ஷோயப் மாலிக்கும், சாய்னா மிர்சாவும் விவாகரத்து செய்யப்போவதாக உறுதியான செய்திகள் 2 நாட்களுக்கு முன் வெளியாகின. இந்நிலையில் அவர்களின் விவாகரத்துக்கு காரணம் அயிஷா ஒமர் என்ற மாடல் என்னும் செய்தி தற்போது வெளியாகி உள்ளது. தொலைக்காட்சி தொடர்களுடன் சில பாகிஸ்தானி படங்களிலும் அயிஷா ஒமர் நடித்துள்ளார்.
ஷோயப் மாலிக்கும், அயிஷா ஒமரும் கடந்த ஆண்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் நடித்த விளம்பரத்தின் ஃபோட்டோஷூட் கடந்த ஆண்டில் நடந்துள்ளது. இப்படி தொழில் நிமித்தமாக சந்தித்துக்கொண்ட நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதுவே ஷோயப் – சானியா தம்பதியின் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானிய பத்திரிகைகள் பலவும் இப்போது ஷோயப் மாலிக் – அயிஷா ஒமர் காதலைப் பற்றி துப்பறிந்து எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
அமெரிக்க தேர்தலில் சாதித்த இந்தியப் பெண்
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நபீலா சயைத் என்ற பெண் புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாண பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவரது வயது 23-தான். இதன்மூலம் இத்தேர்தலில் வெற்றிபெற்றவர்களிலேயே மிகக் குறைந்த வயதை உடையவர் என்ற சாதனையை நபீலா சையத் படைத்துள்ளார்.
இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நபீசா, ‘இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான என்னை தேர்ந்தெடுத்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சாராயம் குடித்து ‘மட்டை’யான யானைகள்
யானை ஒன்று சாராயம் குடிக்கும் காட்சியை சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் பார்த்திருப்போம். அந்த சம்பவம் இப்போது நிஜமாகவே நடந்துள்ளது, ஆனால் அந்தப் படத்தில் ஒரு யானைதான் சாராயம் குடித்தது. ஆனால் ஒடிசாவில் நடந்த நிஜ சம்பவத்தில் 24 யானைகள் சாராயம் குடிந்துள்ளன.
ஒடிசாவின் புகழ்பெற்ற போதை வஸ்துவாக ‘மஹுவா’ என்ற சாராயத்தைத்தான் இந்த யானைகள் குடித்துள்ளன. ஒடிசாவில் உள்ள கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள முந்திரிக் காட்டில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இந்த ‘மஹுவா’ சாராயத்தை காய்ச்சியுள்ளனர். சாராயத்தை தயாரித்த அவர்கள் தங்கள் வீட்டுக்கு சென்ற நேரத்தில் அந்த சாராயத்தை யானைகள் ருசிபார்த்துள்ளன.
சாராயம் குடித்த 24 யானைகளும் அங்கேயே ‘மட்டை’யாகிவிட உள்ளூர் மக்கள் இதைப்பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதிகாரிகளும் மருத்துவர்களும் எவ்வளவோ முயன்றும் மயக்கம் தெளியாத அந்த யானைகள், பின்னர் போதை தெளிந்ததும் எழுந்து காட்டுக்கு சென்றுள்ளன. இந்த சம்பவம் ஒடிசாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.