No menu items!

வாழ்க்கையை மாற்றும் ஐந்து புத்தகங்கள் – சாரு நிவேதிதா

வாழ்க்கையை மாற்றும் ஐந்து புத்தகங்கள் – சாரு நிவேதிதா

‘சிறந்த புத்தகங்கள் நம் சொந்த அரண்மனையில் நமக்கு தெரியாத பல அறைகளை திறக்கக்கூடிய சாவி’ என்கிறார், எழுத்தாளர் காஃப்கா. அப்படி தன்னைக் கவர்ந்த, தன் வாழ்வை மாற்றிய புத்தகங்கள் பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

1. Zorba the Greek Paperback – Nikos Kazantzakis

மனிதர்கள் பிறக்கிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள், கல்யாணம் செய்துகொள்கிறார்கள், குழந்தைகளை பெற்று படிக்க வைக்கிறார்கள், அதன்பிறகு குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க வேண்டும் என திட்டமிடுகிறார்கள்… இப்படியே வாழ்க்கை முடிந்து இறந்தும் போய்விடுகிறார்கள். என்னிடம் ஒருவர் 65 வயதில், “ஒருநாள்கூட எனக்காக நான் வாழ்வில்லை. குடும்பத்துக்காகவே, மற்றவர்களுக்காகவே வாழ்ந்துவிட்டேன். சலிப்பாக இருக்கிறது, நான் சோர்ந்துவிட்டேன்’ என அலுத்துக்கொண்டார். யார் வாழ்வை கொண்டாடுகிறார்கள்? வாழ்வை கொண்டாடுகிற ஒன்றிரண்டு பேரைத்தான் இதுவரை நான் பார்த்திருக்கிறேன். யோசித்துப் பாருங்கள், நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை கதை இதுதான். ஒருநாள் கூட நாம் நமக்காக வாழவே இல்லை.

நமக்காக வாழ்வது எப்படி, வாழ்க்கையை கொண்டாடுவது எவ்வாறு என்பதை தெரிந்துகொள்ள இந்த நூல் நிச்சயம் உதவும். இந்த நாவலின் கதை சொல்லி ஒரு எழுத்தாளன். அவன் சோர்பாவுடன் ஒரு இரவு தங்குகிறான். சோர்பா ஒரு இதிகாச நாயகன், களித்தோழன், நடனமாடி பாடலிசைத்து வாழ்க்கையை கொண்டாடும் மாபெரும் கலைஞன். அவன் வழியாக வாழ்க்கையை முற்றிலும் வேறு கோணத்தில் அறிகிறான் கதை சொல்லி.  அப்போது சோர்பா சொல்லும் ஒரே வாக்கியம், “வாழ்வைக் கொண்டாடு”. அவன் அன்றைய இரவை எப்படி கொண்டாடினான் என்பதை கதை சொல்லி சொல்கிறான். அதுதான் இந்த நாவல்.

உலக புகழ்பெற்ற கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசான்சாகிஸ் எழுதிய இந்த நாவல் ‘சோர்பா எனும் கிரேக்கன்’ என்னும் பெயரில் தமிழில் வெளிவந்துள்ளது. திரைப்படமாகவும் இது வெளிவந்துள்ளது. ஆனால், படத்தை பார்ப்பதைவிட புத்தகத்தை படிப்பதுதான் சிறந்தது.

2. This Blinding Absence of Light – Tahar Ben Jelloun

என் வாழ்க்கையை மாற்றிய நூல்களில் ஒன்று இது. இதை படிப்பதற்கு முன்பு நான் ஒரு நாத்திகனாக, கடவுள் நம்பிக்கையற்றவனாக இருந்தேன். இதை படித்த பின்னர் நம்பிக்கையாளனாக மாறிவிட்டேன். இது உண்மையில் நடந்த ஒரு கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாவல். இதை எழுதிய தாஹர் பென் ஜெலோன் ஒரு மொரோக்கோ எழுத்தாளர்.

மொரோக்கோ நாட்டில் அரசனுக்கு எதிராக ராணுவ புரட்சி நடக்கிறது. புரட்சியில் ஈடுபட்ட 20 பேர்களை மன்னன் ஹஸன் நிலத்துக்கு அடியில் சிறையில் அடைத்துவிடுகிறான். 5 அடி நீளமும் மூன்று அடி அகலமும் கொண்ட சவப்பெட்டி மாதிரியான ஒரு குட்டி அறை. மொரோக்கோகாரர்கள் ஆறரை அடி உயரம் இருப்பார்கள். எனவே, சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எப்போதும் குனிந்த நிலையிலேயேதான் இருக்க வேண்டும். அந்த அறைக்குள்ளேயே ஒரு ஓரத்தில் இருக்கும் ஓட்டை வழியாக உணவுக்கான ரொட்டியை உள்ளே தள்ளிவிடுவார்கள். இன்னொரு பக்கம் இருக்கும் ஓட்டையில் மலம் ஜலம் கழித்துக்கொள்ள வேண்டும். வெளிச்சமே கிடையாது. அள்ளி மேலே பூசிக்கொள்ளும்படியான இருட்டு. எனவே, இருட்டில் கையை வைத்து தேடிதான் இந்த ஓட்டைகளை கண்டுபிடிக்க வேண்டும். தேள் போன்ற பூச்சிகள் கடித்தே இந்த 20 பேரில் சிலர் இறந்துவிடுகிறார்கள். சிலருக்கு பைத்தியம் பிடித்து பின்னர் அவர்களும் இறந்துவிடுகிறார்கள். ஆனால், இதையெல்லாம் கடந்து 4 பேர் எட்டு வருடங்கள் உயிரோடு இருந்தார்கள். இது மனித வரலாற்றிலேயே நம்ப முடியாத ஒரு விஷயமாக விஞ்ஞானிகளால் கருதப்பட்டது.

இந்த நால்வரில் ஒருவரை தாஹர் பென் ஜெலோன் பேட்டி கண்டு, எப்படி இவ்வளவு வருடங்களும் அவர்கள் உயிரை தக்கவைத்திருந்தார்கள் என்று எழுதியுள்ளார்.

தாஹர் பென் ஜெலோனுக்கு பேட்டி கொடுத்தவர் சொல்கிறார்: “எங்கள் நால்வருக்கும் குரான் மனப்பாடமாக தெரியும் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே மாறி மாறி அதை ஓதிக்கொண்டே இருந்தோம். இப்படி 24 மணி நேரமும் யாராவது ஒருவர் ஓதிக்கொண்டே இருப்போம். எத்தனை நாட்கள் ஆனது, எத்தனை வருடங்கள் போனது என்று தெரியாது.”

ஆனால், இதனிடையே குறிப்பிட்ட நான்கு வருடங்களில் மெக்காவில் என்னன்ன நடந்தது, யார் யார் வந்தார்கள் என்பதை அவர் துல்லியமாக சொல்லியுள்ளார். அவர் சொன்ன கணக்குபடி பார்த்தால் அந்த நான்கு வருடங்கள் அவர்களின் உடல்தான் அந்த குட்டி அறையில் இருந்துள்ளது. ஆன்மா மெக்காவில் இருந்திருக்கிறது.

இந்த நான்கு பேரும் கடவுள் இல்லை என்று நினைத்திருந்தால் அந்த குட்டி அறையில் மற்றவர்கள் போல் செத்து போயிருப்பார்கள். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அவர்கள் உயிர் வாழ்வதற்கான காரணத்தை அந்த நம்பிக்கையே தந்துள்ளது.

இந்த நூல் ‘நிழலற்ற பெருவெளி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்துள்ளது.

3. Dictionary of the Khazars – Milorad Pavic

லெமுரியா கண்டம் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து எழுதினால் எப்படியிருக்கும்? அது மாதிரியான ஒரு நாவல் இது. சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று. ‘நியூயார்க் டைம்ஸ்’ 1988ஆம் வருடத்தின் சிறந்த நூல்களுள் ஒன்று என இதைக் குறிப்பிட்டுள்ளது.

அகராதி என்பது கசார்களின் கற்பனையான அறிவுப் புத்தகம். இவர்கள் ஏழு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையே ட்ரான்சில்வேனியாவைத் தாண்டியதொரு நிலப்பரப்பில் தழைத்திருந்த இனம். கட்டுப்பாடற்ற மூன்று மதிநுட்பமுடையவர்கள், நச்சு மையினால் அச்சிடப்பட்ட புத்தகம், முகம் பார்க்கும் கண்ணாடிகளால் நிகழும் தற்கொலை, பெரும்புனைவாய் ஓர் இளவரசி, ஒருவரின் கனவுக்குள் உட்புகுந்து செல்லக்கூடிய குறிப்பிட்டதொரு இனத்தின் பூசாரிகள், இறந்துவிட்டவர்களுக்கும் இருப்பவர்களுக்குமிடையே உருவாகும் காதல் என இன்னும் பலவற்றை உள்ளடக்கியது இப்புதினம்.

‘கசார்களின் அகராதி’ என்னும் பெயரில் இந்த நூல் தமிழில் வெளிவந்துள்ளது.

4. புதுமைப்பித்தன் கதைகள்

பாரதிக்குப் பிறகு தமிழையும் தமிழ் சிந்தனையையும் நவீனத்துவத்தை நோக்கி எடுத்துக்கொண்டு போனவர், புதுமைப்பித்தன். ஒருவகையில் பாரதியைவிட முக்கியமான பங்களிப்பை தமிழுக்கு செய்துள்ளவர். ஆனால், இவர் வாழ்ந்த காலகட்டத்தில் மதிக்கப்படவில்லை. ‘புதுமைப்பித்தனுக்கு எழுதத் தெரியவில்லை’ என்று ராஜாஜி இவரைப் பற்றி மிக மட்டமாக எழுதியுள்ளார்.

இதுதான் தமிழ் சமூகத்தின் பிரச்சினை. பாரதியையே அவர் வாழ்ந்த காலத்தில் நாம் மதிக்கவில்லையே. நோபல் பரிசு வாங்கியிருக்க வேண்டியவர். அவரை பட்டினி போட்டு கொன்றுவிட்டோம். ஆனால், அதே காலகட்டத்தில் வாழ்ந்த தாகூரை அவரது வங்காள சமூகம் கொண்டாடியது. அதனால், அவர் நோபல் பரிசு பெற்றார். ‘தாகூர் இறந்தபோது மொத்த வங்காளமும் கல்கத்தாவை நோக்கி சென்றது; வங்காளத்தின் எல்லா ரயில்களும் சாந்தி நிகேதனை நோக்கி சென்றன’ என அப்போது பத்திரிகையில் எழுதியிருக்கிறான். ஆனால், பாரதி இறந்தபோது 8 பேர்தான் வந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் அசோகமித்திரன் இறந்தபோது அது 20 பேர் ஆனது. அதுவும் அவரது உறவினர்களும் நண்பர்களும்தான். எனது ஆசான் அசோகமித்திரன், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு மேதை. அவருக்கே இதுதான் நிலை.

இறப்பதற்கு முதல் நாள், 40 வயதில், உடல்நலமில்லாத நிலையில் இருந்த புதுமைப்பித்தன் இன்னொருவர் உதவியுடன் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், “இந்த தமிழ் சமூகத்துக்காகவும் தமிழ் மொழிக்காவும் என் வாழ்க்கை முழுவதையும் நான் செலவழித்திருக்கிறேன். சய ரோகத்தால் மருந்து வாங்க காசில்லை. நணபர்கள், சக எழுத்தாளார்கள் பண உதவி செய்யவேண்டும்” என்று சொல்கிறார்; மறுநாள் இறந்துவிடுகிறார். நாற்பது வயது சாகிற வயசா?

இப்படி நம்முடைய ஆசான்களை பட்டினி போட்டு கொன்ற சமூகம் நம்முடையது. மொழி என்கிறோம், அடையாளம் என்கிறோம், தமிழ் பெருமை பேசுகிறோம். எது ஐயாயிரம் ஆண்டுகளாக தமிழை இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? ‘தொல்காப்பியம்’ என்கிறோமே அதில் உள்ள புலவர்கள் எல்லாம் யார்? வள்ளுவனும் கபிலனும் கம்பனும் இளங்கோவும் எழுத்தாளர்கள்தானே. அப்புறம் எழுத்தாளனை பட்டினி போட்டு கொன்றால் என்ன அர்த்தம்? அதற்கு பிராயசித்தம் செய்யவேண்டும் என்றால் புதுமைப்பித்தனை படியுங்கள்.

5. பழுப்பு நிறப் பக்கங்கள் – சாரு நிவேதிதா

சமகால தமிழ் இலக்கியத்துக்கு யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றிய ஒரு அறிமுக நூல் இது. மூன்று தொகுதிகள் கொண்டது. கு.ப. ராஜகோபாலன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், சார்வாகன், ந. முத்துசாமி, தஞ்சை பிரகாஷ்… இவர்களைப் போன்ற பலர் இந்த நூலில் வருகிறார்கள். இவர்களது கதைகளில் இருந்தும் சிலதை சேர்த்து, ஏன் இவர்கள் அனைவரும் அற்புதமான எழுத்தாளர்கள் என நிருவியிருக்கிறேன். இது நான் எழுதிய புத்தகமாக இருந்தாலும், என்னை பாதித்த முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிய, அவர்களுடைய முக்கிய படைப்புகளை கொண்ட புத்தகம் என்பதால் சொல்கிறேன். மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி மாதிரியும் இருக்கும்.

இங்கே நான் குறிப்பிட்ட புத்தகங்களை எல்லாம் படித்தால், படிப்பதற்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்களோ, படித்த பின்னர் அப்படி இருக்க மாட்டீர்கள் என்பது உறுதி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...