1987-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை, கடந்த 36 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் சுமந்திருந்த இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீர்ர் என்ற கிரீடத்தை இறக்கி வைத்திருக்கிறார் குகேஷ். சென்னையைச் சேர்ந்த 17 வயது வீர்ரான குகேஷ்தான் இப்போது இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீர்ர். அஜர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் தொடரில் மிஸ்ரடின் இஸ்கந்த்ரோ என்ற அஜர்பைஜான் வீர்ரை வீழ்த்தியதன் மூலம் ஆனந்த்தின் இடத்தை தட்டிப் பறித்திருக்கிறார் குகேஷ்.
இந்தியாவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது மட்டுமின்றி சர்வதேச செஸ் வீர்ர்களுக்கான பட்டியலிலும் 9-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார் குகேஷ். இதன்மூலம் ஆனந்த்துக்கு பிறகு டாப் டென் பட்டியலில் இடம்பிடித்த இந்திய வீர்ர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பலரும் இதற்காக அவரை பாராட்டி வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
யார் இந்த குகேஷ்?
விஸ்வநாதன் ஆனந்த்தை வீழ்த்தி இப்போது இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீர்ர் என்ற பெருமையை படைத்த குகேஷும் சென்னையைச் சேர்ந்த வீர்ர்தான். அம்மா பத்மா, ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட். அவரது அப்பா ரஜினிகாந்த், காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர். வேலம்மாள் பள்ளியில் படித்த குகேஷ், தனது 7 வயது முதல் பள்ளியிலேயே செஸ் பயின்று வந்துள்ளார். அங்கு அவருக்கு செஸ் பயிற்சி அளித்த பாஸ்கர் என்ற ஆசிரியர் கூறும்போது, “7 வயதில் செஸ் பயிற்சிக்கு வந்த குகேஷ், 6 மாதங்களிலேயே அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு மிகச் சிறந்த செஸ் வீர்ர் ஆகிவிட்டார். அப்போதே அவருக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருப்பது எனக்குத் தெரிந்தது” என்கிறார்.
வேலம்மாள் பள்ளியில் ஆரம்பகட்ட பயிற்சியை முடித்த குகேஷ், பின்னர் விஜயானந்த் என்ற பயிற்சியாளரிடம் அடுத்த கட்ட பயிற்சிக்காக சேர்ந்தார். அவரிடம் பயிற்சி பெற ஆரம்பித்த நாள் முதல் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துள்ளார் குகேஷ். 2015-ல் ஆசிய ஸ்கூல் செஸ் சாம்பியன்ஷிப், கேண்டிடேட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களை குகேஷ் வென்றார். 2018-ம் ஆண்டில் நடந்த ஆசிய இளையோர் செஸ் போட்டியில் குகேஷ் 5 பதக்கங்களை வெல்ல, அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியது.
தன் 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற குகேஷ், பல சர்வதேச போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டினார். இப்போது அஜர்பைஜானில் பெற்ற வெற்றியின் மூலம் உலக தரவரிசை பட்டியலில் 2755.9 ரேட்டிங் புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 9-வது இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்த், 2754.0 ரேட்டிங் புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Congratulations and keep it up
We are very proud again person from Tamil nadu achieved the No.1 spot in chess