தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ் நிலப்பரப்பின் வரலாற்று பெருமையையும் பாரம்பரிய சிறப்பையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் மக்களிடையே இன்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கீழடி அகழாய்வுக்கு பின்னர் இளைய தலைமுறையினர் இதில் மிக ஆர்வமாக உள்ளார்கள். இவர்களை நோக்கி வெளியாகியுள்ளது, நிவேதிதா லூயிஸின் ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ என்னும் இந்நூல்.
வரலாறு, பாரம்பரியம், தொன்மங்கள் பற்றிய புரிதலுக்கு தொல்லியல் அகழாய்வு முடிவுகள் மிக முக்கியமானவை. அதிலும் தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்ள போதுமான பதிவுகள் இல்லாத நிலையில் அகழாய்வு முடிவுகளே அந்த வெற்றிடத்தை நிரப்பி வருகின்றன. அத்தகைய அகழாய்வு தரவுகளை அறிவியல் ஆதார அடிப்படையில் விளக்கி தமிழர்கள் வரலாற்றை, பாரம்பரியம் பற்றிய புரிதலை உருவாக்குகிறார், நிவேதிதா லூயிஸ்.
ஆதிச்சநல்லூர் தொடங்கி கொடுமணல். பையம்பள்ளி, பல்லாவரம், பொருந்தல், அரிக்கமேடு என நகர்ந்து கீழடி வரை தமிழ்நாட்டில் கடந்த 120 ஆண்டுகளில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளின் பாதையும் பயணமும் இந்நூலில் உள்ளது.
தொல்லியல் தடயங்களோடு நிற்காமல் அவற்றை சங்க இலக்கியச் சான்றுகளோடு பொருத்திக் காட்டி விளக்கும் உத்தி புதியது. ஆதிச்சநல்லூர் தாய்த் தெய்வம் பற்றி பேசும்போது பெரும்பாணாற்றுப்படையுடனும், கீழடியில் கிடைத்த தங்கச் சிப்பு பற்றி விளக்கும்போது நெடுநல்வாடையுடனும், நறுமணப் பொருளும் தமிழகமும் பற்றிப் பேசும்போது பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள குங்கிலய கலய நாயனார் புராணத்துடனும், அக்காலத்திலேயே தமிழர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி பயன்படுத்தியது பற்றி பேசும்போது பரிபாடலில் கூறப்படும் இதே செய்தியுடனும் ஒப்பிட்டுக் கூறுகிறார்.
அகழாய்வுகளில் கிடைத்த தங்கக் கட்டிகள், மோதிரங்கள், முத்திரைகளில் சங்ககால எழுத்துப் பொறிப்புகள் காணப்படுவதை சுட்டிக் காட்டுகிறார்.
புலிமான் கோம்பையில் கிடைத்த சங்ககால நடுகற்கள் மற்றும் பொருந்தல், அரிக்கமேடு அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பற்றிய செய்திகள் தமிழர்களின் வீரத்தையும் பெருமையையும் பறைசாற்றும் அரிய தகவல்கள்.
இவை தமிழர், தமிழ் நாடு எப்படி இவ்வளவு சிறப்பான பாரம்பரிய பெருமையுடன் திகழ்ந்தது, திகழ்கிறது? என்பதையெல்லாம் தெளிவாக, சுவையாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
மேலும் துறைசார் மாணவர்களும் ஆர்வலர்களும் பயனடையும் வகையில், கல்வெட்டைப் படியெடுக்கும் தொழில்நுட்பம் உட்பட மானுடவியல், தொல்லியல், கல்வெட்டியல் ஆய்வுகளில் நவீன அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு போன்றவற்றையும் விளக்கி சொல்கிறார். தொல்லியல் துறைக்கு தொண்டாற்றிய பல்வேறு ஆய்வாளர்களின் வாழ்க்கை குறிப்புகளையும் பணிகளையும் கூட ஆங்காங்கே சுவையாக பதிவு செய்கிறார். எனவே, இந்த நூலை ஒரு வரலாற்று நாவல் போலவும் படிக்க முடியும்.
நிவேதிதா லூயிஸ் ஒரு தொல்லியலாளர் அல்ல; தொல்லியல் ஆர்வலர் தான். ஆனால், துறை சார்ந்தவர்கள் எழுதியது போல் அத்தனை தெளிவு, எளிமை.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அணிந்துரை மற்றும் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், கல்வெட்டு ஆய்வாளர் ஆ. பத்மாவதி, தொல்லியல் வல்லுநர் மு. சேரன் ஆகியோர் முன்னுரை குறிப்புகள் இந்நூலைப் பற்றி மட்டுமின்றி தொல்லியல் துறை பற்றியும் நல்லதொரு அறிமுகத்தை தருகிறது.
ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை – நிவேதிதா லூயிஸ்; வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை