No menu items!

மிதக்கும் டில்லி: தாஜ்மஹாலை அச்சுறுத்தும் யமுனை வெள்ளம்!

மிதக்கும் டில்லி: தாஜ்மஹாலை அச்சுறுத்தும் யமுனை வெள்ளம்!

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக யமுனா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இந்திய தலைநகர் டில்லி வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக, டில்லியில் யமுனா ஆற்றின் கரையோரம் குடியிருந்தவர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். இதில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தப்பவில்லை. ஏன் இந்த நிலை?

வட இந்திய மாநிலங்களில் இது தென்மேற்கு பருவ மழை காலம். இதனுடன், ‘வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்’ என அழைக்கப்படும் மேற்கத்திய இடையூறு காரணமாக வடகிழக்கு ராஜஸ்தான் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வும் சேர்ந்துகொள்ள, வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல், ஜம்மு காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தாலும், யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, இந்த ஆறு பயணப் பாதையில் இருக்கும் இந்திய தலைநகரான டில்லி நகர் வெள்ளத்தில் மிதக்கிறது.

யமுனை ஆறு, உத்ரகாண்ட் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரிவில் தொடங்கி, இமாச்சலப் பிரதேசம், ஹாியானா, டில்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் வழியாக ஓடி உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. இதில் டில்லிக்கு வருவதற்கு முன்பாக உத்ரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹாியானா மாநிலங்களைக் கடக்கிறது. இம்மாநிலங்களில் பெய்த பேய் மழை நீர் யமுனை வழியாக டில்லியை கடக்க, டில்லியில் பெய்த மழையும் சேர்ந்து தான் இப்போது டில்லியை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை எட்டியுள்ளது. இதனால் யமுனை கரையோரம் வசித்த மக்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கரையோர பகுதிகளில் வசித்த மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

தொடர்ந்து தண்ணீர் அளவு அதிகரித்து வருவதால் டெல்லியின் பழைய இரும்பு பாலம் மூடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த டெல்லிக்கும் குடிநீர் வழங்கி வரும் வஜிரபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய மூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மூன்றும் மூடப்பட்டுள்ளன. இதனால், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் வாகனங்களை தவிர, டெல்லியில் கனரக வாகனங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து தர்மசாலா, சிம்லா லே போன்ற பகுதிகளுக்கு செல்ல இருந்த 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

யமுனா ஆற்றின் கரையைத் தாண்டி டில்லியின் முக்கிய சாலைகளிலும் நீர் புகுந்துள்ளதால் டில்லியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் கெஜ்ரிவால் இல்லம் அமைந்துள்ள சிவில் லைன்ஸ் பகுதி, காந்தி நினைவிடமான ராஜ்காட், டெல்லி சட்டசபை, செங்கோட்டை, டெல்லி ஐடிஓ, யமுனா பேங்க் மெட்ரோ, வசீராபாத், காஷ்மீரி கேட், ஜிடி கர்னல் ரோடு, நீம் கரோலி கௌசாலா, விஸ்வகர்மா காலனி போன்ற பகுதிகளில் குளம் போல் யமுனை ஆற்று நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் வீட்டின் தரைத் தளத்தில் இருந்து மேற்பகுதிக்கு மக்கள் மாறியுள்ளனர்.

ஆனால், யமுனை ஆறு கரை ஓரம் மட்டும்தான் இந்த நிலை. கிழக்கு டெல்லி, செங்கோட்டை பின்புறம், தென்மேற்கு டெல்லி, திஹார் ஜெயில் அருகாமை பகுதிகள் இயல்பாக உள்ளன. இந்தப் பகுதிகளில் எல்லாம் வெயில்தான் வெளுத்து வாங்குகிறது.

டெல்லியில் தற்போது மழை குறைந்துள்ள நிலையிலும், யமுனை ஆற்று வெள்ளம் காரணமாக வெள்ளத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஹரியாணாவில் ஹட்னி குண்ட் தடுப்பணையிலிருந்து அதிகளவில் திறந்து விடப்படும் தண்ணீரே காரணம் எனக் கூறப்படுகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கும்படி டெல்லி போலீஸாரிடம் முதலமைச்சர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்த பொழுது இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் சென்றது விமர்சனத்துக்குள்ளானது. இப்போது தலைநகரம் டெல்லி உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களை வரலாறு காணாத மழை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி பிரான்சு சென்றுள்ளதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பிரான்சில் சமீபத்தில் கலவரம் மூண்ட போது பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் இருந்த, பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு, உடனடியாக பாரிஸ் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. மோடி வந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? ஒரு வேளை இங்கேயேஇருந்திருந்தால், ஃப்ரான்ஸுக்குப் போகாத்தால் நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய புண்ணாக்கு கிடைக்காமல் போய்விட்டது; எல்லாம் மோடியின் மெத்தனம், சோம்பேறித்தனம் என்று பேசப்படும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...