கூகுள், ட்விட்டர் போன்ற மிகப் பெரிய சர்வதேச நிறுவனங்களின் வரிசையில் யூடியூபும் தங்கள் நிறுவனத்தை தலைமையேற்று நடத்தும் பொறுப்பை ஒரு இந்தியரிடம் ஒப்படைத்துள்ளது.
நீல் மோகன். உத்தரப் பிரதேசம் லக்னோ நகரில் பிறந்து வளர்ந்து படித்து இன்று யூடியுப் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார். இவர்தான் யூடியூப்பின் புதிய சிஇஒ.
லக்னோ நகரின் உள்ள செயிண்ட் ஃப்ரான்சிஸ் பள்ளியில் 6 வது முதல் பிளஸ் 2 வரை படித்திருக்கிறார் நீல் மோகன்.
ப்ளஸ் டூ முடித்ததும் மேற்படிப்பை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் முடித்தார். எலெக்டிரிகல் என்ஜினியரிங் முடித்துவிட்டு எம்பிஏ படித்திருக்கிறார்.
நீல் மோகனின் அம்மா தீபாவும் அப்பா ஆதித்யாவும் மருத்துவர்கள். அமெரிக்காவில் மருத்துவ உயர் கல்வி பயின்று அங்கு சில காலம் இருந்திருக்கிறார்கள். பிறகு இந்தியா திரும்பி லக்னோ நகரில் பணியாற்றி இருக்கிறார்கள். மீண்டும் அமெரிக்காவுக்கே குடும்பத்துடன் சென்று வாழ்ந்திருக்கிறார்கள்.
நீல் மோகனுக்கு இரண்டு சகோதரர்கள். இளைய சகோதரர் கபில் மோகன் அமெரிக்காவில் இண்டீட் நிறுவனத்தில் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு சகோதரர் அனுஜ் ஒரு நீச்சல் குள விபத்தில் இறந்துவிட்டார்.
கல்லூரி படிப்பு முடிந்ததும் அக்செண்ட்சர் (Accenture) நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். அதன் பின் மேலும் சில நிறுவனங்கள். பிறகு டபிள்கிளிக் என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தை 2007ஆம் ஆண்டு கூகுள் வாங்கியது. அப்போதிருந்து அவர் கூகுள் நிறுவனத்தில்தான் பணிபுரிந்து வருகிறார். இப்போது கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியுப்க்கு சிஇஒவாக உயர்ந்திருக்கிறார். இந்த உயர்வு உடனடியாக வரவில்லை.
2015-ம் ஆண்டில் யூடியூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். டிக்டாக் உடன் யுடியுப் கடும்போட்டியில் இருந்த காலக்கட்டம், அதை எதிர்கொள்ள யூடியூப் ஷார்ட்ஸ்ஸை 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். இது யூடியூபின் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது. இன்றைய தினம் நாளொன்றுக்கு 30 பில்லியன் பேர் யூடியூப் ஷார்ட்ஸைப் பார்க்கின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர் நீல் மோகன் என்பது பலருக்கு தெரியாத விஷயம்.
யூடியூப் டிவி, யூடியூப் மியூசிக், பிரீமியம் உள்ளிட்டவற்றை யூடியூப் நிறுவனம் தொடங்கியதிலும் நீல் மோகன் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
எந்த மாதிரியான வீடியோக்களை வெளியிடுவது என்ற கொள்கை வகுத்ததிலும் நீல் மோகனுக்கு பங்கு இருக்கிறது. யூடியூப்பில் அதிக ஆபாசம், அதிக வன்முறை போன்ற வீடியோக்கள் இடம் பெறாமல் செய்தார்.
யூடியூப் நிறுவனத்தின் வளர்ச்சியில் இப்படி பெரும் பங்கை ஆற்றியதற்கான வெகுமதியாக இப்போது அந்நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னோவில் படித்த காலத்தில் நீல் மிகச்சிறந்த மாணவராக இருந்ததாக அவரது நண்பர்களும், ஆசிரியர்களும் சொல்கிறார்கள்.
நீல் மோகனின் ஆசிரியையான நிஷி பாண்டே அவரைப் பற்றிச் சொல்லும்போது, “படிப்பில் கெட்டிக்காரரான நீல், எல்லா தேர்வுகளிலும் முதல் மாணவராக இருந்தார். ஆனால் அவர் யாரிடமும் கலகலப்பாகப் பேசமாட்டார். அதனாலேயே இங்கிருந்து சென்ற பிறகு யாருடனும் அவர் தொடர்பில் இல்லை” என்கிறார்.
யூடியூபின் சிஇஓவாக நீல் நியமிக்கப்பட்டிருப்பது தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கும் விஷயம் என்கிறார் அந்தப் பள்ளி முதல்வர் ராஜேஷ் டிசோசா.
நீல் மோகனுடன் படித்த மற்றொரு மாணவரான ரிஷி சேத்தி, லக்னோவில் மருத்துவராக இருக்கிறார். நீல் மோகனைப் பற்றி கூறும் அவர், “பள்ளியில் படிக்கும்போது நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். நான் அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன். கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா சென்றபோது அவரைச் சந்தித்து பேசினேன். அமைதியான குணம் கொண்ட நீல் மோகன், எப்போதும் கூட்டத்தில் இருந்து தள்ளி இருக்கவே விரும்புவார்” என்கிறார்.