில் தோற்றது ஈரான். ஆனால் அப்படித் தோற்றாலும் ஈரானிய கால்பந்து வீரர்களை ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள் அந்நாட்டு மக்கள். கால்பந்து போட்டிக்கு முன்னதாக ஈரானிய தேசிய கீதத்தை இசைத்தபோது அதனுடன் இணைந்து ஈரானிய வீரர்கள் தேசிய கீதம் பாடாததே இதற்கு காரணம்.
இது நாட்டை அவமானப்படுத்தும் விஷயமாச்சே… இதற்காக ஏன் வீரர்களை கொண்டாட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அவர்கள் தேசிய கீதம் பாடாமல் இருந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
ஈரானில் 7 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மாசா அமினி என்ற இளம் பெண் போலீஸாரின் கொடூர தாக்குதலால் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதற்காகத்தான் ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதம் பாடாமல் புறக்கணித்துள்ளனர்.
“இதற்காக எங்களை அணியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை” என்று தைரியமாக கருத்து தெரிவித்துள்ளனர் ஈரான் வீரர்கள். ஆனால் அணியில் இருந்து நீக்கினாலாவது பரவாயில்லை. உலகக் கோப்பை முடிந்து ஊருக்கு வந்த பிறகு அரசு அவர்களை உயிருடன் வைத்திருக்க வேண்டுமே என்று கலக்கத்தில் இருக்கிறார்கள் ஹிஜாப்பை எதிர்க்கும் ஈரான் மக்கள்.
பிரேசில் வீரர்களின் டான்ஸ் ரிகர்சல்
கால்பந்து போட்டிகளில் கோல் அடிப்பதைப் போலவே அந்த கோலை வீரர்கள் கொண்டாடுவதைப் பார்க்கவும் நன்றாக இருக்கும். குறிப்பாக சம்பா நடனத்துக்கு பெயர்பெற்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் கோல் அடித்து முடித்ததும் வித்தியாசமான நடன அசைவுகள் மூலம் ரசிகர்களை மகிழவைப்பார்கள்.
அந்த வகையில் இந்த முறை கோல் அடித்த பிறகு ஆடுவதற்காக 10 நடனங்களை ரிகர்சல் பார்த்து வைத்துள்ளதாக கூறியுள்ளார் பிரேசில் வீரர் ராபின்ஹா. ஒவ்வொரு கோலுக்குப் பிறகும் இந்த வித்தியாசமான நடனங்களை கால்பந்து ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்களும் பிரேசிலின் கோல்களையும் நடனங்களையும் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
குப்பைக் கூட்டிய ஜப்பானியர்கள்
மேற்கத்திய நாட்டு கால்பந்து ரசிகர்களெல்லாம் சரக்குக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்க, கத்தார் மக்களின் மனதில் அமைதியாக இடம்பிடித்திருக்கிறார்கள் ஜப்பானிய ரசிகர்கள்.
கத்தாருக்கும் ஈகுவேடார் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டியைக் காண, மற்ற ரசிகர்களுடன் ஜப்பான் நாட்டு ரசிகர்களும் சென்றுள்ளனர். போட்டி முடிந்த பிறகு ஈகுவேடார் ரசிகர்கள் ‘பீர் வேண்டும்’ என்று கேட்டு சரக்குக்காக சண்டை போட, ஜப்பானிய ரசிகர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தை சுத்தப்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள். தாங்கள் அமர்ந்த இடம் மட்டுமின்றி பக்கத்தில் இருந்த இடத்தில் சிதறிக்கிடந்த குப்பைகளையும் சேகரித்து இவர்கள் குப்பைத் தொட்டியில் சேர்த்துள்ளனர்.
இதனால் நாமும் இனி அவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று ஜப்பானிய ரசிகர்களின் இந்த சுத்தத்தைப் பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள் கத்தார் மக்கள்.