No menu items!

ஃபேம் கேம் – ஒரு நடிகையின் கதை

ஃபேம் கேம் – ஒரு நடிகையின் கதை

ஒரு நடிகரின் வாழ்க்கையானது எப்போதும் சுவாரஸ்யமாகவும், கவர்ச்சிகரகமாகவும் இருக்கும் என்பது பொதுக் கருத்து. ஆனால் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை எத்தகையது என்பதை பலமுறை பல செய்திகளில் நம்மால் பார்க்க இயலும். அப்படி அனாமிகா எனும் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை விவரிக்க எடுக்கப்பட்ட வெப் சீரிஸ்தான் ‘ஃபேம் கேம்’. மொத்தம் 6 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் சுமார் 45 நிமிடங்கள் ஓடுகிறது.

பெரும்பாலும் நாம் கேட்ட, படித்த கதைகளில் பொருளாதார பிரச்சினை காரணமாக, அம்மா, அப்பா நடிக்க விருப்பமில்லாத மகளை வற்புறுத்தி நடிக்க வைத்து குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பார்கள். அதைத்தான் இங்கு அனாமிகாவின் அம்மாவும் செய்கிறார்.

அனாமிகா உடன் நடிக்கும் மனீஷை காதலிக்க, இதில் சற்றும் விருப்பமில்லாத அவரின் அம்மா, தன் தம்பிக்கே மணமுடித்து வைத்து சொத்து கையை விட்டு போகாதவாறு பார்த்துக் கொள்கிறார். கணவனானதும் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார் நிகில்.

அனாமிகாவின் அம்மாவும், கணவனும் அவர் சம்பாதிக்கும் சொத்துகளை எல்லாம் அவர்கள் விருப்பப்படி செலவு செய்கிறார்கள். அனாமிகாவிற்கு இரண்டு குழந்தைகள். அவி தான் யார் என்று சொல்ல முடியாமல் மனக்குழப்பத்தில் தவிக்கும் ஒரு gay. அமு அம்மாவைப் போலவே பேரும், புகழும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அனாமிகாவைப் போல தான் அழகாகவும், கவர்ச்சியாகவும் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மைக் கொண்டவள்.

முதல் அத்தியாயத்தில் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு பிறகு அனாமிகா காணாமல் போகிறார். அவருக்கு என்ன ஆனது? எங்கு இருக்கிறார்? அவரைக் கண்டுபிடித்தார்களா இல்லையா? என்பதை நேரியல் அல்லாத திரைக்கதையில் சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட 3 மணி நேரத்தில் இந்தக் கதையை அழகாகவும் ஆழமாகவும் சொல்லி இருந்தால் நன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டா என்றால்… நிச்சயமாக இல்லை. ஒரு கதையை 10 மணி நேரம் கூட சொல்லலாம். ஆனால் அதன் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.

மோசமான திரைக்கதையும், வசனங்களும் கொண்டதாக இத்தொடர் உள்ளது. காவலதிகாரியாக வரும் சோபா மிடுக்காக இருப்பதற்கேற்ப ஒரு காட்சியோ வசனமோ உதவியாக இல்லை. கிட்டத்தட்ட 4 அத்தியாயங்களுக்குப் பிறகு, அனாமிகா யார்? நிஜத்தில் எப்படிப்பட்டவர் என்று கேட்கும் பொழுது… நமக்கெல்லாம் “ஓ நீ இப்பதான் இங்கயே வர்ரியா” என்று கேட்கத் தோன்றுகிறது. கதையில் அடுத்து என்ன நிகழப் போகிறதென்று ஏதெனும் ஒரு காட்சி மூலமாகவோ, ஒரு நபர் மூலமாகவோ நம்மால் எளிதில் கணித்துவிட முடிவதால் சுவாரஸ்யம் பூஜியமாகிவிடுகிறது.

இவ்வளவு பேர் நடித்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் பாலிவுட் தொடரில் எதுவுமே நன்றாக இல்லையா என்று கேட்டால், ஒரு விஷயம் இருக்கிறது. இத்தொடரில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மகனாக வரும் அவி, விடலைப் பருவத்தில் தான் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதாகட்டும், அந்தத் தவிப்பை கோபமாகவும்,வெறுப்பாகவும் வெளிக்காட்டுவது அருமை. மகள் அமு, அப்பாவியாக இருந்து வில்லி போல மாறும் நடிப்பும் நன்று.

அனாமிகாவின் காதலனாக வரும் மனீஷ் மிகவும் கச்சிதமாக அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அனாமிகாவும் தொடர் முழுக்க மென்சோக முகத்துடன் தன் திறமைக்கான கதை இதுவல்லவே என்பது போல் நேர்த்தியாக நடித்திருக்கிறார். இதர கதாபாத்திரங்களும் அவர்களின் பங்களிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.

மாதுரி போன்ற ஒரு நடிகையின் திறமையை இன்னும் நன்றாகவே பயன்படுத்தியிருக்கலாம். தொடரில் சின்னதாக ஒரு பாட்டுக்கு நடனமாடும் காட்சி வருகிறது. அதை ஒரு முழு நீளப் பாட்டாக வைத்திருந்தால் மாதுரி எனும் நடன மங்கையை ரசிக்கும் ஒரு வாய்ப்பாவது இத்தொடரில் கிட்டியிருக்கும் என்பதே என் வருத்தம். இந்த சீசனே சலிப்புத்தட்டி விட்டதால், அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பு என்பது துளி கூட இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...